Skip to main content

“நானும் அதில் பாதிக்கப்பட்ட பெண் தான்”- திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தமிழச்சி தங்கபாண்டியன்

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் திமுக மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் கேள்விகளாக கேட்கப்பட்டன. அப்போது அவர்...

 

thamizhachi thangapandian

 

வேட்பாளர் தேர்வின்போது என்ன சாதி, எவ்வளவு செலவு செய்வார்கள் என்றுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. 
 

என்னுடைய தந்தை வே.தங்கபாண்டியன் தலைமையாசிரியராக இருந்தார். அப்போது எதை வைத்து அவருக்கு எம்.எல்.ஏ வேட்பாளராக வாய்ப்புக் கொடுக்கப்பட்டது? தி.மு.க-வில் ஒரு அடிப்படைத் தொண்டன் கூட பதவிக்கு வரலாம். பதிவுகளை எடுத்துப் பாருங்கள் நிறைய உதாரணங்கள் இருக்கிறது. பொத்தாம்பொதுவாக பணபலத்தைப் பார்த்து வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதெல்லாம் அடிப்படையற்றக் குற்றச்சாட்டு. மற்ற கட்சிகளைவிட திமுக-வில் தான் கட்சியில் என்ன பங்களிச்சுயிருக்காங்க? எப்படி செயல்படுறாங்க? பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வாங்க என்பதையெல்லாம் பார்த்து வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். 
இன்றைக்கு, முதல் தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்வி படிப்பதிலிருந்து பெண்களுக்கு சொத்துரிமை, அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு என திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இதுபோன்ற நலத்திட்டங்கள் கையெழுத்தாகியிருக்கும். இந்த நலத்திட்டங்களையெல்லாம் மறந்துவிட்டு தேர்தல் வரும்போதெல்லாம் குற்றச்சாட்டுகளைக் கூறுவது அபத்தமானது.  
 

திமுக-வின் எம்.பி-க்கள் நாடளுமன்றத்தில் பேசாத விஷயமாக எதாவது இருக்கிறதா?
 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வேலையென்ன? தமிழக மக்களின் நலன், அவர்களின் தேவை, உரிமைகள் மற்றும் கோரிக்கை, மேலும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்காக குரல்கொடுத்து அதற்கான விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்.  திருச்சி சிவா அண்ணன் தனிநபர் மசோதா மூலம் திருநங்கைகளுக்கான சட்டத்தைக் கொண்டுவந்தார். அதிமுக-வின் 40 எம்.பி க்கள் நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன செய்தார்கள்? காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்னு பாட்டுப் பாடுனதுதான் மிச்சம். கலையில் நீட் தேர்வு அப்படி இப்படினு பேசுறாங்க, மதியம் மத்திய அரசுக்கு ஆதரவாக ஒப்புதல் கொடுக்கிறார்கள். காலையில் ஒன்றைச் சொல்லிவிட்டு மாலையில் அதை மாற்றி சொல்லுவதெல்லாம் பழையக் கதை, 10 மணிக்கு ஒன்று சொல்லிவிட்டு 10.01 க்கு மாற்றிச் சொல்லுவதுதான் இவர்களுடைய நடப்பு நிலைபாடு. 
அந்தவகையிலே, முரசொலி மாறனிலிருந்து துவங்குகிறது மாநிலங்களுக்கான உரிமைக்குரல். இன்றைக்கு அதை மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். தமிழை துணை ஆட்சி மொழியாக கொண்டுவரவேண்டும் என்று சொல்லுவது, ஜி.எஸ்.டி-யை ஒழுங்குபடுத்துவது, பொருளாதார நிபுணர்குழு அமைப்பது என எல்லா விதத்திலும் திமுக-வின் தேர்தல் அறிக்கை பாராளுமன்றத்தில் தமிழர் நலனை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

 

thamizhachi thangapandian



தென்சென்னையைப் பொருத்தவரைக்கும் எது பிரதான பிரச்சனையாக நினைக்குறீங்க?
 

நான் செல்லும் இடங்களில் மக்கள் கூறுவதும், நானாக அறிந்துகொண்டதுமான பிரச்சனைகளில் பிரதானமானவை சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகள்தான் வெள்ளம் வரும்போது அதிகமாக பாதிக்கப்படுகிற தாழ்வான பகுதி. நானும் அதில் பாதிக்கப்பட்டப் பெண் தான். இந்த இடங்களை இயற்கையாகவே சமன்படுத்த வேண்டுமென்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான இயற்கை சூழலோடு வைக்கவேண்டும்,  அடுத்ததாக வெள்ளத்தில் வருகின்ற தண்ணீரை பி- கெனால் வழியாக திருப்பிவிட்டு கோவளம் கடற்கரையில் உள்ள முகத்துவாரத்தில் கொண்டுச் சேர்த்தால் பயன்படும், இதையெல்லாம் ஏற்கனவே எங்கள் கட்சியினர் பேசியிருக்கிறார்கள். கடல் நீரை குடிநீராக மாற்றும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர். அவர் அமைத்த முதல் வாட்டர் டேங்க் இருக்கு. அது இந்த தொகுதி மக்களுக்கான மிகப் பெரிய திட்டம். இரண்டாவது வாட்டர் டேங்க் அமைப்பது குறித்து சென்ற தேர்தலின் போதே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டி.கே.எஸ் கூறியிருந்தார். எங்களுக்கு அப்போது வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது இருக்கிற உறுப்பினர் அதை முன்னெடுக்கவில்லை. மேலும், விபத்துக்கான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அவர்களுடைய தேவையாக இருக்கிறது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை. பெருங்குடி குப்பைக் கிடங்கில் உள்ள கழிவுகளைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராமல் எப்படி அகற்றுவது என்ற விஷயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இவற்றையெல்லாம் நான் முன்னெடுப்பேன். 
 

சென்னையின் பூர்வகுடி மக்களை வெளியேற்றுவதில் திமுக-வும் அதிமுக-வும் தொடர்ந்து ஈடுபடுகின்றன என்கிற குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீங்க?
 

அப்படி பொதுவாக சொல்லிவிட முடியாது. நேற்று சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சாமியார் தோட்டம், நெருப்பு மேடு போன்ற பூர்வ குடிகள் வசிக்கிற பகுதிகளுக்கு சென்றிருந்தேன். அப்போது எம்.எல்.ஏ மாசு உடனிருந்தார். அந்த மக்கள் அகற்றப்பட கூடாது என்று குரல் கொடுத்து அந்த மக்கள் அங்கேயே வாழ்வதற்கான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார் மாசு. குடிசை மாற்று வாரியமும் அவர்களை நல்லமுறையில் வாழவைக்க வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்டது தான். அதற்கு விரும்பாதவர்களை திமுக எப்போதும் வழுக்கட்டாயமாக வெளியேற்றியதே இல்லை.