ADVERTISEMENT

என்னை 13 முறை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள்... ஆனால் வழக்கு பதிவு செய்யப்படவில்லையே ஏன்..? - திருமாவளவன் கேள்வி!

05:35 PM Mar 02, 2020 | suthakar@nakkh…

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " உலக நாடுகளுக்கு முன்பு இந்தியா தலை குனிய வேண்டிய ஒரு சூழ்நிலை தற்போது தில்லியில் நடைபெற்றுள்ளது. மனசாட்சி உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டத்தால் யாருக்கும் எந்த பிரச்சனையாவது இருக்கின்றதா? போக்குவரத்து நெரிசல் இருக்கின்றதா? வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கின்றதா என்றால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அங்கு போராட்டம் நடைபெற்று வருகின்றது. அவர்கள் காவல்துறையினரின் பாதுகாப்பை கூட கேட்கவில்லை. ஆனால் தில்லியில் மதவெறி குண்டர்கள் சிஏஏ-வை ஆதரித்து போராட்டம் நடத்துகிறார்கள். கபில் மிஸ்ரா என்பவர் நேரடியாக சொல்கிறார், சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கொல்வோம் என்று.

ADVERTISEMENT


ADVERTISEMENT

அவராவது அமைச்சர் பொறுப்பில் இல்லாதவர். ஆனால் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அனுராக் தாக்கூர் என்பவரும் அதே போன்றதொரு கருத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய நெஞ்சில் இன்னமும் சனாதான கொள்கை குடிக்கொண்டுள்ளது என்பதை நாம் அறிய முடிகின்றது. தில்லி கலவரத்தில் இதுவரை நாற்பது பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்னும் பலபேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. சமூக வலைதளங்களில் வருகின்ற காட்சி பதிவுகளை பார்க்கும் போது சற்று அதிர்ச்சியாக இருக்கின்றது. அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று தனி இடத்தில் வைத்து தாக்குகிறார்கள். அவர்கள் என்ன வன்முறையில் இறங்கினார்களா? இந்த சட்டம் வேண்டாம் என்றுதானே சொன்னார்கள். அவர்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள். தொடர் போராட்டத்தில் இந்தியா முழுவதும் யாரும் இனி இறங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அமைதியாக போராடியவர்கள் மீது மதவெறி குண்டர்கள் இந்த தாக்குதலை தொடுத்து அப்பாவி 40 உயிர்களை பறித்துள்ளார்கள் என்றால் இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா? அரசியலமைப்பு சட்டம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகம் நம்மை போன்ற ஆட்களுக்கு எழுகின்றது. கிருஸ்துவர்களுக்கு இந்த சட்டத்தில் குடியுரிமை தருவோம் என்று கூறுவது அவர்கள் மீதான அக்கறை அல்ல. முஸ்லிம்களும், கிருஸ்துவர்களும் ஒன்று சேரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர்கள் இருவரையும் பிரித்தாள்கிறார்கள்.

போஸிஸ் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம், ஆனால் தில்லியில் தனி மனிதன் துப்பாக்கி வைத்துக்கொண்டு ரோட்டில் நின்ற காட்சியை நாம் பார்த்திருப்போம். அதே போன்று நான் துப்பாக்கி வைத்துக்கொள்ள முடியுமா? கபில் மிஸ்ரா பேசியது போல நான் பேசினால் சென்னையை காவல்துறை என் மீது வழக்கு போடாமல் இருப்பார்களா? பத்து மணியை தாண்டி 5 நிமிடம் பொதுக்கூட்டத்தில் பேசினாலே வழக்கும் போடும் இந்த சூழ்நிலையில் நாம் அவர்களை மாதிரி பேச முடியுமா? எடப்பாடியை மாண்புமிகு என்று சொல்லைவில்லை என்றால் அதற்கும் வழக்கு போடுகிறார்கள், எதெற்கெல்லாமோ தற்போது வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அவர்கள் மீது குண்டாஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை போடுகிறார்கள். என்னை கொல்ல 13 முறை முயற்சி நடந்துள்ளது. அவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டதா? ஏன் செய்யவில்லை, ஆளுக்கொரு நீதியாகத்தான் அனைத்து துறைகளும் இருக்கிறதோ என்ற சந்தேகம் தற்போது வலுவாக எழுந்துள்ளது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT