Skip to main content

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் யாருக்காக நிறுத்தப்பட்டதோ அவர்கள் இருவரும் ஒரே அணியில்! 

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

ஓட்டுக்கு நோட்டு என்ற காரணத்தால் இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்தல் நிறுத்தப்பட்ட தொகுதி என்ற தனிப் பெருமை அரவக்குறிச்சிக்கு சேரும். அந்தப் பெருமைக்குக் காரணமாக எதிர்எதிராகப் போட்டி போட்டு, பணத்தை வாரியிறைத்த இரண்டு பேரும் இப்போது ஒன்றாகப் பிரச்சாரத்தில் செல்வதை ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள் இடைத்தேர்தலின் மகத்துவம் அறிந்த அரவக்குறிச்சி மக்கள். 

 

senthil balaji



1952 முதல் பொதுத் தேர்தலிலிருந்தே அரவக்குறிச்சி தொகுதி உள்ளது. 5 பேரூராட்சிகளை உள்ளடக்கிய பெரிய தொகுதி. சமுதாயரீதியாக கொங்கு வேளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாயக்கர்கள், இஸ்லாமியர்கள் நிறைந்துள்ளனர். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை, கரூர் ஜவுளிப்பூங்கா, தமிழக அளவில் சேவல்கட்டுக்கு பெயர் போன பூலாம்வலசு, இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பள்ளப்பட்டி, புகழ்பெற்ற ரங்கமலை, தனியார் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் இத்தொகுதியின் சிறப்பம்சங்கள். கூடுதல் சிறப்பு,  முருங்கைக்காய் விளைச்சல். தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். தொழில் வாய்ப்புகள் இல்லாததால் வடமாநிலங்களில் வட்டித் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

jothimani



தி.மு.க., அ.தி.மு.க. தலா 4 முறை, காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரா கட்சிகள் தலா 1 முறை வெற்றிபெற்றுள்ள தொகுதியில், முருங்கைக்காய் குளிர்பதன கிடங்கு, அரசு கல்லூரி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையக்கோட்டை வழியாக ஒட்டன்சத்திரத்திற்கு ரயில் பாதை, வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் என ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. 

2011 தேர்தலிலேயே அதிகப் பணம் புழங்கிய அரவக்குறிச்சியில் தி.மு.க. கே.சி.பழனிச்சாமி வெற்றிபெற்றார். ஆனால், ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அப்போது கரூரில் ஜெயித்த செந்தில்பாலாஜி மா.செ., மந்திரி என செல்வாக்காக வலம்வந்தார். பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளால் அவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 2016 தேர்தலில் தி.மு.க. கே.சி.பழனிச்சாமியுடன் அரவக்குறிச்சியில் மோதவிட்டு, முடிந்தால் ஜெயித்து வா என்ற ரீதியில் சீட் ஒதுக்கினார் ஜெ.

 

kcp



செந்தில்பாலாஜியும் கே.சி.பழனிச்சாமியும் பணத்தை வாரி இறைத்ததால் நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி தேர்தல், ஜெ. சிகிச்சையில் இருந்தபோது நடந்தது. செந்தில்பாலாஜி வெற்றிபெற்றார். ஜெ. மரணத்திற்குப்பின் கூவத்தூர் கூத்துகளில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்குச் சென்ற செந்தில்பாலாஜி, கவர்னரிடம் முதல்வர் மாற்றத்தை வலியுறுத்தி மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்களின் லிஸ்ட்டில் அவரும் இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டு, எம்.எல்.ஏ. பதவி பறிபோன நிலையில், டி.டி.வி. தரப்பின் கஜனாவாக செயல்பட்டுவந்த செந்தில்பாலாஜி, சில மாதங்களுக்குமுன் தி.முக.வில் சேர்ந்து, ஸ்டாலினை அழைத்து மிகப்பெரும் இணைப்புவிழா நடத்தி, மாவட்டச் செயலாளராகவும் (பொறுப்பாளர்) ஆன நிலையில்தான், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. 

எம்.பி. தேர்தலில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்கு சேகரிக்கும் தீவிரப் பணியில் செந்தில்பாலாஜி இருந்தபோது, அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, அரவக்குறிச்சி வேட்பாளராக செந்தில்பாலாஜியை அறிவித்தது தி.மு.க. தலைமை. எம்.பி. தேர்தல் முடிந்த மறுநாளே, தனது தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் செந்தில்பாலாஜி. அவருக்காக எம்.பி. வேட்பாளர் ஜோதிமணியுடன், கடந்தமுறை செந்தில்பாலாஜியை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. புள்ளி கே.சி.பழனிச்சாமியும் ஒன்றாக ஜீப்பில் ஏறி பிரச்சாரம் செய்தார். 

 

nomination



தேர்தல் களம் குறித்து செந்தில்பாலாஜியிடம் நக்கீரன் கேட்டது. "எம்.பி.  தேர்தலில் விழுந்த மொத்த வாக்கில் 60 சதவீதம் ஜோதிமணிக்குத்தான் விழுந்திருக்கிறது. கட்டாயம் வெற்றி பெறுவோம். அதே நம்பிக்கையுடன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டேன். செயல்வீரர்கள் கூட்டம் நடத்துகிறோம். எம்.பி. தேர்தல் போலவே இடைத்தேர்தலிலும் போலீசை வைத்து இந்த அரசாங்கம் அவுங்களா பிரச்சனை பண்ண நினைப்பாங்க, நாங்க அதை கவனமாக கையாண்டு கொண்டிருக்கிறோம். மக்கள் எங்களோடுதான் இருக்காங்க. நிச்சயம் ஜெயிப்போம்'' என்றார் நம்பிக்கையோடு.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இடைத்தேர்தல்களில் தீவிர கவனம் செலுத்தும்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போட்டி போட்டு வாரி வழங்கிய செந்தில்பாலாஜியும் கே.சி.பி.யும் ஒரே கட்சியில் உள்ள நிலையில் அவர்கள் தரப்பு கவனிப்புடன்,  எப்படியாவது ஜெயிக்க நினைக்கும் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டும், இரு தரப்பையும் எதிர்கொள்ள வேண்டிய அ.ம.மு.க.வின் விநியோகத்தையும் எதிர்பார்த்து அமோக கனவுகளுடன் இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள்.
 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.