The 'art movement' that has reached its peak - Chevalier Thota Tharani Photograph: (Thota Tharani)
சினிமா என்பதே ஒரு நவீன கலை வடிவம் தான். அந்த கலைக்குள்ளேயே கொட்டிக் கிடக்கும் ஒரு பிரம்மாண்ட பிரிவுதான் தான் கலை இயக்கம் (Art Direction). கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டு வருவது எப்படி ஒரு நடிகரின் வேலையோ, காட்சிகளை கண் முன் நிறுத்துவது எப்படி ஒளிப்பதிவாளரின் வேலையோ, சூழலுக்கான இசையைக் கோர்ப்பது எப்படி இசையமைப்பாளர் வேலையோ அதேபோல் போல கதையின் சூழலை கண் முன்னே கொண்டுவருவது கலை இயக்குனரின் வேலை. அது சிறிய குடிசையாகவும் இருக்கலாம் பிரமாண்ட அரண்மனையாகவும் இருக்கலாம் கண் முன் தத்துரூபமாக கொண்டுவரும் நுணுக்கம் தான் கலை இயக்கம்.
ரொம்ப சிம்பிளாக சொன்னால் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் தனது அப்பா ஊரில் இருந்து வருவதை அறிந்து கொண்ட கமல் '' டேய் கலை அலங்காரம்'' என்பார். உடனே அந்த இடத்தில் ஹாஸ்பிடல் பெட்கள், குளுக்கோஸ் ஸ்டாண்ட், பச்சை துணி என உண்மையான மருத்துவமனையை போல அந்த இடம் உருவாகும். இப்போது புரிந்திருக்கும் கலை இயக்கம் பற்றி.
சினிமாவில் நடிகர்கள், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்டோருக்கு கிடைக்கும் வெளிச்சம் சில நேரங்களில் கலை இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லை. முற்றுமுழுதாக கிடைக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. கங்கா, தோட்டா தரணி, சாபு சிரில், நாகராஜ், முத்துராஜ், கிரண், ராமலிங்கம் என இப்படி பலர் கலை இயக்கத்தில் வெளிச்சம் கண்டுள்ளனர். இன்னும் பலர் அத்துறையில் சாதித்து வருகின்றனர். கலை இயக்கம் தனிப்பட்ட ஒருவரின் முயற்சி மட்டும் கிடையாது. ஆர்ட் டைரக்டர், அசிஸ்டன்ட் ஆர்ட் டைரக்டர், செட் அசிஸ்டன்ட், கார்பெண்டர், பெயிண்டர், மோல்டர், மேஸ்திரி என பலரின் கூட்டு முயற்சி ஆகும்.
இந்நிலையில் கலை இயக்கம் உச்சம் பெறும் வகையில் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை கலை இயக்குனர் தோட்டா தரணி பெற உள்ளார். பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
1949 டிசம்பர் 16 ஆம் தேதி சென்னையில் பிறந்த தோட்டா தரணி அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பின்னர் அரசு கலைக்கல்லூரியில் 1971 ஆம் ஆண்டில் சுவரோவியத்தில் பட்டயப் படிப்பை முடித்தார். ஓவியம் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் கொண்டார். காரணம் தந்தை சினிமா துறையில் கலை இயக்கத்தில் பணியாற்றிய நிலையில் 6 வயதிலேயே சினிமா செட்களை பார்க்கும் வாய்ப்பு தோட்டா தரணிக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் அஞ்சலிதேவி நடித்த தெலுங்கு படமான 'சுவரன சுந்தரி' என்ற படத்தின் பாடல் காட்சி உருவாகும் செட்டுக்கு போகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கைலாயம் போல புகை, உப்பு மேடுகள், ஒளிரும் ஜிகினா என அந்த செட் வடிவமைப்பை மெய்மறந்து பார்த்த தோட்டா தரணி தனது கலை மீதான ஆர்வத்தை அங்கிருந்து தொடங்கியுள்ளார்.
பலரிடம் அசிஸ்டன்டாக பணியாற்றிய தோட்டா தரணிக்கு 'நாகமல்லி' என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரேவொரு செட்டை மட்டும் அமைக்கும் பணி கிடைத்து ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போட்டுள்ளார். அதை பார்வையிட 'சந்திரலேகா' என்ற அன்றைய பிரம்மாண்ட படத்தின் கலை இயக்குனரான ஏ.கே.சேகர் நேரில் சென்று தோட்டா தரணியை பாராட்டியுள்ளார். அவர் கொடுத்த உற்சாகம் மேலும் பல படங்களில் கலை இயக்குனராக தோட்டா தரணியை பரிமளிக்க வைத்தது.
பப்ருவாகனா, ஜென்டில்மேன், திருடா திருடா, பாம்பே, தளபதி, இந்தியன், முதல்வன், உள்ளம் கேட்குமே, தசாவதாரம், சிவாஜி, கடைசி விவசாயி, பொன்னியின் செல்வன் இப்படி பல திரைப்படங்கள் இவரது கைவண்ணத்தின் கலை இயக்கத்தில் உருவானவை. இதில் நாயகன், இந்தியன் ஆகிய இரண்டு படங்கள் கலை இயக்கத்திற்கான தேசிய விருதை பெற்றன. 2001 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார். அதேபோல் நந்தி விருது, தமிழ் மற்றும் கேரளாவில் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
கலை இயக்கத்தில் ப்ரெசென்ட்ஸ் ஆஃப் மைண்ட் என்பது அதிகம் தேவை. காரணம் சூட்டிங் செல்லும் இடங்களில் எல்லாப் பொருட்களும் உடனே கிடைத்துவிடாது. இதை உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால் முதல்வன் திரைப்படத்தில் வரும் 'அழகான ராட்சசியே' பாடலில் பானைகள் குவியல் குவியலாக பிரமாண்டமாக வரும். ஆனால் சூட்டிங் சென்ற இடத்தில் உண்மையான பானைகள் குறைந்த அளவிலே இருந்ததால் என்ன செய்வது எனப் படக்குழுவினர் தவித்தனர். ஷங்கர் படம் என்பதால் அந்த பிரம்மாண்டமும் குறையக்கூடாது. பானையை அவசரமாக பாதுகாப்பாக வேறு இடத்தில் இருந்து கொண்டு வரவும் முடியாது. இதனால் உடனடியாக யோசித்த தோட்டா தரணி, கேமராவுக்கு அருகில் உண்மையான பானைகளை செட் செய்து, தூரத்தில் உள்ள பானைகளுக்கு பதிலாக பானை அளவிலான பந்துகளை ஆயிரக்கணக்கில் வாங்கி வர்ணம் பூசி பயன்படுத்தி உள்ளார். எந்த அளவிற்கு நுணுக்கமான கலை யோசனைகளை கொண்டவர் என்பதற்கு இது ஒரு சான்று. மேலும் சிவாஜி படத்தில் இவர் போட்ட 'சஹானா சாரல் தூவுதோ' பாடலில் வரும் கண்ணாடி செட் மிகவும் பேசுபொருளான பிரம்மாண்ட செட் ஆகும்.
அவரின் இத்தனை கலை யுத்திகளுக்கும், கலை பணிக்கும் மகுடம் சூட்டும் வகையில் வந்து சேர்ந்துள்ளது ஒரு சேதி. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இவ்விருது தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும், கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்குகிறார்.
சிகரம் தொட்டுள்ளது 'கலை இயக்கம்' தோட்டா தரணியால்.
Follow Us