Skip to main content

"இந்த பரபரப்பான உலகில் நட்பு எளிதில் முறிந்து விடுகிறது..." - திருமாவளவன் நெகிழ்ச்சி

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

இளம் ஊடகவியலாளர் ஷாலினி எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கவிதை எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்ட அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அவரின் கவிதைகளை தொகுத்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட அவரின் நண்பர்கள் முடிவு செய்தனர். இந்த கவிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளன் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து...

"விபத்தில் காலமான அருமை தங்கை இரா.ஷாலினி அவர்களின் நினைவை போற்றும் வகையில், அவருடைய எண்ணங்களை எல்லாம் தொகுத்து கவிதை நூலாக வடித்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் இதை வெளியிட்டுள்ள ஷாலினியின் நண்பர்களை நான் பாராட்டுகிறேன். மானுடம் இன்னும் சாகவில்லை, மனித நேயம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு ஏற்ப, ஷாலினியின் நண்பர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதிய கவிதைகளை இங்கு நூலாக வெளியிட்டுள்ளனர். எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், எவ்வளவு இணக்கமாக இருந்தாலும் இந்த பரபரப்பான உலகில் நட்பு எளிதில் முறிந்து விடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஷாலினியின் நண்பர்கள் உள்ளபடியே இன்று வரலாற்று பதிவை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அந்த வகையில் நான் மெய் சிலிர்ப்போடு உங்களை வாழ்த்தவும், பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.
 

thirumavalavan speaks about friendship



நட்பு குறித்து அவர், ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் தமிழ் மீது கொண்டுள்ள பற்று பற்றி இங்கு தோழர்கள் எடுத்துக்  கூறினார்கள்.  அவருக்குள்ள பார்வை பெரியாரிய பார்வையாக, புரட்சியாளர் அம்பேத்காரிய பார்வையாக, ஒரு சமத்துவ பார்வையாக இருக்கிறது. ஆனால், இந்த சமத்துவ பார்வையை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாகவே காண முடிகிறது. ஆனால், தங்கை ஷாலினியிடம் அத்தகைய சமத்துவ பார்வை மேலோங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தான் இந்த கவிதைத் தொகுப்பு. அதில் நட்பு குறித்து அவர் எழுதியிருக்கிற இந்த கவிதை, "நட்பே வா, நடக்க இன்னும் தூரம் உண்டு, கடக்க இன்னும் வழிகள் உண்டு, ஒருவேளை மரணம் முந்திக்கொண்டால் நான் வீழ்ந்து கிடக்க உன் மடியும் உண்டு" நண்பர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது அவருக்கு. என் நண்பர்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்பதில் ஷாலினிக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது. தன் நண்பர்கள் தன்னை தாங்குவார்கள் என்பதை அவர் தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

உலகம் உருண்டை என்கிறான் விஞ்ஞானி, ஆனால் ஒரு உருண்டை சோறு தான் உலகம் என்கிறான் விவசாயி. இப்படி பாட்டாளி வர்க்க பார்வையோடு தன்னுடைய சிந்தனைகளை பதிவு செய்திருக்கிறார் தங்கை ஷாலினி. சமத்துவப் பார்வை அனைவருக்கும் உண்டா என்றால், அது விவாதத்துக்கு உரியது. பாட்டாளி வர்க்க வரிசையி்ல் இடம் பெற வேண்டிய ஷாலினியை நாம் இழந்திருக்கிறோம். மரணம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை ஒவ்வொருவரும் உணர்கிறோம். பிறந்தால் இறந்தாக வேண்டும் என்பது இயற்கை. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நாம் போராட வேண்டியிருக்கிறது. மனிதன் ஒரு உணர்ச்சியின் தொகுப்பாகத்தான் இருக்கிறான். இந்த உணர்ச்சிகளை நெறிப்படுத்தத் தெரிந்தவன், இந்த உணர்ச்சிகளை முறைப்படுத்தத் தெரிந்தவன், இந்த உணர்ச்சிகளை கையாளத்தெரிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். இந்த உணர்ச்சியை கையாள்வதற்கு ஒரு வல்லமை தேவைப்படுகிறது. பயம் என்கிற உணர்ச்சிதான் மனிதனை வீழ்த்த கூடிய பகை உணர்ச்சி.

நம்மை ஒருவருக்குக் கீழாக நினைக்கும் போது பயம் நம்மை ஆட்டுவிக்கிறது. ஒருவனுக்கு பயம் வந்துவிட்டால் அவன் பலவீனம் அடைந்துவிட்டான் என்பது பொருள். மனிதன் மரணத்தை எதிர்கொள்வதில்தான் தடுமாறிப் போகிறான், மரணத்தை சந்திப்பதில்தான் திணறிப் போனான். இந்த மரணத்தை எதிர்கொள்வதற்காக அவன் தேடித் தேடி மேற்கொண்ட முயற்சியின் விளைவாக அவனே உருவாக்கிக் கொண்ட ஒரு பாதுகாப்பு அரண்தான் கடவுள் என்கிற ஒன்று. மனிதனே தன்னுடைய மரண பயத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அவனே கண்டுகொண்ட ஒரு கண்டுபிடிப்புதான் கடவுள். ஆகவே விபத்து ஏன் நேர்ந்தது, எல்லோரும் வாழ இங்கு இடம் இருக்கின்ற போது, என் பிள்ளை ஷாலினிக்கு மட்டும் இடமில்லையா என்ற கேள்வி எழும். இறப்பு எப்படியும் நிகழும். அதனை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே, ஷாலினியை இழந்து வாடும் அவரின் பெற்றோருக்கும், அவரின் தங்கைக்கு  ஆறுதல் கூறவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஷாலியின் ஆற்றலை நாம் வியப்பதை காட்டிலும், ஷாலினியின் பங்களிப்பை போற்றுவதை காட்டிலும், ஷாலினியின் இழப்பை ஈடுசெய்வதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சியை காட்டிலும், ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதுதான் நம்முடைய கடமை. அந்த வகையில் அன்புத் தங்கை ஷாலினியை இழந்து வாடும் அவரின் பெற்றோருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்." 

 

 

 

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.