பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் ஆணவ கொலைகளுக்கு இதுவரை பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தற்போது 'டிக் டாக்' செயலியும் அதில் இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல், இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக தீவிர போராட்டங்களை தூண்டியுள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் ஒரு தந்தை தன்னுடைய சொந்த மகளை சுட்டுக்கொன்ற சம்பவம் தான் தற்போது அங்கு பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு தந்தை, தான் பெற்ற மகளை கொல்லும் அளவிற்கு துணிந்ததற்கு பின்னணியில் 'டிக் டாக்' செயலி இருப்பதாக கூறப்படுவது சர்ச்சையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலி பெரும் விவாதத்தையும், பல தடைகளையும் பெற்றிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதை பயன்படுத்தியதற்காக சொந்த மகளை கொல்லுமளவிற்கு சென்றிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதுதான் பெருவாரியான மக்களின் மனநிலையாக உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மிக முக்கியமான நகரங்களில் ஒன்று ராவல்பிண்டி. தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள இந்த நகரத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த தன்னுடைய 16 வயது மகள், தன் பேச்சை கேட்காமல் தொடர்ந்து டிக் டாக் செயலியை பயன்படுத்திவந்ததற்காக அவளை சுட்டுக்கொன்றதாக அவரது தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னுடைய மகள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவது தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதை அவரிடம் தான் பல முறை சொல்லியும் அவர் கேட்காததால் அவரை சுட்டுக்கொன்றதாக தெரிவித்துள்ளார்.
ஒருபுறம், தந்தை தன்னுடைய மகளை கொலைசெய்திருந்தாலும், மற்றொருபுறம், இந்த சதித்திட்டத்தில் அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு, ஒட்டுமொத்த குடும்பமும், இது கொலையில்லை, தங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும், தனது மகளை கொலைசெய்துவிட்டு தந்தை தப்பிச் சென்றுவிட்டார். ஒட்டுமொத்த குடும்பமும் இது தற்கொலை என கூறினாலும், தந்தை திடீரென காணாமல்போனது, போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பலகட்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு, போலீசார் தந்தையை கைதுசெய்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு, அவரின் குடும்பம், இது கொலைதான் என்றும், தந்தை 'நான் தான் என் மகளை சுட்டுக்கொன்றேன்' என ஒப்புக்கொண்டனர். தங்கள் மகள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் குடும்பத்தின் கெளரவம் பாதிக்கப்படுவதால் அவரின் தந்தை அவரை ஆணவக்கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதற்கெல்லாமா ஒரு குடும்பம், கெளரவம் பார்த்து தங்களின் மகளை கொலைசெய்வார்கள் என நாம் கேட்கும் கேள்விக்கு, இது ஒரு சாம்பிள் தான் என்றும், பாகிஸ்தானில் இது போன்ற சம்பவங்கள் மிக சாதாரணமாக நிகழ்கின்றன என பதில் வருகிறது. சாதியின் பெயரில் எப்படி இங்கு ஆணவக்கொலை நடக்கிறதோ, அதேபோன்று 'குடும்ப கௌரவத்தை' காப்பாற்ற அங்கு ஆணவக்கொலை நடக்கிறது. பாகிஸ்தானில் இப்படி நடக்கும் ஆணவைக்கொலைகளுக்கு பெரும்பாலும் பெண்களே பலியாகின்றனர்.
ஆணவக்கொலைகளுக்கு பிற்போக்கான சிந்தனை முறைதான் மிக முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதுபோன்ற சம்பவங்களை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. பாகிஸ்தானில் இதுபோன்ற ஆணவக்கொலைகள் சாதாரணமாக நிகழ்வதாகவும், இது அரசிற்கு தீவிர நெருக்கடிகளை தருவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தரவுகளின் படி, 2024ஆம் ஆண்டு மட்டும், சுமார் 346 ஆணவக்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தோராயமாக, ஒவ்வொரு நாளும் ஒரு ஆணவக்கொலை நடக்கிறது.
இது பதிவான எண்ணிக்கை மட்டும்தான். உண்மையில் ஒரு வருடத்திற்கு சுமார் 1,000 ஆணவக்கொலைகள் நடப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டிக் டாக் செயலியை பயன்படுத்தியத்திற்காக தன் மகளை 'ஆணவக்கொலை ' செய்த தந்தையில் தொடங்கி, இன்னும் பல வெளிவராத சம்பவங்கள் வரை, இதில் பெண்கள்தான் அதிகம் இறக்கின்றனர். மேலும், தற்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளம்பெண்கள் அதிகம் குறிவைக்கப்படுவது அங்கு மேலும் பதற்றமான சூழலை உருவாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம், 17 வயது பெண்ணான சனா யூசப் இதேபோன்றுதான் கொல்லப்பட்டார். யூசப், பாகிஸ்தானில் ஒரு டிக் டாக் பிரபலமாக இருந்தவர். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அவரை டிக் டாக்கில் பின்தொடர்ந்தனர். யூசபிற்கு நீதி கேட்டு பல பெண்கள் பாகிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூசபின் புகைபடத்தை ஏந்தி போராடிய அவர்கள், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பெருகும் வன்முறையை ஒடுக்கவேண்டும் என கோஷமெழுப்பினர். யூசப், டிக் டாக்கை தவறாக பயன்படுத்தவில்லை...அவருக்கு தெரிந்த தோல் பராமரிப்பு பொருட்களை மற்றவர்களிடம் பகிரவும், பாகிஸ்தானின் தொன்மையான ஆடைகளை பற்றி பேசவும், அவருக்கு பிடித்தமான சிற்றுண்டி சாலைகளை பற்றி பேசவும் தான் அவர் டிக் டாக் பயன்படுத்திவந்தார்.
ஒருபுறம், இது போன்ற வன்முறைகளுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாகப்படுகின்றன என அரசு தெரிவித்தாலும், மறுபுறம், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், ஆணவக்கொலைகளும் தொடர்கதையாகிவருவது அங்கு மேலும் தீவிர போராட்டங்களை தூண்டியுள்ளது. பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான தொடரும் வன்முறை அங்கு நிலவும் தீவிர ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீட்டு பெண்கள் சுதந்திரமாக இயங்குவதில் விரும்புவதில்லை எனவும், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் திருமணம் போன்ற விவகாரங்களில் பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டிய நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கட்டுப்பாடு, பெண்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் பொருந்தும் என்றும், மீறினால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கின்றனர். இதன், சமீபத்திய எடுத்துக்காட்டுதான், டிக் டாக் பயன்படுத்தியதற்காக பெற்ற மகளையே தந்தை சுட்டுக்கொன்றது. டிக் டாக் மூலம் நிறைய பார்வையாளர்களும், வருமானமும் வருவதால் இந்த செயலி பாகிஸ்தான் பெண்களிடையே மிகவும் பிரபலமாகிவருகிறது. மறுபுறம், டிக் டாக்கில் பல விரும்பத்தகாத வீடியோக்கள் பதிவிடப்படுவதாகவும், அது பாகிஸ்தானில் உள்ள மத நடைமுறைக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவிக்கும் பாகிஸ்தான் அரசு, இந்த செயலியை தடைசெய்ய போவதாகவும் தெரிவித்துவருகிறது.
இதற்கு முன்னர், பாகிஸ்தான் அரசு டிக் டாக் செயலியை பல முறை தற்காலிகமாக தடை செய்திருப்பதும், பின்னர் அந்த தடை விலகிக்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- அழகு முத்து ஈஸ்வரன்