Skip to main content

ஆண்கள் காது வளர்க்கும் அதிசய கிராமம்..!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
thiruppathur

 

ஒரு சில கிராமங்களில், நேர்த்திக்கடனுக்காக பூஜை செய்யும் சாமியாடிகள் ஒன்றிரண்டு பேர் காது வளர்ப்பார்கள். ஆனால், தாங்கள் வணங்கும் தெய்வத்திற்காக, ஒரு கிராமமே காது வளர்க்கும் வினோதத்தினை  எஸ்.கோவில்பட்டியில் காணலாம். சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள எஸ்.கோவில்பட்டி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த குக்கிராமம்.
 

சுமார் 650 தலைக்கட்டுகளைக் கொண்ட இந்த எஸ்.கோவில்பட்டி கிராமத்திற்குள் நுழைந்தால், எதிர்படும் அத்தனை ஆண்களும் வயது வித்தியாசமின்றி "செகுட்டு ஐயனாருக்காக" (செவிட்டு ஐயனார்) காதுகளை வளர்த்திருந்தனர். ஊரின் நடுவே ஒரு குடி தண்ணீர் குளம். வாகனம் செல்வதற்கான பாதை அதற்கு மேல் இல்லை என அறிவுறுத்தியது அறிவிப்புப் பலகை." இங்க மிதியடியை விட்டுட்டு இறங்கி போனால், அந்த மரத்திற்கு அப்பால் இருக்கிறது கோவில்."  என்று வழிக்காட்டினார் எதிர்ப்பட்ட பெரியவர் ஒருவர். அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்திருக்கிறது செகுட்டு ஐயனார் கோவில். செடி, கொடிகளும், மரங்களும் மண்டி கிடக்கும் இந்த கோயில் அருகிலுள்ள கிராம மக்களால் 'செடிக்கோயில்' என அழைக்கப்படுவதும் உண்டு. பொதுவாக கிராமங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் தான் ஐயனார் கோவில் இருப்பதுண்டு. இங்கு, ஊருக்கு நடுவில் அமைந்திருக்கிறது இந்த கோவில்.
 

வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த விவசாயி முதல், களத்து மேட்டில் கதையளந்துக் கொண்டிருந்த அனைத்து ஆண்களும் காதுகளை துளையிட்டு, நீளவாக்கில் வளர்த்திருந்தனர். இதுப் பற்றி ஊர் மக்களிடம் பேசினோம். " " தெற்குப் பக்கமிருந்து மான் தேடி வந்தப்ப, எங்களுடைய முன்னோர் ஒய்யப்பன் கண்ணில் பட்டது தான் இந்த ஐயனார். ஒரு பஞ்சாயத்து விவகாரத்தில்,"கண்ணு குருடு, காது செவிடா" என இந்த ஐயனாரைப் பார்த்து கேட்டாக. கோபத்துல, ஐயனாரு சாபம் விட, மக்களுக்கு காதும் கேட்கல..! கண்ணும் கேட்கல..! தப்பை ஒத்துக்கிட்டு அவரிடம் கையை கட்டி நிக்க, ஐயனாரு சாபத்தை நிவர்த்தி செஞ்சு ஆசிர்வதிச்சாரு. அவருக்கு பிடிக்கும் என அன்னையிலிருந்து எங்க முன்னோர்கள் காது வளர்க்க ஆரம்பிச்சு, ஐயனாருக்கு சேவை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த ஊரில் காது வளர்க்காதவங்க யாரையும் பார்க்க முடியாது. அது போல்., இங்கு பிறக்கிற எந்த ஆண்குழந்தைக்கும் பொதுவான பேரு ஒய்யப்பன் தான். அதுக்கப்புறம் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, எந்த பேரு வேண்டுமானாலும் வைச்சுக்கலாம். ஆனால்.  ஆம்பிளைக எல்லோரும் வந்து கட்டாயம் இங்க வந்து பூஜை வைக்கனும். புரவி தூக்கனும்." என செகுட்டு ஐயனாரின் வரலாறையும், காது வளர்க்கும் கதையைக் கூறினார் தலைமைப் பூசாரி.

 

thiruppathur


 

ஆண்கள் அத்தனை பேரும் காது வளர்க்க,  " முன்பெல்லாம் நாங்களும் ஐயனுக்காகக் காது வளர்ப்போம். தோடு போட முடியாது. அதுக்குப் பதிலாக காதின் மேற்புறம் புல்லாக்குப் போடுவோம். பொண்ணுகள் இங்க இருந்துட்டால் பரவாயில்லை. வெளியில் கட்டிக்கொடுத்தால் சங்கடம் தானே.! அதனால், இப்ப பெண் பிள்ளைகளுக்குக் காது வளர்ப்பதில்லை. பழைய ஆளுக மட்டும் தான் காது வளர்த்திருப்போம்." என்கிறார்கள் அவ்வூர் பெண்கள்.
 

"ஆண்குழந்தைப் பிறந்த ஆறாவது மாசத்திலேயே காது குத்திடுவோம். முதலில் சின்ன இரும்பு வளையத்தை மாட்டிவிடுவோம். அப்புறம் 6 மாசம் கழிச்சு ஈயத்திலான உலோக வளையத்தை மாட்டிவிடுவோம். அது எடை தாங்காமல், காதை கீழே இழுத்து கொண்டு வந்து விட்டுவிடும். குறைந்தப் பட்சம் 1 வருஷமாவது காதில் ஈய வளையம் இருக்கனும். அதற்கப்புறம் எங்களுக்கு இருக்கிற மாதிரி வந்துவிடும். அப்பல்லாம், நாங்க காதில் போட்டுகிட்டது இரும்பு வளையங்களை." எப்படி காது வளர்ப்பது என நம்மிடம் விளக்கினார்கள் ஊர்க்காரர்கள் .
 

"நாங்க இப்படி மாறிய பிறகு அந்த ஐயனும் எங்களுக்கு எந்த குறையையும் வைக்கலை." என்கின்றனர் ஊர்க்காரர்கள்.நம்பிக்கைத் தானே வாழ்க்கையின் ஆதாரம்.!