அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக பதவியேற்ற ஆறு மாதங்களில் இப்படி ஒரு தோல்வி வரும் என டிரம்ப் எதிர்பார்த்திருக்கமாட்டார். அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டாலும், தான் எதிர்பார்த்த முடிவு வராததால் டிரம்ப் இதில் தோல்வியடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
அலாஸ்காவில் டிரம்பும் புடினும் தங்களது வரலாற்றுச் சந்திப்பை நேற்று நடத்தினர். டிரம்ப், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக வந்தபிறகு முதல்முறையாக புடினை நேரடியாக சந்திக்கபோகிறார் என்பதாலும், புடின், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, அமெரிக்காவிற்கு முதல் முறையாக வருவதாலும் இந்த சந்திப்பு உலகம் முழுவதும் கவனத்தைப்பெற்றது. உக்ரைனில் போர்நிறுத்ததை ஏற்படுத்த ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதுதான் இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இல்லாமல் உக்ரைன் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது ஒரு முரணாக இருந்தாலும், டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு உக்ரைனின் கோரிக்கைகளை புடினிடம் வைத்ததாகவும், அந்த கோரிக்கைகளுக்கு புடின் தனது உடன்பாட்டை தெரிவிக்கவில்லை என்பதாலும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாக இரு நாட்டு அரசுகளும் அறிவித்தன.
அலாஸ்கா சந்திப்பில் என்ன நடந்தது?
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது என வெளிப்படையாகவே தெரிந்தாலும், திரைமறைவில் என்ன பேசப்பட்டது, என்ன ஒப்புக்கொள்ளப்பட்டது என இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்ட பெருவாரியான கேள்விகளை டிரம்பும் புடினும் புறக்கணித்துவிட்டனர். அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் உள்ள ஏங்கரேஜ் நகரத்தில் நடந்த இந்த சந்திப்பிற்கு வருகைதந்த புடினுக்கு, டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.
நெருக்கிய நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக்கொண்டால் மனநிலை எப்படி இருக்குமோ, அதே மனநிலையில் தான் டிரம்பும், புடினும் இருந்தனர். இருவரும் பரந்த சிரிப்பையும், மகிழ்ச்சியையும், கைகுலுக்களையும் பரிமாறிக்கொண்டனர். அமைதியான சுற்றுச்சூழலும், நிறைவான வரவேற்பும், இந்த சந்திப்பில் ஒரு முக்கியமான முடிவை எட்ட சாத்தியக்கூறுகள் இருப்பதை காட்டியது. டிரம்ப், புடின் இருவரும் அருகருகே நின்று கேமெராக்களுக்கு போஸ் கொடுத்தனர்.
டிரம்ப் - புடின் இடையே தொடர்ச்சியாக நடந்த தொலைபேசி உரையாடல்களை தொடர்ந்து, இந்த நேரடி சந்திப்பில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக ஒரு சுமுக முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தன்னுடைய வாகனத்தில் அமரவைத்து புடினை அழைத்துசென்றதன் மூலம், புடின் தனக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதை டிரம்ப் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தினார். அமெரிக்காவின் எதிரி நாடான ரஷ்யாவின் அதிபர் புடின் வந்திறங்கியதோ அமெரிக்க ராணுவ தளத்தில், அவர் ஏறி அமர்ந்து சென்றதோ அமெரிக்க அதிபர் வாகனத்தில், இந்த சந்திப்பு நடந்ததோ அதே ராணுவ தளத்தில்...இந்த நிகழ்வுகள் எல்லாம் பகையிலேயே இருக்கும் அமெரிக்க-ரஷ்ய உறவில் நடக்கும் என நாம் கற்பனைக்கூட செய்திருக்கமாட்டோம்.
டிரம்ப் அதிபராக வந்தவுடன் அமெரிக்காவின் ரஷ்ய கொள்கை பெருமளவு மாறிவிட்டதன் அறிகுறிகளாகவே இந்த நிகழ்வுகள் இருக்கின்றன. புடினுக்கு அளித்ததுபோல் ஒரு வரவேற்பை டிரம்ப் இதுவரை எந்த தலைவருக்கும் அமெரிக்க மண்ணில் அளித்ததில்லை. இந்த வரலாற்று வரவேற்புக்கு பிறகு, இருவரின் பேச்சுவார்த்தையும் தொடங்கியது. முடிவு எப்படி வரும் எனத் தெரியாமல் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், பேச்சுவார்த்தையின் முடிவு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது.
