ADVERTISEMENT

மன்னன் தீராத விளையாட்டுப் பிள்ளை, தாய்லாந்து முன்புபோல இல்லை! 3 விரல் புரட்சி!!!  

09:45 PM Nov 13, 2020 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரோம் பற்றியெரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்கிறது வரலாறு. இன்று தாய்லாந்து மன்னரும் அதையேதான் செய்வதாக நாட்டு மக்கள் முணுமுணுக்கிறார்கள். உலகெங்கும் கரோனா பற்றியெரிந்த போது, தாய் மன்னர் 20 பெண்களுடன் ஜெர்மனி விடுதியில் குவாரண்டினில் இருந்துள்ளார். இதை, வெளியில் சொல்லிப் புலம்பக் கூட அந்நாட்டின் சட்டம் அம்மக்களுக்கு இடமளிக்கவில்லை. மீறி சொன்னால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை.

ஆனால், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாத பெரும் இளைஞர் படையொன்று, வீதியில் இறங்கி மன்னரையும் அரசமைப்புச் சட்டத்தையும் அந்நாட்டின் பிரதமரையும், ஒரு கை பார்த்துவிட ‘மூன்று’விரல் புரட்சியில் இறங்கியுள்ளது. ‘பால் தேயிலை கூட்டணி’ உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதனால் நாடெங்கும் கைதுகளும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. அதென்ன, பால் தேயிலை கூட்டணி? மூன்றுவிரல் புரட்சி என்றால்? கைதுகளும் போராட்டங்களும் ஏன்? இதைப் புரிந்துகொள்ள நாம் தாய்லாந்தை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு, உங்கள் சீட் பெல்ட்டை இறுக்கமாகப் போட்டுக் கொள்ளுங்கள் தாய்லாந்துக்குப் பறக்கலாம்...

அழகிய கடற்கரை, தாய் மசாஜ், விலைமாதர்கள், புத்த ஆலயங்கள், கட்டிடக் கலை என ஒவ்வொருவருக்கும் தாய்லாந்தை ரசிக்க ஒவ்வொரு காரணம் உண்டு. டூரிசத்துக்குப் பெயர்போன நாடு தாய்லாந்து. எப்போதும் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கும் தேசம், இன்று கொடுங்கோன்மைக்கு எதிராகக் குரலுயர்த்திப் போராடிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தாய்லாந்து முடியாட்சியை ஏற்றுக் கொண்டது. எத்தனையோ கலகங்கள் எத்தனையோ புரட்சிகள் வந்தாலும், அது மன்னர் குடும்பத்தை மட்டும் பாதிக்காத அளவிற்குப் பார்த்துக் கொள்ளப்பட்டது.

அந்நாட்டின் சட்டப்படி பிரதமரே அரசின் தலைவர். மன்னர் நாட்டிற்குத் தலைவர். மன்னர்கள் வழிவழியாகப் பொறுப்பேற்று ஆட்சி புரிவர். ராணுவம் உள்ளிட்ட சில முக்கிய இலாக்காக்கள் மன்னர் வசம்தான் இருக்கும். மன்னர்தான் தாய்லாந்தின் உச்ச அதிகாரம் கொண்டவர். பிரதமர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

பிரதமர் மன்னருக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். பெரும்பாலும் மன்னரின் ஆதரவாளர்தான் பிரதமராக இருப்பார். அல்லது, பிரதமராக இருப்பவரை, மன்னர் தன் ஆதரவாளராக ஆக்கிக் கொள்வார். இப்போது பதவியில் இருக்கும் பிரதமர் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர். இவருக்கு எதிரான போராட்டங்கள் தாய் நகரெங்கும் எதிரொலிக்கிறது. மன்னருக்கு விசுவாசமாய் பிரதமர் இருப்பதனால், மன்னர் இதைக் கண்டுகொள்வதில்லை.



