The share market advisor's blunder; the wedding stage at a shock price! Photograph: (pallavaram)
யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை தாண்டி பிசினஸ், மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில் தளங்களாகவும் மாறி வருகிறது. எத்தனையோ ஆன்லைன் வேலை வாய்ப்புகள் குறித்த விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கிறது. அதில் ஒன்றுதான் ஷேர் மார்க்கெட் ஸ்டேடர்ஜி அட்வைசர். பங்கு சந்தைக்கு குறித்து அக்கு வேர் ஆணி வேராக பிரித்து அதன் நுணுக்கங்களை கற்றுக் தருவதாக பலரும் யூடியூப் சேனல்களில் பேசி வருகின்றனர்.
பலர் பங்கு சந்தை குறித்த உண்மையான விவரங்களை, தகவல்களை கல்வி முறையில் பயிற்றுவித்தாலும் சிலரின் அதீத ஆசை, ஏமாற்றும் எண்ணம் பங்கு சந்தை என்ற பெயரில் பலரின் பாக்கெட்களில் உள்ள பணத்தை பதம் பார்த்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் பல்லாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்லாவரம் பகுதியில் பிரபல திருமண மண்டபம் ஒன்றில் பரபரப்பாக திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மண்டபத்திற்கு வெளியே இருந்த மணப்பெண், மணமகனின் பிளக்ஸ் பேனரை பார்த்து அதிர்ந்த சிலர் மண்டபத்திற்கு உள்ளே சென்று கிளிண்டன் என்ற மணக்கோலத்தில் இருந்தவரை ஆவேசமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.
''பணம் முதலீடு பண்ணுங்க... பணம் முதலீடு பண்ணுங்க... எனச் சொல்லி எத்தனை குடும்பத்தை நாசமாக்கிருப்ப. இப்போ கல்யாணம் கேக்குதா உனக்கு?'' என திருமண மேடையில் இருந்த மணமகனை ஆத்திரம் தீர ஓட ஓட வெளுத்து எடுத்தனர். இந்த அதிர்ச்சி காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கையில், பல்வேறு யூடியூப் சேனல்களில் புள்ளி விவர புலிப் போல பங்கு வர்த்தகத்திற்கு டிப்ஸ்களை கொட்டி கொடுத்து வந்துள்ளார் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த கிளிண்டன்.
தொடர்ந்து பலமுறை தான் பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்து சக்ஸஸ்புள் ஆனதாக வானளாவ கதைகளை பல்வேறு யூடியூப் சேனல்களில் அள்ளி தெளித்திருக்கிறார் கிளிண்டன். அதனையும் நம்பி பலரும் அவருடைய ஃபாலோயர்கள் ஆகி இருக்கிறார்கள்.
கிளிண்டனின் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்த யூடியூப் வீடியோக்களை பார்த்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 2023ஆம் ஆண்டு கிளிண்டனை நேரில் சந்தித்து உங்கள் பங்கு சந்தை குறித்த வீடியோக்களை பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். நீங்களும் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பார்க்கலாம். லட்சங்கள் இல்லை கோடிகளில் நான் உங்களுக்கு ஈட்டி தருகிறேன். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் முதலீடு செய்யுங்கள் என அப்பெண்ணிடம் கிளிண்டன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கிளிண்டனின் ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பெண் கொஞ்ச கொஞ்சமாக 75 லட்சம் ரூபாயை கிளிண்டனிடம் கொடுத்து பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க சொல்லியுள்ளார். கோடிக்கணக்கில் லாபம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்துள்ளார் அப்பெண். ஆனால் அவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக உங்களுடைய 75 லட்சம் ரூபாயும் பங்குச் சந்தையில் லாஸ் ஆனதாக கிளிண்டன் கூற அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார் அப்பெண்.
இருந்தாலும் விடாத கிளிண்டன், உங்களின் 75 லட்சத்தை மீட்க என்னிடம் ஒரு வழியுள்ளது. அதற்கு நீங்கள் இன்னும் 12 லட்சம் கொடுத்தால் மீட்டு விடலாம் என தெரிவித்துள்ளார். என்ன செய்வது என தெரியாமல் விழித்த அப்பெண், எப்படியும் மீட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் அவருடைய ஆடி காரை விற்று 12 லட்சம் ரூபாயை மீண்டும் கிளிண்டனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த 12 லட்சமும் பத்தாது என சொன்னதால், இறுதியாக வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து அதன் மூலம் கிடைத்த 40 லட்சத்தை கிளிண்டனிடம் அப்பெண் கொடுத்துள்ளார். ஆனால் இறுதிவரை பணத்தை மீட்க முடியவில்லை எனவும் அத்தனை பணத்தையும் இழந்து விட்டதாகவும் கைவிரித்துள்ளார் கிளிண்டன். தொடர்ந்து அந்த பெண் கிளிண்டன் வீட்டிற்கு சென்று தன்னுடைய பணத்தை கேட்கும்போதெல்லாம் கிளிண்டனின் தாயார் அடித்து துரத்தியதாகவும், கிளிண்டன் ஆபாச வார்த்தைகளில் மிரட்டியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையும் விசாரிக்காமல் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார் அப்பெண். அவர் மட்டுமில்லாமல் கிளிண்டனின் பங்கு சந்தை வர்த்தகம் என்ற பெயரில் விரித்த பேராசை குழியில் பலரும் விழுந்துள்ளனர். அவரின் வார்த்தைகளை நம்பி பலர் கோடி கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு கிளிண்டனின் ஆசை வார்த்தைக்களை நம்பி 4 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பலமுறை கேட்டும் தன்னிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை மீட்க முடியவில்லை என வேலூரை சேர்ந்த அந்த நபர் பல்லாவரம் காவல் நிலைய வாசலில் நின்று வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதேபோல் இப்படி பணத்தை இழந்த சிலர் நேரடியாக கிளிண்டனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லை. வீடு காலி செய்யப்பட்டது தெரிந்தது.
இதனால் பணத்தை இழந்த பலரும் கிளிண்டனை ஜல்லடை போட்டு தேடிவந்தனர். இந்நிலையில் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் வாயிலில் கிளிண்டனின் திருமண பிளக்ஸ் பேனர் இருப்பதை பார்த்து அதிர்ந்த பணத்தை இழந்தோர் கூட்டாக உள்ளே புகுந்தனர்.
திருமண மேடையில் கோட் சூட்டுடன் ஜோராக மணக்கோலத்தில் நின்றுகொண்டிருந்த கிளிண்டனை பார்த்த பணத்தை இழந்தவர்கள் கண்மூடித்தனமாக அடித்து வெளுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு சூழல் நிலவியது. இந்த தாக்குதலில் காயமடைந்த கிளிண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தன்னை தாக்கியவர்கள் மீது சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கிளிண்டன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ள நிலையில் விரைவில் முடிவு தெரிய வரும் என்கிறது போலீஸ் தரப்பு.
Follow Us