ரஷ்யா-உக்ரைன் போரில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதே முடிவாக வந்தது. புடினின் நோக்கத்திற்கேற்ப டிரம்பால் செயல்படமுடியவில்லை, அவரால் எந்த உத்தரவாதமும் கொடுக்கமுடியவில்லை. ரஷ்யா-உக்ரைன் போரில் ஒரு முடிவை இந்த சந்திப்பால் எட்டமுடியாது என நாம் முன்பே சொன்னது போல் தான் நடந்துள்ளது. பதவிக்கு வந்த ஆறு மாதத்தில் ஐந்து போர்களை தான் நிறுத்திவிட்டதாக பெருமையாக சொன்ன டிரம்பிற்கு ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு சோதனையாகவே அமைந்தது. அமெரிக்காவை அதிகமாக நம்பும் உக்ரைன் ஒருபுறம், புடின் மீது தான் வைத்திருக்கும் நட்பு மறுபுறம் என டிரம்ப் இந்த போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவந்துவிடலாம் என நம்பினார்.
உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிகமாக செலவுசெய்வது மட்டுமின்றி, தனது ராணுவ உபகரணங்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. தான் விரும்புவது போல் உக்ரைனில் உள்ள கனிம வளங்களை கைப்பற்ற போர் ஒரு தடையாக இருக்கலாம் என டிரம்ப் நினைக்கக்கூடும். ஆகையால், எப்படியாவது ரஷ்யா - உக்ரைன் இடையே போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில், டிரம்ப் கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை புடினிடம் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஆனால், புடினின் நோக்கத்தை புரிந்துகொள்ளமுடியாத டிரம்ப், அவரை நேரில் சந்திக்க எடுத்த முடிவின் படி நேற்று அலாஸ்காவில் சந்தித்துவிட்டார்.
உற்சாகமடைந்த புடின்; ஏமாற்றமடைந்த டிரம்ப்:
புடினுக்கு இந்த அலாஸ்கா பயணம் ஒருவகையில் புதிய உற்சாகத்தை அளித்தது என்றே கூறலாம். ஏனென்றால், ரஷ்ய-உக்ரைன் போருக்கு பிறகு, புடின், அமெரிக்காவால், ஐரோப்பிய ஒன்றியத்தால், மற்றும் பல நாடுகளால் தனித்து விடப்பட்டார். இந்த காலகட்டத்தில், ரஷ்யா மிகக்கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொண்டதுமட்டுமல்லாமல், வட கொரியா, சீனா, ஈரான் போன்ற ஒரு சில நாடுகளின் ஆதரவை மட்டுமே பெற்றது. மேலும், புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைன் போர் காரணமாக, கைது வாரண்ட் பிறப்பித்தது. இப்படி பல சர்வதேச அழுத்தங்களால் நெருக்கடியில் இருந்த புடின், உள்நாட்டில் தனக்கு இருந்த ஆதரவு மூலம் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்.
டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தது புடினுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. பல நெருக்கடியில் இருந்த புடினை, டிரம்பே அமெரிக்காவிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது ஒரு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. டிரம்ப் தன்னை ஆதரித்து, நெருக்கமாக இருப்பதால், ஐரோப்பிய நாடுகளும், நேட்டோவும் தன் மீதுள்ள எதிர்ப்பை குறைத்துக்கொள்வார்கள் என புடின் நம்புகிறார். ஆனால், அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் புடின் இறங்கிவருவார் என டிரம்ப் எதிர்பார்த்து, தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்த அலாஸ்கா சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் நடந்தது.
வேடிக்கையென்னவென்றால், இந்த மூன்று மணிநேர சந்திப்பு குறித்து, டிரம்பும், புடினும் 15 நிமிடங்களுக்கு குறைவாகவே பேசினர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில்தான், ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என இருவரும் தெரிவித்தனர். தாங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் என்ன முடிவுகள் எடுத்தனர் என்பது இப்போதுவரை மர்மமாகவே உள்ளது.