மன்னர் பூமிபோல் மக்களுக்குப் பூமியைப் போல்



இந்திய வரலாற்றில், 49 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அவுரங்கசீப்தான் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னன். அதேபோல், ஆசியாவிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர், 70 ஆண்டுகள் தாய்லாந்தை ஆண்ட மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இவரின் சகோதரர் தாய்லாந்தை ஆண்டு வந்தார், அவரின் மர்மமான உயிரிழப்பிற்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் பூமிபோல், தனது 80 ஆவது வயது வரை ஆட்சியிலிருந்தார்.


கடந்த அக்டோபர் 2016 –ல் உடல் நலக்குறைவால், மன்னர் பூமிபோல் காலமானார். இவரின் ஆட்சியில் சில விமர்சனங்கள் இருந்தாலும், தாய் மக்கள் மகிழ்வுடனே இருந்துள்ளனர். ஜனநாயக மன்னராக இருந்துள்ளதாகவும் நவீன தாய்லாந்தை வடிவமைத்ததாகவும் இவர் வரலாற்று ஆய்வாளர்களால் புகழப்படுகிறார். எளிமையாக சொல்வதானால், மன்னர் பூமிபோல் தாய் மக்களுக்குப் பூமியைப் போல். எல்லாமே, சரியாகத்தானே போய்க்கொண்டுள்ளது, இப்போது என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? 13 அக்டோபர் 2016-ல் மறைந்த மன்னரோடு ஜனநாயகமும் புதைக்கப்பட்டது. அதுதான் இப்போது தாய் மக்களுக்கு ஒரே பிரச்சனை.



புதிய மன்னரும் பூத்துக் குலுங்கும் காதல்களும்



தந்தை பூமிபோலுக்குப் பிறகு அவரின் மகன் மகா வஜிரலங்கோன் அரியணை ஏறுவார், நல்லாட்சி தருவார் என எதிர்பார்ப்பிலிருந்த மக்களுக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தார் புதிய மன்னர். தந்தை மரணத்தையொட்டி துக்கம் அனுசரிக்க மக்களுக்கு உத்தரவிட்டார். ஒரு நாள் இரு நாள் அல்ல 1 வருடம். அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. வண்ண வண்ண உடைகள் உடுத்த தடை செய்யப்பட்டது. அங்குள்ள அத்தனை தியேட்டர்களும் மூடப்பட்டன. கொண்டாட்ட நிகழ்வுகள் அனைத்தும் ஒரு வருடங்களுக்கு ஓத்தி வைக்கப்பட்டன. அவ்வளவு ஏன், புதிய மன்னரின் முடிசூட்டு நிகழ்வே மூன்று வருடம் கழித்துத்தான் அரங்கேறியது.

04 மே 2019 அன்று புதிய மன்னருக்கு முடிசூட்டு விழா. முடிசூட நாடெங்கும் உள்ள புனித நீர் கொண்டுவரப்பட்டது. புத்த முறைப்படியும், பிராமணிய முறைப்படியும் நடந்த முடிசூட்டு விழாவில், ‘திருவாசகம்’, ‘திருவெம்பாவை’, ‘திருப்பாவை’ பாடல்கள் பாடப்பட்டன. முடிசூடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, விமானப் பணிப்பெண்ணாக இருந்த சுதிடா மீது மன்னருக்குக் காதல் மலர்ந்துள்ளது.


மன்னன் தீராத விளையாட்டுப் பிள்ளை



மன்னர் வஜிரலங்கோனுக்கும் ராணி சுதிடாவுக்கும் திருமணம் நடந்தது. இது மன்னருக்கு நான்காவது திருமணம். ஏற்கனவே மன்னருக்கு ஏழு குழந்தைகள். இருப்பினும் இந்தத் திருமணம் தடபுடலாக நடந்தது. இது அல்லாமல் மன்னரை மகிழ்வுடன் பார்த்துக்கொள்ள, எப்போதும் 20 பேர் கொண்ட அழகிகள் குழு இருப்பர். பிறகு சிறிது காலத்தில் மன்னருக்கு ஒரு செவிலியருடன் காதல் அரும்பாகி மொட்டாகி பூவாகியுள்ளது.



