Skip to main content

கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்! பற்றி எரியும் கிராமம்! 

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Thiruvannamalai muthalaman temple issue

 

திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் கிராமத்திலுள்ள முத்தாலம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்களை பிற சாதியினர் அனுமதிப்பதில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் அமைப்புகள் போராட்டம் அறிவித்தன. ஜனவரி 30-ஆம் தேதி பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் நடத்தினார். பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

 

கோவில் நுழைவுக்குப் பின்பு பெட்டிக்கடை எரிப்பு, கரும்புத் தோட்டம் எரிப்பு, டிராக்டர் எரிப்பு என மாறி, மாறி இரு தரப்பும் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். பொதுவுடைமை இயக்கங்கள் மற்றும் தலித் அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினர்.

 

அந்த கிராமத்தில் என்ன நடக்கிறது என அறிய நேரில் சென்றோம். கிராம எல்லையிலேயே காவலர்கள் பாதுகாப்புக்கு அமர்ந்து கிராமத்துக்குள் யார் செல்கிறார்கள் என கண்காணித்தனர். கிராமத்துக்குள் பள்ளி, கோவில், தெருக்கள் என அங்கங்கே போலீஸார் அமர்ந்திருந்தனர். காய்கறி வண்டி உட்பட எது ஊருக்குள் வந்தாலும் வண்டி எண், பெயர், செல்போன் என பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு தெருவையும் சி.சி.டி.வி. கேமராக்கள் கண்காணித்துக் கொண்டிருந்தன.

 

Thiruvannamalai muthalaman temple issue

 

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முனியம்மாள் நம்மிடம், “கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைஞ்சிட்டிங்கள்ல, இனிமே மேட்டுக்குடிகளின் கடைகள்ல எந்தப் பொருளும் தர்றதில்லை, பால் வாங்கறதில்லை, வாங்கின கடனைத் திருப்பித் தாங்கன்னு நெருக்கடி தர்றாங்க. பஸ் ஏறப்போனால், ‘இங்கயெல்லாம் வந்து ஏறாதீங்க'ன்னு சொல்றாங்க. நாங்க வேலைக்குப் போய் இரண்டு மாசமாச்சி. இப்படி எங்களைப் பழி வாங்கினா என்னங்க அர்த்தம்?” எனக் கேட்டார்.

 

டாக்டர் அம்பேத்கர் எழுச்சிப் படையைச் சேர்ந்த முத்துவேல், “கோவில் நுழைவு பிரச்சனைக்கு முன்னாடி ஊராட்சி மன்றம் சார்பா, தூய்மைப் பணியாளர்கள் தெருத்தெருவா வந்து குப்பை அள்ளி சுத்தம் செய்வாங்க. இப்போ காலனிப் பகுதிக்கு மேட்டுக்குடி பெண்கள் வர்றதில்லை. ஆனா அவுங்க பகுதிக்கு எங்க காலனி பெண்கள் போய் குப்பை அள்றாங்க. ஊர் அமைதியா பழைய மாதிரி இருக்கணும்னா கோவிலுக்குள் வந்தது தப்புன்னு மன்னிப்பு கேளுங்க, கோவிலுக்குள் நுழைஞ்சதுக்கு தண்டத் தொகை கட்டுங்கன்னு கேட்கறாங்க” என்றார்.

 

பா.ஜ.க. பட்டியலினப் பிரிவு மாவட்டச் செயலாளரும் அம்பேத்கர் புரட்சிப் படையின் நிறுவன தலைவருமான குபேந்திரன், “இந்த ஊரில் பட்டியலின மக்களான நாங்கள் 400 குடும்பங்கள் இருக்கோம். அகமுடையார், உடையார், வன்னியர், ரெட்டியார், செட்டியார் என 10 சாதிகளைச் சேர்ந்த 1500 குடும்பங்கள் இருக்கு. அந்த சாதிகளின் முக்கிய தலைக் கட்டுகள் ஒரு திருமண மண்டபத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் அ.தி.மு.க. நல்லதம்பி தலைமையில் கூட்டம் போட்டு, காலனிக்காரங்களுக்கு நம்மாளுங்க கடைகள்ல பொருட்கள் தரக்கூடாது, பால் வாங்கக் கூடாது, வேலைக்கு ஆட்களை அழைக்கக்கூடாதுன்னு தீர்மானம் போட்டு செயல்படுத்திக்கிட்டு வர்றாங்க. இதுபற்றி மனித உரிமை ஆணையம், எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு புகார் அனுப்பினேன். நாங்க அப்படியென்ன தப்பு செய்துட்டோம். சட்டப்படி யார் வேண்டுமானாலும் அறநிலையத் துறை கோவிலுக்குள் போகலாம். அதுக்கு எங்களை சமூக விலக்கு செய்வது எந்த விதத்தில் சரி?” என கேள்வி எழுப்பினார்.

 

மார்க்சிஸ்ட் முருகன் நம்மிடம், “இதுக்கெல்லாம் காரணம் நீதான் என என்னை ஒருவர் சாதி பெயரைச் சொல்லி மிரட்டுகிறார். என் அக்காவின் கடையை எரித்துள்ளார்கள். புகார் தந்தால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் இங்கயேவா காலம் முழுக்க இருந்துடும், அவுங்க போகட்டும் பார்த்துக்கறோம் அப்படின்னு மிரட்டறாங்க. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாதியக் குற்றவாளிகளுக்கு பயம் வரும். ஆனால் அதனை காவல்துறை செய்ய மறுக்கிறது” என்றார்.

