Skip to main content

'முத்தலாக் விவகாரம்' தேன் கூட்டில் மத்திய அரசு கைவைத்துவிட்டது - தமிமுன் அன்சாரி ஆவேசம்..!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019


நீண்ட நாள்களாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இயலாமல் இருந்த முத்தலாக் மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. எதிர்கட்சிகள் கோரிய சில சரத்துக்களையும் மத்திய அரசு நீக்கவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரியிடம் முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அனல் பறக்கும் பதில்கள் வருமாறு,

 

Thamimun Ansari Interview Triple Talaq Bill



மத்திய பாஜக அரசு மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றி உள்ளார்கள். முஸ்லிம் பெண்களுக்கான சமத்துவத்தை இந்த மசோதா மூலம் நிறைவேற்றி இருப்பதாக அவர்கள் கூறுவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

 

மத்திய பாஜக அரசு சொல்கிற இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையிலேயே நான் நிராகரிக்கிறேன். முஸ்லிம் சமூகத்தில் ஏதோ அநீதி நடந்துவிட்டது போலவும், முஸ்லிம் இளைஞர்கள் எல்லாம் குற்றவாளிகள் போல சித்தரிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயல்கிறது. பெண் குழந்தைகளை கொலை செய்யக்கூடாது, பெண்களுக்கு சம உரிமை தரவேண்டும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. சென்ற நூற்றாண்டில் தான் பல நாடுகள் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியுள்ளது இஸ்லாம் மதம்.

எனவே இஸ்லாம் சமூகம் பெண்களை அடிமைப்படுத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். மேலும், தலாக் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களை பரப்புகிறார்கள். முஸ்லிம் இளைஞன் தன் மனைவியை பார்த்து தலாக் என்று மூன்று முறை கூறுவதை போல ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். அப்படி திருகுரானில் எங்கும் சொல்லவில்லை. கணவனுக்கும், மனைவிக்கும் வருத்தம் ஏற்படுமாயின் அவர்கள் பிரிந்துகொள்வதன் பொருட்டு முதல் முறை தலாக் சொல்வார்கள். அடுத்த முறை மூன்று மாதங்கள் கழித்துதான் கூறவேண்டும். அடுத்த முறை கூற மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இந்த இடைப்பட்ட நாள்களில் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்பிருப்பதால் இந்தமுறை இஸ்ஸாத்தில் கடைபிடிக்கப்பட்டது. கல்வியறிவு இல்லாத ஒருசில இடங்களில் நடக்கும் சில தவறுகளை அடிப்படையாக வைத்து முத்தலாக்கை தடை செய்துள்ளார்கள். இது விதிவிலக்குகள் தான். அதனை நாம் அனைவரும் சேர்ந்தே கண்டிக்க வேண்டும். இதை காரணம் காட்டி முத்தலாக்கை தடை செய்துள்ளனர். அதை தடை செய்வதிலே எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏனென்றால் அப்படி ஒன்று நடைமுறையிலேயே இல்லை. ஆனால் அந்த சட்டத்தில் என்ன கூறியிருக்கிறார்கள், முத்தலாக் சொல்லி ஒரு கணவன் ஒரு மனைவியை விவகாரத்து செய்தால் அந்த கணவனுக்கு மூன்றாண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்கிறார்கள், அவருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவரின் மனைவி சம்மதித்தால்தான் கொடுக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இது மூன்றிலும் நாங்கள் வேறுபடுகிறோம். கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பிரியும் போது, பெரியவர்கள் முன்னிலையில் பேசி அவர்களுக்கு ஒரு தொகை தரப்படும். இது வழக்கமாக நடைபெற்று வரும் முறையாகும். அடுத்து மனைவி சம்மதித்தால் தான் ஜாமீன் தரப்படும் என்றால், குற்றச்சாட்டு கூறிய மனைவி எப்படி ஜாமீனில் கணவர் வெளிவருவதற்கு சம்மதம் தெரிவிப்பார், அடுத்து மூன்றாண்டு காலம் சிறை தண்டனை என்கிறார்கள், சிறையில் கணவன் இருக்கும் போது ஜீவனாம்சத்தை யார் கொடுப்பார்கள். முஸ்லிம்களின் குடும்ப உறவை சீரழிக்கும் நோக்கில் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். தேன் கூட்டிலே கைவைத்துவிட்டார்கள். அதற்கான எதிர்வினையை விரைவில் அனுபவிப்பார்கள்.

 

Next Story

முத்தலாக் தடை சட்டத்தில் முதல் வழக்கு...

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் மும்பையில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

first case files under triple talaq act

 

 

மும்பையைச் சேர்ந்தவர் ஜனாத் பேகம் படேல் என்பவருக்கு அவரது கணவர் இம்தியாஸ் குலாம் படேல் வாட்ஸப் மூலமாக முத்தலாக் கூறியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக ஜனாத் பேகம் மும்பை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக இம்தியாஸ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள ஜனாத் பேகம், "கடந்த நவம்பர் மாதம் நான் 7 மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது எனது கணவர் வேறு ஒருபெண்ணுடன் வாழ்ந்துகொண்டு எனக்கு வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி வாயிலாக மூன்று முறை தலாக் கூறினார். மேலும் என்னுடன் வாழ மறுத்தார். அவர் தலாக் கூறியதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலால் குழந்தை குறைமாதத்தில் பிறந்தது. இந்நிலையில் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நான் புனித குர்-ஆனுக்கு எதிரானவர் இல்லை. ஆனால் நான் உரிமைக்காகப் போராடுகிறேன்" என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

முத்தலாக் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்...

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

முத்தலாக் மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசு தலைவரும் தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

 

president aproves triple talaq bill

 

 

இஸ்லாம் மாதத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் முறையை தடை செய்வது தொடர்பான இந்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் இந்த மசோதா தற்போது சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.