டிரம்புடன் தான் கொண்டிருக்கும் நட்பை புகழ்ந்துபேசிய புடின், அமெரிக்கா- ரஷ்யா உறவு, பனிப்போருக்கு பிறகு மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது என தெரிவித்தார். போருக்கு பின்னணியில் இருக்கும் 'முதன்மை காரணங்கள்' நீக்கப்பட்டால்தான் போர் முடிவிற்கு வரும் என புடின் கூறினார். உக்ரைனில் மேற்கத்திய ஆதிக்கத்தை குறைப்பது மற்றும் நேட்டோ ஆதிக்கத்தை குறைப்பது போன்றவை தான் புடின் சொல்லும் முதன்மை காரணங்கள். அதுமட்டுமின்றி, தற்போது கைப்பற்றியிருக்கும் உக்ரைனிய பகுதிகளை ரஷ்யா தனதாக்கிக்கொள்ள விரும்புகிறது.
புடினை பொறுத்தவரை ரஷ்யாவிடமிருந்து பிரிந்து சென்ற உக்ரைனை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளவேண்டும் என விரும்புகிறார். இதன்மூலம், உக்ரைனின் ஜனநாயகத்தையும், தனது எல்லையில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தையும் குறைக்கமுடியும் என எண்ணுகிறார். இதற்கு தற்போதுவரை உக்ரைன் சம்மதிக்கவில்லை. ஒற்றை நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்கமுடியாது என்று உக்ரைன் உறுதியாக இருக்கிறது. டிரம்புடனான சந்திப்பில் புடின், அவரது நோக்கத்தை நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும், டிரம்பால் உடனடியாக ஆதரவு தெரிவிக்கமுடியாததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருப்பதாகவும் தெரிகிறது.
இனி அடுத்து என்ன நடக்கும்?
டிரம்ப் கூறிய பல கருத்துக்கள் மூலம், அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்கமுடிகிறது. மற்ற நாடுகளின் விவகாரத்தில், தனது வரி ஆயுதத்துடன், தான் தன்னிசையாக முடிவு எடுப்பதுபோல இந்த சந்திப்பில் எடுக்கமுடியவில்லை என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றே கூறலாம். தான் சந்தித்தது, தன்னை விட மிகக் கடுமையான, கடினமான தலைவர் என்பதால் டிரம்ப் சிறிது நிதானமாக கையாண்டுள்ளார். டிரம்ப், தான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும், நேட்டோவுடனும் விரைவில் பேசப்போவதாக அறிவித்துள்ளார். ஏனென்றால், இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, நேட்டோவும் உக்ரைனும் ஒப்புக்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார்.
'ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த ஒப்பந்தமும் இல்லை. நாங்கள் ஒப்பந்தத்தை எட்டும் நிலைக்குச் செல்லவில்லை' என்றார் டிரம்ப். டிரம்பின் கூற்றுப்படி, இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், இன்னும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தொடரும் எனத் தெரிகிறது. டிரம்ப் மேலும் சில ஐரோப்பிய தலைவர்களிடம் பேசுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் செயல்படுகிறதோ, அந்த ஒன்றியத்துடன் பேசவேண்டிய நிலை டிரம்பிறகு ஏற்பட்டுள்ளது. டிரம்ப், ஐரோப்பிய தலைவர்களுடன் சேர்ந்து புடினை சமாளிப்பாரா, உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுவாரா, அல்லது புடினின் நோக்கம் நிறைவேற அவருக்கு ஆதரவளிப்பாரா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும்.
இம்முறை, புடின் அமெரிக்கா வந்ததுபோல, அடுத்தமுறை டிரம்ப் ரஷ்யாவிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம். 'மாஸ்கோவில் மீண்டும் சந்திப்போம்' என புடின் தெரிவித்துள்ளார். ஆகையால், டிரம்ப் விரைவில் ரஷ்யா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு முன்பு, ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ரஷ்யா மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது...இருந்தாலும், ஆக்கபூர்வமான கருத்துக்களாலும், புடினுடன் நட்புறவு மீண்டும் மலர்வதாலும், டிரம்ப், ரஷ்யா மீது மேற்கொண்டு பொருளாதார தடைகளை விதிக்கமாட்டார் என்று நம்பப்படுகிறது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், புடினுடன் நட்பு மீண்டும் மலர்ந்துள்ளதால், டிரம்ப் இதை வெற்றியாகவே பார்க்கிறார். இதனால், இந்தியா உட்பட, பல ரஷ்ய நட்பு நாடுகளின் மீது தான் ஏவிய வரி ஆயுதத்தை திரும்பப்பெறுவாரா? பொறுத்திருந்து பாப்போம்.
-அழகு முத்து ஈஸ்வரன்