Skip to main content

கதாநாயகனுக்கு நோ கட் அவுட், காமெடியனுக்கு 16 அடி கட் அவுட்!!! 1970 களிலேயே கலக்கிய ‘தேங்காய்’ சீனிவாசன்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
thengai srinivasan



இன்று தேங்காய் சீனிவாசனின் நினைவு நாள். 1970, 1980களிலும் அதற்கு பிறகும் ஒரு தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். கல்மணம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார். இவரின் நடிப்பைப் பார்த்த ‘டணால்’ தங்கவேலு என அழைக்கப்பட்ட கே.ஏ. தங்கவேலு இனி சீனிவாசனை ‘தேங்காய்’ சீனிவாசன் என்றுதான் நாம் அனைவரும் அழைக்கவேண்டும் எனக் கூறினார். இவ்வாறுதான் அவருக்கு தேங்காய் சீனிவாசன் என்ற பெயர் வந்தது. 
 

முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகியோரின் நடிப்பில் 1972ம் ஆண்டு வெளியான படம்தான் காசேதான் கடவுளடா. ஏற்கனவே நாடக வடிவில் மெகா ஹிட் அடித்திருந்தது இந்த நாடகம். அதை திரைப்படமாக மாற்ற எண்ணிய ஏ.வி.எம். ஸ்டுடியோ அந்தப் படத்திற்கான தயாரிப்பு செலவை ஏற்றுக்கொண்டது. அந்தப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான சாமியார் கதாபாத்திரத்தில் நாகேஸ் உட்பட அனைவரும் விரும்பினர். நாகேஸ் அன்பு கட்டளையிட்டே சென்றுவிட்டார், இந்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பேன் என்று. ஆனால் இந்த வாய்ப்பு தேங்காய் சீனிவாசனிடமே சென்றது. அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அனைவரையும் குலுங்கி, குலுங்கி சிரிக்க வைத்துவிட்டார்.
 


 

thengai srinivasan


 

படம் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. முக்கியமாக தேங்காய் சீனிவாசன் நடிப்பு மற்றும் அந்த சாமியார் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சென்னை ராயப்பேட்டையிலிருந்த பைலட் திரையரங்கில் ஆங்கில படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் காசேதான் கடவுளடா படம் பைலட் திரையரங்கில் திரையிடப்பட்டது. சென்னை தமிழில் பேசும் அந்த அப்பாசாமி ‘சாமியார்’ கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்திருந்தது. அனைவரும் அதை கொண்டாடினர். இதனால் இரவோடு இரவாக ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் பதினாறு அடி நீளத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் சாமியார் வேட கட் அவுட் வைத்தார். இதைப்பார்த்த தேங்காய் சீனிவாசன் ஆனந்த கண்ணீர் வடித்தார். உடனே இயக்குனர் கோபுவை வந்து சந்தித்து மனம் மகிழ்ந்து கண்ணீர் விட்டார். 
 

அந்த படத்தின் கதாநாயகனான முத்துராமன், இயக்குனர் கோபுவிடம், கோபமாக ஆனால் மரியாதையுடன் என்ன சார் அந்த படத்தின் கதாநாயகன் எனக்கு கட் அவுட் வைக்காமல், காமெடியனுக்கு வச்சிருக்கிங்களே, நாம் இத்தனை படங்கள் சேர்ந்து வொர்க் பண்ணியும் இப்படி பண்ணிடிங்களே எனக்கேட்டு, பின் கலங்கினார். இயக்குனர் கோபு நடந்ததைக் கூறினார். அதன்பின் முத்துராமனும் அதை ஏற்றுக்கொண்டார்.

 

 

 

Next Story

ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த மிர்ச்சி சிவா பட ஃபர்ஸ்ட் லுக்!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

Kasethan Kadavulada

 

இயக்குநர், தயாரிப்பாளர் ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காசேதான் கடவுளடா’. கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகிவருகிறது. ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா, குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை, மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

படப்பிடிப்பு தளத்தில் சாமியார் தோற்றத்தில் யோகி பாபு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியிருந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காந்தி ஜெயந்தி தினத்தன்று (02.10.2021) படக்குழு வெளியிட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம் பெற்றுள்ளது. ‘காசேதான் கடவுளடா’ படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Next Story

சாமியார் கெட்டப்பில் யோகி பாபு! முடியும் தருவாயில் ‘காசேதான் கடவுளடா’!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

dfxghfhfd

 

இயக்குநர், தயாரிப்பாளர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் ‘காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு, சென்ற மாதம் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் இப்படம் குறித்து பேசியபோது....

 

"படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிகச்சரியாக நடைபெறுவதற்கு முழுமுதல் காரணமாக இருந்தது எனது படக்குழுவினர்தான். அவர்களுக்கு என் மனதார நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்திற்காக முழு ஈடுபாட்டுடன், தங்களது முழு உழைப்பையும்  தந்த மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது படத்தின் 80% சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. விரைவில் படத்தின் ட்ரைலர், இசை மற்றும் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளோம்" என்றார். 

 

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படத்தில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.