ADVERTISEMENT

மக்களுக்காக பேசுவது அரசியல் என்றால் அதை தொடர்ந்து செய்வோம் - திருமுருகன் காந்தி!

07:11 PM Dec 05, 2019 | suthakar@nakkh…

சில தினங்களுக்கு முன்பு மேட்டுபாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் போதிய நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியபோது அதில் காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

மேட்டுபாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக 15 அடி உயரமுள்ள வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை நீங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதி மக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இந்த புகார் குறித்து யாரும் முறையாக விசாரணையோ, ஆய்வோ செய்யவில்லை. அவ்வாறு இந்த புகார் குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தார்கள் என்றால், இந்த கோரவிபத்து நடக்காமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களை அவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த சுவர் கட்டப்பட்டுள்ளது. இல்லையென்றால் இவ்வளவு உயரத்துக்கு சுவர் கட்ட வேண்டிய அவசியம் என்ன. அவர்கள் என்ன சிறைச்சாலையா கட்டுகிறார்கள். வீட்டின்மற்ற மூன்று பகுதிகளில் நார்மலான அளவுகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, ஒரு பகுதியில் மட்டும் இத்தகை சுவர் கட்ட வேண்டிய அவசியம் ஏன் எழுகிறது. இத்தகைய கேள்விகள் எல்லாம் இந்த உயிரிழப்புக்களுக்கு பிறகு அனைவருக்கும் எழுகிறது. ஆனால் பதில் சொல்ல வேண்டியவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் படக் கூடாது என்ற அடிப்படையில் இது கட்டப்பட்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில் இது தீண்டாமைச் சுவராகவே கருத வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த விஷயத்தில் அதிக மெத்தனமாக நடந்துகொண்டுள்ளது. ஒரு குடிசையை அகற்ற வேண்டும் என்றால் அதிகாரிகள், காவல்துறையினர்கள், மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கும் போது, இந்த சுவர் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது அலட்சியத்தால் நடைபெற்ற மரணம் என்றுதானே பார்க்க வேண்டி இருக்கிறது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இதுதொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழக்கப்படும் என்றும், தகுதியான நபருக்கு வேலை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டுள்ளார். இந்த நடவடிக்கை சரியாக செல்வதாக நீங்கள் நம்பவில்லையா? இதுதொடர்பாக அங்கே போராட்டம் நடைபெற்றுள்ளது. அது சரியான ஒன்றாக கருதுகிறீர்களா?

இந்த சம்பவத்தில் பல உயிர்கள் பறிபோய் உள்ளது. கிட்டதட்ட 17 உயிர்களை நாம் இழந்துள்ளோம். இது பெரிய இழப்பு இல்லையா? இது அனைத்தும் அரசாங்கத்தின் கையாலாகதத்தனத்தினால் நடந்தது. புகார் கொடுத்த உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிர்பலிகளை தவிர்த்திருக்கலாம். அவர்களுக்கான இழப்பீட்டு தொகையும் மிக குறைவாக வழங்கப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். உயிரிழந்து இன்னல்படும் அவர்களின் குடும்பத்தார்கள் இழப்பீடு கேட்பது தவறான ஒன்றா? இதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தலாமா? இதுதான் ஜனநாய முறையா. இவர்களிடம் போராட்டம் செய்யாமல் தங்களுக்கான உரிமையை பெற முடியுமா? வீடு இழந்தவர்கள் போராட்டம் செய்த போது காவல்துறையினரின் நடவடிக்கை சரியாக இருந்ததா? பாதிக்கப்பட்ட ஒருவரை தரையில் போட்டு ஒரு காவலர் மிதிக்கிறார். இது சரியான அணுகுமுறை என்று அவர்கள் நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. சாதியை பார்த்து அதற்கேற்ப அனைவரும் நடந்துகொள்வது வெட்கக்கேடானது. இதை பல சமயங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு விபத்தை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள் என்று மற்றொரு தரப்பினர் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

விபத்துக்கு நஷ்டஈடு கேட்கிறார்கள். இதில் என்ன அரசியல் இருக்கிறது. மக்களுக்காக பேசுவதுதான் அரசியல். அப்படினா நாங்க அரசியல்தான் பண்ணுவோம். ராமர் கோயில் கட்டுவோம்னு நீங்க அரசியல் செய்யவில்லையா? நாங்களா ராமர் கோயில் கட்டுங்கன்னு கேட்டோம். செத்து போயிருக்காங்க மக்கள், அவங்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும், அவர்கள் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைப்பது தவறா? இவ்வளவு நியாயம் பேசும் அவர்கள் இந்த சுவர் இடிப்புக்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்துள்ளதா, ஏன் வசதியானவர் என்று நினைக்கிறீர்களா? ஒரு 500 ரூபாய் காணாமல் போனால் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ வேலை செய்பவர்களை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கும் காவல்துறைக்கு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரியவில்லையா? அரசாங்கம் மக்களுக்காக இருக்கிறது என்றால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டாமா, இவர்கள் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள், ஆனால், அவர்கள் தான் ஏமாற போகிறார்கள்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT