இந்தியாவின் பெருமைமிகு விமானங்களில் ஒன்றான 'தேஜஸ்' துபாயில் வெடித்துச் சிதறி விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இந்தியாவின் சொந்த தயாரிப்பில் உருவான, விமானப்படையின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாக இருப்பது தேஜஸ் போர் விமானங்கள். நான்கு மற்றும் ஐந்தாம் ஜெனெரேஷனுக்கு இடைப்பட்ட 4.5 ஜெனரேஷன் போர் விமானமாக தேஜஸ் வரையறுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 2,200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விமானங்களை பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல் நிறுவனம் உருவாக்கி வருகிறது. தேஜஸ் போர் விமானங்கள் LIGHT COMBAT AIRCRAFT ( LCA ) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

081
The proud 'Tejas' that crashed in Dubai - will it question Indian quality? Photograph: (TEJAS)

இந்நிலையில் துபாயில் நடைபெற்ற ஏர் ஷோ நிகழ்ச்சிக்காக சென்றிருந்த தேஜஸ் விமானம் விமான சாகசத்தின் போது தரையில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. இதற்கான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஏர் ஷோவில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் பட்டியலில் இல்லாத தேஜஸ் விமானம் இன்று மூன்றாவது இடத்தில் பட்டியலில் இருந்தது. இந்திய நேரப்படி இன்று மதியம் 2.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisment

பொதுவாக போர் விமானங்கள் விபத்தில் சிக்கும் சூழலோ அல்லது நடுவானில் கோளாறோ ஏற்பட்டால் 'எஜெக்ட்' எனும் நடைமுறையின் கீழ் விமானிகள் பாதுகாப்புடன் கீழே குதிக்கும் உத்திகள் உள்ளது. ஆனால் இந்த விபத்து சம்பவத்தில் விமானி வெளியே குதித்ததாக இதுவரை உறுதி செய்யப்படாததால் விமானி உயிரிழந்ததாகவே அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்மட்ட விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

084
The proud 'Tejas' that crashed in Dubai - will it question Indian quality? Photograph: (TEJAS)

இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பதிவில், 'துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எஃப் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழப்பு ஏற்பட்டது. உயிர் இழப்புக்கு ஐ.ஏ.எஃப் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது மற்றும் இந்த துயரமான நேரத்தில் துயரமடைந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை மற்றும் கப்பற்படையில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் அதீத தொழிநுட்ப வசதிகள் கொண்ட ஒரு போர் விமானம் திடீரென விபத்தில் சிக்கியது எப்படி? எரிபொருளால் ஏற்பட்ட சிக்கலா அல்லது எஞ்சின் கோளாறா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் கருப்புப்பெட்டியை மீட்ட பிறகே விடை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

082
The proud 'Tejas' that crashed in Dubai - will it question Indian quality? Photograph: (TEJAS)

ஒவ்வொரு நாடுகளும் தங்களது போர் விமானங்களின் பலம் மற்றும் போர் தொழில்நுட்பங்களின் வீரியத்தை வெளிப்படுத்த ஏர் ஷோ நிகழ்ச்சிகளை முன்னெடுக்கின்றன. ஒரு நாட்டின் போர் விமான படைப்புகளை மற்ற நாடுகள் வாங்குவதற்கு வித்திடும் வகையில்தான் ஏர் ஷோ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனால் விமானங்களின் திறமைகளை பார்த்து மற்ற நாடுகள் தங்கள் நாட்டு விமானப்படைக்கு விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். 

இந்தியா அனைத்து துறைகளிலும் சுயசார்பு தயாரிப்புகளை ஊக்குவித்து வரும் நிலையில் விமானப்படை தொடர்பான பொருட்களை உள்நாட்டில் தயாரித்து ஏற்றுமதி செய்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் துபாயில் நடத்தப்பட்ட ஏர் ஷோ நிகழ்ச்சியின் கடைசி நாளில் இந்தியாவின் சொந்த படைப்பான தேஜஸ் வீழ்த்திருப்பது கவலையளிக்கும் ஒன்றாகும். இதனால் உலக அளவில் இந்தியாவின் போர்ப்படை உபகரணங்களின் மீதான தரம் மற்றும் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என அத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.