ADVERTISEMENT

ரூ.998 கோடி மதிப்பிலான கலைப்பொருட்கள் திருட்டு! மற்றுமொரு புகாரில் சிக்கும் சுபாஷ் கபூர்!

06:47 PM Jul 20, 2019 | Anonymous (not verified)

வரலாற்றின் தடத்தை, அதன் தொன்ம அடையாளங்களைத் திருடி வசமாகச் சிக்கிக்கொண்ட சிலைக்கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர் மீது வாஷிங்டனில் மிக முக்கியமான புகார்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களைத் திருடியதாக சுபாஷ் கபூர் உள்ளிட்ட எட்டு பேர் மீது மேன்ஹேட்டன் வழக்கறிஞர்கள் மேத்யூ போக்தனோஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஹிர்ஸ்க் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் பொருட்களின் தற்போதைய மதிப்பு மட்டுமே, ரூ.998 கோடியாக இருக்கும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

1986ம் ஆண்டு ‘கபூர்ஸ் கம்பெனி ஆஃப் ஆர்ட் ஃப்ரம் தி பாஸ்ட்’என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் சுபாஷ் கபூர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 26, 2016-ல் அந்த நிறுவனம் மூடப்படும் வரையில் இந்தத் திருட்டு வேலைகள் நடந்திருக்கிறது. சுபாஷ் கபூர், சஞ்சீவ் அசோகன், தீன் தயாள், ரஞ்சீத் கன்வார், ஆதித்யா ப்ரகாஷ், வல்லப் ப்ரகாஷ், ரிச்சர்ட் சால்மோன் மற்றும் நீல் பெர்ரி ஸ்மித் ஆகியோரின் பெயர்கள் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை, உரிமையாளர்கள் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாத வண்ணம், தெரிந்தே மறைத்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை போலியான ஆவணங்களைத் தயாரித்து, சட்டத்தை ஏமாற்றி மியூசியங்களுக்கும், நிறுவனங்களுக்கும் விற்பனை செய்திருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வழக்கில், 2011-ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூர், பின் இந்தியா கொண்டுவரப்பட்டு தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போதே இதுதொடர்பான விரிவான செய்திகளை தொடராக வெளியிட்டது நக்கீரன்.


“தற்போது சுபாஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் திருடப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அடையாளம் காணப்பட்டு சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு அச்சுறுத்தல் உண்டாகும்” என்கிறார் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்துக்கான தலைவர் சந்தீப் சக்கரவர்த்தி.


சிங்கப்பூரைச் சேர்ந்த கலை ஆர்வலர் விஜயகுமார், “அமெரிக்க சட்ட அமலாக்கப்பிரிவின் விசாரணையில் இருந்து நம் சட்ட அமலாக்கப்பிரிவு நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். நம் தொல்லியல் ஆய்வுத்துறை இதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டதோடு, குற்றவாளிகள் தப்பிக்க வழி அமைத்துக் கொடுத்துவிட்டது” என்று ஆதங்கப்படுகிறார்.


இதுபோன்ற சிலைக்கடத்தல் நெட்வொர்க் ஹாங்காங்கை மையமாகக் கொண்டே செயல்படுகிறது. மேலும், லண்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கைதேர்ந்த நெட்வொர்க்குகள் இதில் மிகத் தீவிரமாக ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT