2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. திமுக கூட்டணியினர் திடமாக தேர்தலை சந்திக்க தயார் என தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, பிரம்மாண்ட கட்சி விரைவில் தங்கள் கூட்டணியில் இணையும் என தெரிவித்து வருகிறது. தங்கள் தரப்பிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார்.
ஏற்கனவே அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தலைவிரித்து ஆடும் நிலையில் அண்மையில் மூத்த அதிமுக நிர்வாகியும், மூத்த முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. சசிகலா, டி.டி.வி.உடனான பிணக்கு, ஓபிஎஸ் வெளியேற்றம் என ஏற்கனவே உள்ள பழைய சிக்கல்களுக்கு மத்தியில் அதிமுவிகவினருக்கு புதிய சிக்கலை தந்திருக்கிறது திமுகவில் அதிமுக பிரபலங்களின் இணைவு என்பது.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனும், அதிமுக எம்.எல்.ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன்,நேற்று( 04-11-25) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்ததற்கு காரணம், 'இன்று திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற ஒரு தலைவராகவும், தமிழர்களுக்கு போராடுகின்ற ஒரு தலைவராகவும், தமிழர்களின் உரிமையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராகவும் முதல்வர் இருக்கிறார். அதனால் சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். எஞ்சிய வாழ்க்கையில் திராவிட கொள்கைகளை பாதுகாக்கக்கூடிய இயக்கமாகவும், அதை தலைமையேற்றுக்கூடிய தலைவருடைய சிந்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தொண்டனாக என்னை இணைத்து பணியாற்ற வந்துள்ளேன்' என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே திமுகவில் முக்கிய அமைச்சர் பொறுப்புகளில் உள்ளவர்களில் பலர் அதிமுகவில் இருந்து பயணப்பட்டவர்களே. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பேரிடர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் அமைச்சர் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/05/06-2025-11-05-19-29-19.jpg)
இருந்தாலும் ஜெ.வின் மறைவுக்கு பிறகு அரசியல் அடைக்கலம் தேடி திமுகவிற்கு வரும் அதிமுகவினர் லிஸ்டு சற்று அதிகரித்துள்ளது தான் அதிமுவினரின் கலகத்திற்கு காரணமாகியுள்ளது. ஜெ.வின் மறைவுக்கு பிறகு அமமுகவில் சிறிது காலம் பயணித்த செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்து அமைச்சர் ஆனார். ஆனால் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் இப்போது வரை கரூர் திமுகவின் முக்கிய முகமாக செந்தில்பாலாஜி உள்ளார். அதேபோல அதிமுகவில் அடையாளம் காணப்பட்டு பின்னர் அமமுக கூடாரத்தில் இருந்த தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்து தற்போது தேனி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/05/07-2025-11-05-19-29-44.jpg)
இப்படியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, தோப்பு வெங்கடாச்சலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், அதிமுகவில் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியராகவும், ஜெ.வின் பிரச்சார பேச்சுக்களை தொகுத்தவருமான மருது அழகுராஜ் என அண்மையில் திமுகவில் இணைந்தவர்கள் லிஸ்ட் படு நீளம்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்-ன் கனவு பலிக்காமல் போகும் என அவரை ஆதரித்தவர்களும் திமுக பக்கம் நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்தியலிங்கமும் அரசியலில் அடுத்த ஆப்சன் என்ன என்ற நிலைக்கு போயிருப்பதாக கூறப்படுகிறது.
இணைவு தொடருமா என்பதும், இனியும் திமுகவிடம் அடைக்கலம் தேடி அதிமுக முகங்கள் நகர்ந்தால் அதிமுக தலைமை எப்படி சமாளிக்கும் என்பதும் தேர்தல் நெருங்குகையில் தான் தெரியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/05-2025-11-05-19-28-56.jpg)