Skip to main content

தீபா போயஸ் கார்டன் செல்வதை ஜெயலலிதாவின் ஆன்மாவே ஏற்றுக்கொள்ளாது - தேனி கர்ணன் பேட்டி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020


ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்து தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், சசிகலாவின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரின் ஆதரவாளர் தேனி கர்ணனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்குரிய முயற்சிகளை தமிழக அரசு எடுத்துவந்த நிலையில், நீதிமன்றம் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகிய இருவர்தான் வாரிசு என்று அறிவித்துள்ளது. சசிகலா ஆதரவாளராக அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அம்மாவின் சொத்துகள் நிறைய இருக்கின்றது. அது அனைத்தும் முறையானவர்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோம். சின்னம்மா தற்போது சிறையில் இருக்கிறார். அவர் வெளியே இருந்தால் இந்த நினைவில்லம் கட்டுவதற்கு மறுப்புத் தெரிவிக்க மாட்டார். அம்மாவின் சொத்துகள் எதுவாக இருந்தாலும் சின்னம்மா வரும்வரை காத்திருக்கலாம் அல்லவா? அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா தான் அரசியல் வாரிசு என்று கூறுவதற்குப் பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றது. 
 


இரத்த சொந்தம் என்று தீபாவையும், தீபக்கையும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளார்களே? இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்க போகின்றது? 

இரத்த சொந்தம் அவர்கள் தான். அதை யாரும் மறுக்கவில்லை. நீதிமன்றமும் அதைத்தான் கூறியுள்ளது. அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அம்மாவின் ஆன்மா அதனை ஏற்றுக்கொள்ளாது. தீபா போயஸ் கார்டனில் குடியேறுவதற்கு அம்மாவின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அம்மாவின் சொத்துகளை எல்லாம் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதனிடம் கொடுத்துவிட வேண்டும். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. 

இவ்வளவு காலம் ஜெ'வை சசிகலாதான் பார்த்துக்கொண்டார், எனவே அவருக்குத்தான் சொத்துகள் போய்ச் சேர வேண்டும் என்று கூறினீர்கள், தற்போது அ.தி.மு.க. தொண்டர்களுக்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்கள், ஏன் இந்தத் தடுமாற்றம்?
 

http://onelink.to/nknapp


நான் கூறுவதை முழுவதுமாக நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள். சின்னம்மாவிற்கு இந்தச் சொத்துகள் வேணும் என்று நான் கேட்கவில்லை. சொத்துகளைக் கொடுப்பதற்கு அவர்களின் அனுமதி வேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன். போயஸ் கார்டன் இல்லத்தில்தான் சின்னம்மா வந்து தங்க வேண்டும் என்று அவசியமில்லை. எனவே அவர்கள் சிறையில் இருந்தாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன்.