Thiruvannamalai Anbu Theater

Advertisment

திருவண்ணாமலையில் புகழ்பெற்றது அன்பு திரையரங்கம். அண்ணாமலையார் கோவிலுக்கு அருகில் மாடவீதியில் இருப்பதால் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் மட்டுமல்ல வெளிமாவட்ட மக்களுக்கும் நன்றாகத்தெரிந்த திரையரங்கமாக இருந்து வந்தது.

திருவண்ணாமலையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த குப்புசாமி செட்டியார் இத்திரையரங்கத்தைக் கட்டினார். 2.3.1966 ஆம் தேதி அப்போதைய திருவண்ணாமலை நகரமன்றத்தலைவர் விஜயராஜ் தலைமையில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த பூவராகவன் திறந்து வைத்தார். அப்போது திரையுலக சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் தான் முதல் திரைப்படமாக இங்கு திரையிடப்பட்டது.

கடந்த 57 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன. இயக்குநர் கே.எஸ். பாலகிருஷ்ணனின் கற்பகம் தவிர அவரின் அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. கோலிவுட்டில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற அம்மன்கோவில் கிழக்காலே, காலம் மாறிப்போச்சு, கரகாட்டக்காரன் போன்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டன. குப்புசாமிக்கு பின்னர் அவரது மகன் பெருமாள் செட்டியார் நிர்வாகத்தை எடுத்து நடத்தினார். அவருக்கு பின்னர் அவரது மகன்களில் ஒருவரான பாலாஜி இந்த திரையரங்கத்தை நடத்தி வந்தார்.

Advertisment

Thiruvannamalai Anbu Theater

நம்மிடம் பேசிய திரையரங்க உரிமையாளர்களில் ஒருவரான பாலாஜி, “எங்கள் தாத்தா காலத்தில் இருந்து திரையரங்கில் இருக்கிறேன். கடந்த 57 ஆண்டுகளாக இயங்கிய இந்த திரையரங்கின் நிர்வாகத்தை எனது தாத்தா, அப்பாவுக்கு பிறகு நான் நடத்தி வந்தேன். அம்மன் கோவில் கிழக்காலே படம் ஓடிக்கொண்டு இருந்தபோது ஒருநாள் இரவு அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பிருந்த 16 கால் மண்டபம் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே காட்சியை ரத்து செய்துவிட்டோம். ரசிகர்கள் ஓடிப்போய் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான அன்னக்கிளி படம் வேறு தியேட்டரில் போட்டாங்க ஓடல. நான் வாங்கிப் போட்டன் நல்லாப்போச்சி. இப்படி பல அனுபவங்கள் இருக்கு. அப்போதெல்லாம் 100 நாள் கடந்து ஒரு படம் ஓடுதுன்னா நடிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து ரசிகர்களை சந்திப்பாங்க. அப்படி கரகாட்டக்காரன் படத்தின்போது, சினிமா நட்சத்திரங்களான ராமராஜன், கனகா, காந்திமதி, வேறு படங்களின் வெற்றி விழாவுக்காக நடிகைகள் நளினி, இயக்குநர்கள் சந்தான பாரதி, கங்கை அமரன் போன்ற பலர் வந்திருக்காங்க” என்றார்.

Advertisment

Thiruvannamalai Anbu Theater

திருவண்ணாமலையில் அன்பு தியேட்டர் தொடங்கிய காலத்தில் இருந்த பரணி தியேட்டர், மீனாட்சி தியேட்டர், புகழ் தியேட்டர், விபிசி-வி.என்.சி தியேட்டர் அதன்பின்னர் உருவான சில தியேட்டர்கள் மூடப்பட்டு அவை திருமண மண்டபங்களாக, காம்ப்ளஸ்களாக, வீட்டு மனைகளாக உருவான நிலையில் மாற்றமடையாமல் இருந்தது இந்த தியேட்டர்.

இன்றைய டெக்னாலஜிக்கு ஏற்றாற்போல் மாறிய தியேட்டர்கள் கொள்ளை லாபத்தில் டிக்கட் விலை வைத்து ரசிகர்களை சுரண்டியது. இன்றைய உச்ச நட்சத்திரம் முதல் குட்டி ஸ்டார்கள் வரை பலரின் படங்கள் இங்கு திரையிடப்பட்டாலும் அதிகப்பட்சம் டிக்கட் கட்டணம் 100 ரூபாய் என இருந்ததோடு மல்டிலெவல் தியேட்டர்களில் சொல்வதுபோல் ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் ஆகியவற்றை எடுத்து வரக்கூடாது எனச் சொல்லாத, சோதனை செய்து கெடுபிடி காட்டாத தியேட்டராக இருந்ததால் ஏழை மக்களுக்கு ஏற்ற திரையரங்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் திரையிடப்பட்டு தொடங்கிய பயணம் 57வது வருடத்தோடு நிர்வாகத்தின் தனிப்பட்ட காரணங்களால் 2023 நவம்பர் 1 ஆம் தேதி இரவு லியோ படத்தோடு தனது திரையிடலை நிறுத்திக்கொண்டது அன்பு திரையரங்கம்.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்