Skip to main content

கரோனா நோய் குறித்தான அச்சத்தையும் பீதியையும் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் விபரீதம் ஏற்பட்டுவிடும் - எச்சரிக்கும் திருமுருகன் காந்தி!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

b



உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதன் கோரப்பிடியில் சிக்கித்  தவிக்கின்றன. இதற்கிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் சைமன் கரோனா நோய்க்கு இரையானார். அவரை அடக்கம் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை உடைத்தனர். இதுகுறித்துத்ம், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது, "இன்றைக்கு நம்முன் பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. அவற்றைப் பற்றி எல்லாம் பேச வேண்டியுள்ளது. அதில் ஒன்று மருத்துவர் சைமனைப் பற்றியது. அவரின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அவருக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. அவர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிச்சயம் தேவையான ஒன்றுதான். அதேபோல் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று யோசிக்கவும் வேண்டும். தொற்று நோய் குறித்து மக்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அரசு மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். காலங்காலமாக தொற்றுநோய்கள் மனித சமூதாயத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கிற்து. அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்குரிய பயிற்சிகளும் நம்மிடம் இருக்கிறது. 


தொற்று நோய் குறித்து நம்மிடம் இருக்கின்ற மிக முக்கியப் பிரச்சனை நம் மனதில் இருக்கின்ற பயம். அது என்ன செய்யும் என்ற புரிதல் இல்லாத ஒரு குழப்பம். இந்தக் குழப்பத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. தொற்றுநோய் குறித்து அரசாங்கம் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தத் தொற்று நோய் குறித்து நாம் பதட்டப்பட வேண்டாம் என்றும், நோய்த் தொற்றுக்கு ஆளானவரகளிடம் நாம் அன்பாக, அரவணைப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அரசுக்கள்தான் மக்கள் மனதில் ஆழமாகப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது.

அந்த நோயில் இருந்து குணமடைந்தவர்கள் மீது சமூக ஒதுக்கல் எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்ற பயம் நம்மிடம் இருக்கிறது. கரோனா வந்தவரை ஒதுக்குவது, அவரின் குடும்பத்தைச் சமூகத்தில் இருந்து பிரித்து பார்த்தல் என்று இது எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்று நாம் நினைக்கிறோம். இது எதையுமே செய்யாமல் நோய் குறித்தான அச்சத்தை, பயத்தை, பீதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றால் நாளைக்கு சைமனுக்கு நடந்ததுதான் அனைவருக்கும் நடக்கும். அப்பாவி மக்களை அறியாமையில் இருக்கின்ற மக்களைக் குற்றம் சொல்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அவர்களுக்கு இந்த நோய் குறித்து முழு தகவலையும் சொல்ல வேண்டிய கடைமை அரசுக்கு இருக்கிறது. அதை அவர்கள் சரியாக செய்தால் இந்தப் பிரச்சனைகள் ஏற்படாமல் நாம் தவிர்க்கலாம்" என்றார்.