ADVERTISEMENT

ஆளுங்கட்சியினர் தலையீட்டால் ஜெயஸ்ரீ கொலையை 'விபத்து' என்று முடிக்கப் பார்த்தார்கள் - திருமா வேதனை!

11:46 AM May 12, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


நேற்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு நபர்கள் கை, கால்களைக் கட்டி தீவைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள நிலையில், அவர்களை அ.தி.மு.க.வின் பொறுப்புகளில் இருந்து கட்சித் தலைமை நீக்கியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, "விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ADVERTISEMENT


இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தமிழக அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும். சிறார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விரைவு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கித் தர வேண்டும். குற்றவாளிகளை ஜாமினில் வெளியே விடாமல் விரைந்து தண்டனை தருவதற்கான வழிமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்றது. இத்தகையதொரு கொடிய வன்செயலில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. வழக்கமாக காவல்துறையினர் ஆளும் கட்சியினருக்குச் சேவை செய்வதையே தங்களுடைய முதன்மையான கடமையாக வைத்திருக்கிறார்கள்.

எத்தகைய கொடிய செயலில் ஈடுபட்டாலும் அவர்களைப் பாதுகாப்பது, எவ்வளவு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவர்களுக்குத் துணை போவது என்று இது காவல்துறையின் பண்பாகவே உள்ளது. ஆளும் கட்சிக்காக எதையும் செய்ய காவல்துறை உடந்தையாக இருக்கிறது, ஒத்துழைப்பாக இருக்கிறது, உடன்பட்டு நிற்கிறது. இது ஒரு பொதுவான கருத்து. குறிப்பிட்ட இந்த ஆளும் கட்சி, அந்த ஆளும் கட்சி என்றில்லை, இந்தியா முழுவதும் காவல்துறையின் நடவடிக்கை அப்படித்தான் இருக்கின்றது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரும் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற நிலையில், அவர்களைக் கைது செய்யாமல் தப்பிக்க வைத்து விடுவார்களோ என்ற ஐயம் நமக்கு இயல்பாகவே ஏற்படுகின்றது.


ஆனால் உயிரிழந்த அந்தச் சிறுமி யாரெல்லாம் தன்னைக் கட்டிப்போட்டார்கள், வாயில் துணி வைத்து அழுத்தினார்கள் என்பதை மிகத் தெளிவாகத் தன்னுடைய மரண வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் நேற்று நம்முடைய தோழர்கள் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் பற்றி கேட்டபோது அது ஒரு விபத்து என்று சொல்வதற்குத் தயாராகி வருகிறார்கள் என்று கேள்விபட்டோம். அந்தச் சிறுமி தன்னை எரித்தவர்கள் பற்றி தன்னுடைய மரண வாக்கு மூலத்தில் மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால் காவல்துறையினர், ஆளும் கட்சியினர் தலையீட்டால் இதை விபத்து என்று முடித்திருப்பார்கள். இது அனைத்திற்கும் மிக முக்கியக் காரணமாக இருப்பது டாஸ்மாக் திறந்து விடப்பட்டதுதான்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT