Advertisment

சிவகாசி முருகேசனை ‘சிவனாண்டி’ ஆக்கிய சினிமா! -தேடு தேடென்று தேடியே நனவானது கனவு! 

எத்தனை இடையூறு வந்தாலும், யாருடைய உந்துதலும் இல்லாமல். ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருவதே, லட்சியம்! அந்த வகையில், முருகேசனை ‘லட்சிய புருஷன்’ என்று தாராளமாகச் சொல்லலாம்.

Advertisment

thedu

யார் இந்த முருகேசன்? அவருடைய லட்சியம்தான் என்ன?

சிவகாசி புதுரோட்டு தெருவில் கடை வைத்து எண்ணெய் வியாபாரம் செய்துவரும் முருகேசனுக்கு, எப்பாடுபட்டாவது சினிமாவில் நடித்தே ஆகவேண்டும் என்பது முப்பது வருடக் கனவு. அதற்காக, நடிப்புத் திறமை உள்ள மகா கலைஞன் என்றெல்லாம் அவரைச் சொல்லிவிட முடியாது. நடிப்புக்கான பயிற்சியிலும்கூட தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்டதில்லை. ஏனென்றால், சொந்தத் தொழிலான எண்ணெய் வியாபாரம் அந்தக் கடையிலேயே அவரை முடக்கிப் போட்டது. ஆனால், சினிமா பித்து மட்டும் விடவே இல்லை. சென்னையிலிருந்து கிளம்பி விருதுநகர் மாவட்டத்துக்கு வரும் ஏதாவதொரு உப்புமா கம்பெனி, ‘ஷூட்டிங்’ என்ற பெயரில் ஏதாவது பண்ணிக்கொண்டிருக்கும். அங்கே முருகேசனைப் பார்க்க முடியும். அவரது உருவத்துக்கும் உயரத்துக்கும் சம்பந்தமே இல்லாத காக்கி யூனிபார்மை அந்த உப்புமா கம்பெனி அவருக்கு மாட்டிவிட்டிருக்கும். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கும் லோக்கல் ஆட்கள் “எண்ணைய்க்கடை முதலாளிக்கு இதெல்லாம் தேவையா?” என்று, அவர் முகத்துக்கு நேராகவே, உரிமையுடன் கேலி பேசுவார்கள்.

Advertisment

thedu

முப்பது சினிமாக்களுக்கும் மேல் நடித்துவிட்டதாக முருகேசனால் கணக்கு சொல்ல முடியுமே தவிர, ‘நீங்கள் நடித்து எத்தனை சினிமாக்கள் வெளிவந்தன? எந்த அளவுக்கு உங்கள் கதாபாத்திரம் பேசப்பட்டது?‘ என்று பதிலுக்கு அவரை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. ஏனென்றால், அதற்கெல்லாம் முருகேசனிடம் பதில் இல்லை.

தகுதி, திறமை இருந்தும் சினிமா கனவுகளோடு கோடம்பாக்கத்தைச் சுற்றி வருபவர்களுக்கே சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற உண்மை அவரைத் தூங்கவிடவில்லை. ‘வயதும் கூடிக்கொண்டே போகிறது. தனது நடிப்புத் திறமைக்கு(?) ஏற்ற ‘ரோல்’ தருவதற்கெல்லாம், தமிழ் சினிமா உலகத்தில் யாரும் இல்லை..’ என்பது, அவருக்கே புரிந்துபோனது. தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார்.

சொந்தமாக ஒரு சினிமா தயாரித்து, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, சொந்த ஊரான சிவகாசியில் எங்கு பார்த்தாலும் தன்னுடைய முகம் பெரிதாகத் தெரியும்படி வால்போஸ்டர் ஒட்டி, உள்ளூர் தியேட்டர் ஒன்றில் சொந்தபந்தங்களையாவது அந்தப் படத்தைப் பார்க்க வைத்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் திட்டமிட்டார். வெற்றிகரமாக அதை நிறைவேற்றியும் விட்டார். ஆம். அவர் தயாரித்து நடித்த ‘தேடு’ என்ற திரைப்படம், கடந்த 3-ஆம் தேதி, சிவகாசி ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டரில் மட்டுமல்ல, சென்னை- ஏவிஎம் ராஜேஸ்வரி, கோயம்பேடு-ரோகினி, அனகாபுத்தூர்-வெல்கோ, பொன்னேரி-வெற்றிவேல் முருகன், காஞ்சிபுரம்-அருணா, கள்ளக்குறிச்சி நவநீதம், வேலூர் குரல், கோவை கே.ஜி.காம்பளக்ஸ், மதுரை அண்ணாமலை என உலகமெங்கும்(?) ரிலீஸானது.

thedu

தேடு திரைப்படம் எப்படி?

தியேட்டருக்கு தன் குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்திருந்தார் தயாரிப்பாளர் சிவகாசி முருகேசனின் உறவினர் மாரியப்பன். “படம் சூப்பர்.. மச்சான் நடிப்பு சூப்பர்..” என்றார். சற்று தள்ளி நின்ற பெரியவர் ஒருவரிடம் கேட்டோம். “கன்னட டப்பிங் படம் மாதிரி இருக்கு. பரவாயில்ல..” என்றார். மற்றொருவர் “என்னத்தயோ காச கொடுத்துட்டு வந்து தியேட்டர்ல உட்கார்ந்துட்டு போவேன். நல்லா இருக்கு.. நல்லா இல்லைன்னு சொல்லத் தெரியாது.” என்று ஒரு மார்க்கமாகப் பேசினார்.

தேடு திரைப்படத்தின் இயக்குநர் ஈஸ்வரோ “மது மயக்கம், காதல் மயக்கம், செல்பி மயக்கம் என முப்பரிமாணம் கொண்ட இந்தக்கதையில், மயக்கம் கலைந்து, தவறுகளைக் களைந்து, இலக்கை அடைகிறார்களா என்பதைத்தான் இந்த சினிமா மூலம் சொல்லியிருக்கிறோம்.” என்கிறார்.

காதலர்களாக சஞ்சய்-மேக்னா ஜோடியும், வில்லனாக சிவகாசி முருகேசனும் நடித்திருக்கும் இந்தப் படத்தை விமர்சனம் செய்திருக்கும் ஒரு இணையதளம் சிங்கிள் ஸ்டார் அளித்து, 1/5 என ரேட்டிங் தந்திருக்கிறது.

முருகேசன் ஒரு லட்சிய புருஷன் என்பதை நாம் அறிந்ததாலோ என்னவோ, தேடு திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த சிவனாண்டி கேரக்டர் மட்டுமே நம் கண்ணுக்கு நிறைவாகத் தெரிந்தது. ‘நான்தான்டா புரொடியூசர்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், காட்சிக்கு காட்சி முருகேசன் வந்து போனார். அதுவும் காலா ரஜினி ரேஞ்சுக்கு, படம் முழுவதும் அவருக்கு கருப்பு காஸ்ட்யூம்தான். வில்லன் அல்லவா? எந்நேரமும் உடலை விரைப்புடன் வைத்துக்கொண்டு, விழிகளை உருட்டியபடி, சண்டைக் காட்சியில் உருண்டு புரண்டு, அந்தக்கால ஸ்டேஜ் ஆர்டிஸ்ட் மாதிரி வசனத்தை உரக்கப் பேசி, அழகியுடன் குத்தாட்டம் ஆடி, பாசமலர் சிவாஜி போல ஒரு காட்சியில் குமுறி அழுது கண்ணீர் விட்டு, அவரால் முடிந்த அளவுக்கு நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் எம்.கே.டி.பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி என எத்தனையோ ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ளனர். கடும் முயற்சியால், அந்த வரலாற்று பக்கங்களில் எப்படியோ முருகேசனும் ஒரு ஓரத்தில் பதிவாகிவிட்டார். தன் நடிப்புப் பசிக்காக, தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்க, முருகேசன் கொடுத்த விலை இருக்கிறதே? அந்த விலையை.. ஸாரி.. வலியை அவரால் மட்டுமே உணர முடியும்!

cinema moviereview
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe