அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் கலந்து கொண்டு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். எப்படி பார்க்கிறீர்கள்?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/27/088-2025-11-27-18-57-30.jpg)
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். இந்த செய்தியை நாம் ஒரு மாதத்திற்கு முன்பே பேசி இருக்கிறோம். செங்கோட்டையன் தவெகவுடன் கூட்டணி வைப்பார் என்று பேசினோம். இதோடு சேர்ந்து ஓபிஎஸ், டிடிவி இருவரும் அந்த கூட்டணிக்குள் வருவாங்க என நினைத்தோம். ஆனால் செங்கோட்டையன் தவெக கட்சியிலேயே நேரடியாக இணைவார் என்பது நமக்கே ஒரு பெரிய ட்விஸ்ட் தான். இந்த அளவுக்கு செங்கோட்டையன் இறங்கி போய் தவெகவில் இணைவார் என்பது எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயம்தான். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்தவர். அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்த ஒரு தேரோட்டி இன்று விஜய்யின் தேரோட்டியாக காட்சி மாறி இருக்கிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு நியாயமாக செங்கோட்டையன் என்ன செய்திருக்கணும். அன்வர் ராஜா என்ன பண்ணினார் நீக்குவதற்கு முன்பே போய் திமுகவில் சேர்ந்தார். செங்கோட்டையன் தனிக்கட்சி தொடங்கி இருக்கலாம். உங்களுக்கு செல்வாக்கு இல்லையா? நீங்களும் கொங்கு பெல்ட்டில் பெரிய தலைவர்தான். ஒன்பது முறை எம்எல்ஏ, எடப்பாடிக்கு எல்லாம் சீனியர் நீங்கள். இன்னும் சொல்லப்போனால் எடப்பாடியை சசிகலாவிடம் கொண்டு போய் சேர்த்து அவரை முதலமைச்சர் ஆக்குங்க என நான் தான் சொன்னேன் என தன்னிலை விளக்கம் கொடுத்தவர் செங்கோட்டையன். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் செங்கோட்டையனிடம் அவ்வளவு பணம் கிடையாது. எடப்பாடியிடம் பணம் இருந்தது. இபிஎஸ் முதலமைச்சராக வந்தால் நாங்கள் உதவி செய்கிறோம் என வேலுமணியும் தங்கமணியும் வரிஞ்சுகிட்டு நின்றாங்க. செங்கோட்டையனை நம்ப முடியாது என சொன்னார்கள். இதெல்லாம் நடந்தது. இப்போது அவரை விட்டு வெளியே வந்து விஜய் கிட்ட போகிறார் என்றால் இது செங்கோட்டையனுடைய முடிவல்ல.
தவெகவில் போய் சேர்ந்து அக்கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நினைப்பது செங்கோட்டையனுடைய முடிவல்ல. மேலிடத்தின் முடிவு. 'நான்தான் தலைவர், நான்தான் பொதுச்செயலாளர், என்கிட்டதான் கட்சி இருக்கு' என அதிமுகவுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பிடிவாதமாக இருக்கிறார். அதனால் அங்கிருந்து பலர் கரைந்து போவதை பார்த்து வருகிறோம். பி.ஹெச்.பாண்டியனுடைய மகன் மனோஜ் பாண்டியன் ஓபிஎஸ் உடன் வீர ஆவேசமாக நடந்தவர். பொதுக்குழுவில் நிமிர்ந்த நடையுடன் ஓபிஎஸ்-ஐ அப்படியே பாதுகாத்து கூட்டி வந்த மனோஜ் பாண்டியன் ஏன் திமுகவில் போய் சேர்ந்தார். அதே மாதிரி 'நமது எம்ஜிஆர்' இதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் திராவிட அரசியலில் ஊறிய நபர். அந்த காலத்திலேயே திராவிட அரசியல் வரலாற்றை ஜெயலலிதாவிடம் போய் நெருக்கமாக உரையாடியவர் என்ற பேச்செல்லாம் உண்டு. அவர் எழுத்துப் பணியில் இருந்தார். அவர் ஏன் திமுகவில் போய் சேர்ந்தார். மருது அழகுராஜ் ஏன் தவெகவில் போய் சேரவில்லை. காரணம் திராவிட அரசியலை விட்டு அவர் போக விரும்பவில்லை. ஆனால் இன்று விஜய்யிடம் போய் செங்கோட்டையன் சேர்ந்துள்ளார்.
அதிமுக இயக்கத்தை மீட்டெடுக்க நாங்கள் சபதம் எடுத்திருக்கிறோம், போராடுகிறோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி ஆகியோர் தேவர் ஜெயந்தி விழாவில் தெரிவித்தனர். ஓபிஎஸ் உடன் கூடவே இருந்தவர்கள் தான் வைத்தியலிங்கமும் மனோஜ் பாண்டியனும். மனோஜ் பாண்டியன் ஒரு முடிவெடுத்து திமுகவில் போய் ஐக்கியம் ஆயிட்டார். இப்போது வைத்தியலிங்கம் சொல்கிறார் 'எனக்கு நம்பிக்கை போயிருச்சு' என சொல்கிறார். அதேநேரம் எடப்பாடி அவருடைய பிடிவாதத்தில் இருந்து தளரவில்லை .
பாஜகவும் இவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என நினைக்கவில்லை. இதில் பாஜக காய் நகர்த்துகிறது. எடப்பாடி அப்படியே இருக்கட்டும். அவர் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்டு 15 முதல் 20 விழுக்காடு வாக்குகள் வாங்கட்டும். அதே நேரத்தில் பாஜக அதிமுகவிற்கு போகாத வாக்குகள் திமுகாவுக்கு போகும். அந்த சிறுபான்மை வாக்குகள் அல்லது திமுகவை பிடிக்காத வாக்குகள் இவையெல்லாம் தனித்து விடப்பட்டிருக்கு இல்லையா அது நாம் தமிழருக்கு போய் சேர்ந்து விடக்கூடாது என பாஜக நினைக்கிறது. திமுக எதிர்ப்பு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தவெக இடத்திற்கு பாஜக நகர்த்துகிறது.
இன்று விஜய் கிட்ட ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர் கூட்டம் எல்லாத்துக்கும் விசில் அடிக்குது. ஒரு கூட்டம் போட்டால் பல்லாயிரக்கணக்கான மக்களை சேர்க்க வைக்கிறது. இதை பார்த்த பாஜக விஜய்யை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வந்து விடலாமா அல்லது விஜய் தனியாக நிற்பது திமுகவை பாதிக்குமா? இந்த இரண்டே இரண்டு பார்வைதான் பாஜக வைத்திருக்கும் பார்வை. சீமானை கூட்டணியில் சேர்க்க முடியாது. சீமான் தனியாதான் நிற்கப் போறாரு. இந்த சூழலில் விஜய்யை வழிநடத்துவதற்கு அங்கு ஆள் இல்லை. தவெகவில் தற்போது வரை இருப்பவர்கள் யாரும் தேர்தல் களத்தை சந்திக்காதவர்கள். ஒரு அனுபவம் சார்ந்த ஒருவர் விஜய்யோடு இருந்தால் நல்லது என்று பாஜக மேலிடம் நினைத்திருக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி நான்கு வருடம் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு நான்கு வருடம் திமுக ஆட்சியில் செங்கோட்டையன் அமைதியாகதான் இருந்தார். ஏழு எட்டு வருடமாக எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொண்டு அமைதியா இருந்த செங்கோட்டையன் ஏன் இப்போது கலகம் பண்றாரு?
தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் அல்லது ஓபிஎஸ் மாதிரி கட்சியை ஒன்றாக்க நினைக்க வேண்டும். அதைவிடுத்து விஜய்யை நோக்கி செங்கோட்டையன் நகர்ந்துள்ளார். ஏனென்றால் தவெக என்பது பிறந்த குழந்தை. அவர்கள் எந்த தேர்தலையும் சந்திக்காதவர்கள். அங்கு போய் சேர்வதற்கு யார் உங்களுக்கு உத்தரவிட்டாங்க? அது முக்கியமான கேள்வி. எல்லாரும் பட்டவர்த்தனமா சொல்கிறார்கள் இது அமித்ஷாவுடைய உத்தரவுதான் என்கிறார்கள். செங்கோட்டையன் தவெகவில் சேருவதற்கு காரணம் இல்லாமல் இருக்காது. தவெகவின் முழு கட்டுப்பாடும் அமித்ஷா கையில் தான் இருக்கிறது. செங்கோட்டையனை சேர்த்தால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என தெரியாமலா விஜய் இருப்பார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது அவர் கூட வந்த ஒரு அரசியல் ஆளுமை பண்ருட்டி ராமச்சந்திரன். அதே போன்று செங்கோட்டையனை விஜய் கொண்டு வந்துள்ளார் என்ற ஒப்பீடுகளும் நடக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/27/132-2025-11-27-19-05-57.jpg)