 

பட்டியலின மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து பிற சாதியினர் தரப்பில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் நல்ல தம்பியிடம் கேட்டபோது, “முதல் ஒரு வாரம் நம்ம கோவிலுக்குள் வந்துட்டாங்களேன்னு பெண்கள் கோபமா இருந்தாங்க. அதுக்கப்பறம் நார்மலாகிடுச்சி. இது நகரமில்ல, கிராமம். இங்க மாற்றத்தைக் கொண்டு வரணும்னா படிப்படியாதான் கொண்டு வரணும். அவுங்க கோவிலுக்குள்ள வர்றதை யாரும் எதிர்க்கல. யாரையும் ஒதுக்கி வைக்கல. வந்து பொருள் கேட்டால் தந்துக்கிட்டுதான் இருக்காங்க. என் கடையிலயே வந்து அரிசி சிப்பம், சிமெண்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு போறாங்க. கரும்பு வெட்ட அட்வான்ஸ் தந்திருக்கு. கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்கிறோம், அவுங்க வைக்கறாங்க. கோவில் நுழைவின்போது சில மனக்கசப்புகள் இருந்தது உண்மை. ஆனால் அவுங்க சொல்வதுபோல் இப்போது இல்லை” என்றார்.

 

ஊராட்சிமன்றத் தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த லோகேஷ்வரியின் கணவர் ஏழுமலையிடம் பேசியபோது, “நியாயமா பேசணும்னா திட்டமிட்டே பிரச்சனைகளை உருவாக்கறாங்க. பள்ளி மேலாண்மைக் குழுவில் உருவான தகராறு. இதனை அப்போதே தீர்க்க வேண்டிய அதிகாரிகள் தீர்க்கவில்லை. வருவாய்த்துறை, காவல்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தங்கள் சாதிக்கு ஆதரவாக கோவிலுக்குள் நுழையும் உரிமையைக் கேளுங்கள் என தூண்டி விட்டார்கள். உயரதிகாரிகள், இதன் பின்னணி தெரியாமல் பிற சாதி மக்களிடம் எடுத்துச்சொல்லி பேசி, சம்மதிக்க வைத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கலாம். ஒரு பெட்டிக் கடை எரிஞ்சிருக்கு. எரிச்சது யார்னே தெரியல. ஆனால் மேட்டுக்குடிதான் செய்தாங்கன்னு புகார் சொல்லியிருக்காங்க. பிற சாதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சுரேஷின் கரும்புத் தோட்டம், எஸ்.ஐ. சிவக்குமாரின் டிராக்டர் எரிஞ்சது. அவுங்க பட்டியலினத்தார் எரிச்சாங்கன்னு புகார் தரல. எரிஞ்சு போச்சுன்னு தந்திருக்காங்க. போலீஸ்தானே சொல்லணும் இன்னார் எரிச்சாங்கன்னு. நாமளா முடிவு செய்துக்கிட்டா எப்படி?. ஊர்ப் பகுதியில் பள்ளியிருந்தால் நம்ம பொண்ணுங்கள கற்பழிச்சி கொலை செய்துடுவாங்கன்னு தவறான தகவல்களை சொல்லி பயமுறுத்தி எங்க மக்களை தூண்டிவிடறாங்க” என்றார்.

 

Thiruvannamalai muthalaman temple issue

 

மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயனை சந்தித்துப் பேசிய மூத்த வழக்கறிஞர் ப.ப.மோகன் செய்தியாளர்களிடம், “பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதற்கு முதலில் தமிழ்நாடு அரசாங்கத்தைப் பாராட்டுகிறேன். பட்டியலினத்தைச் சேர்ந்த இந்திரா என்கிற பெண்மணியின் கடையை எரித்துள்ளார்கள். ஆசிரியர் முருகனை சாதி பெயரைச் சொல்லி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இந்த புகாரின் மீது 45 நாட்களுக்குப் பின் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. இது வன்கொடுமை சட்டப்படி தவறு. நீதிமன்றத்துக்கு செல்லும் முன் காவல்துறை அதிகாரி என்ன சொல்கிறார் என அறியவே வந்தோம். ஏ.டி.எம். கொள்ளை குற்றவாளிகளைப் பிடிப்பதில் இருந்தோம், இந்த புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்” என்றார்.

 

இதற்கிடையில் தாங்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாக உணர்ந்த பட்டியிலின சமூகத்தினர் சிலர், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக தனியார் பள்ளிப் பேருந்தை மறித்துள்ளனர். அதன் ஓட்டுநர், குழந்தைகள் தேர்வெழுதச் சென்று கொண்டிருப்பதாகக் கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை. ஓட்டுநர் 100-க்கு அழைத்துச் சொல்ல, பின்பு போலீசார் வந்து பேருந்தை மறித்தவர்களில் இருவரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

அன்று இரவு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு கும்பல் தண்டராம்பட்டு காவல் நிலையத்துக்குள் நுழைந்து மேஜை, நாற்காலிகளைத் தள்ளிவிட்டு சச்சரவில் ஈடுபட... அது காவல்நிலைய சி.சி.டி.வி.யிலும் பதிவாகியுள்ளது. இதையடுத்து காவல்துறை தனியார் பள்ளிப் பேருந்து மறியல், காவல் நிலையத்தில் சச்சரவு எனும் இரு பிரிவில் 15 பேர் மீது வழக்குப் பதிந்து, 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.