தனது 67- ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, மன்னர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதுநாள் வரை, செவிலியராக என்னைப் பார்த்துக் கொண்ட தோழி ‘சினினாட்’ இனி என் துணைவியாக இருப்பார் என அறிவிக்கிறேன். அவருக்கு ‘ராயல் கன்சோர்ட்’ (துணைவி) எனும் சிறப்புப் பட்டம் தரப்படுகிறது. அதாவது அதிகாரப்பூர்வ துணைவி. ராணியாக அல்ல. மன்னரின் இந்த அறிவிப்பின் போதும் திருமணத்தின் போதும் ராணி சுதிடா மன்னருடன் மேடையிலிருந்தார். அப்போதே ராணிக்கும் துணைவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்வு நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ‘ராணிக்கு இணையாகத் தன்னை உயர்த்திக் கொள்ள முயன்ற’தாக ராயல் கன்சோர்ட் அங்கீகாரம் சினினாட்டிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.



கோமாளி மன்னனும் கொதித்தெழுந்த மக்களும்



ஃபிப்ரவரி 2020, உலகமே கரோனாவைக் கண்டு அலறியது. ஒவ்வொரு நாடும் தன் மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டன. அரசுகள் மக்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தின. அதைத்தான் மன்னர் வஜிரலங்கோனும் செய்தார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், உலக ஊடகங்கள் முதல் தாய்லாந்து நாடாளுமன்றம் வரை அதிருப்திக் குரல் எழுந்தது. காரணம், அவர் தனிமைப்படுத்திக் கொண்டது ஜெர்மனியில் உள்ள விலையுயர்ந்த ஹோட்டலில், 20 அழகிகள் உள்ள குழுவுடன்.

இந்த நேரத்தில், “சிறை வைக்கப்பட்ட மன்னரின் துணைவி ‘சினினாட்’டை மன்னித்து விட்டதாகவும் அவர் தனது அழகிகள் குழுவில் இணைந்துகொள்ளலாம்” எனவும் மன்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தாய்லாந்திலிருந்து ஜெர்மனிக்கு வரவழைக்கப்பட்டார் சினினாட். அவரை வரவேற்க மன்னரே சென்றதாகக் கூட விமர்சிக்கப்பட்டது. கரோனா காலத்தில் தாய்லாந்து மன்னரை, ஜெர்மனியில் எப்படி அனுமதிக்கலாம், இதனால் கரோனா பரவாதா? எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் ஜெர்மானியர்கள். அதற்கு, “அவர்கள் ஒரு குழுவாகத் தனியாக உள்ளனர், வெளியில் செல்ல வேண்டாம் என்ற முன் நிபந்தனையுடனே, அவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்" என்று அரசு தரப்பு கூறியது.



மன்னர் அடிக்கடி ஜெர்மனி செல்வது வழக்கம். இல்லையில்லை, மன்னர் அடிக்கடி தாய்லாந்து போவது வழக்கம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு, ஜெர்மனியில் குடியாய்க் கிடப்பவர் வஜிரலங்கோன். அங்கு அவருக்கு ஒரு மனைவி இருப்பதாகவும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உண்டு. இந்தச் சமயத்தில்தான், ஜெர்மனியில் மன்னர் பெண்களோடு வெளியில் சுற்றிய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியது. அதில் மன்னர் அரைகுறை உடையுடன் அழகிகளுடன் சுற்றுவதாய் இருந்தது. இந்தச் சம்பவங்கள் தாய் மக்களைக் கொதிப்படைய வைத்தது.


மூன்று விரல் புரட்சியும் பால் தேயிலை கூட்டணியும்

ஒரு விரல் புரட்சி நமக்குத் தெரியும். தாய்லாந்தில் மூன்று விரல் புரட்சி மாணவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. மன்னரை எதிர்த்தோ அரச குடும்பத்தை விமர்சித்தோ பேசினால், 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உறுதி. அவ்வளவு ஏன் அவர்கள் வளர்க்கும் நாயை விமர்சனம் செய்தால் கூட கடும் தண்டனை உண்டு. தான் வளர்த்த ‘ஃபு ஃபு’ நாயின் இறப்பை ஒட்டி மன்னர் வஜிரலங்கோன், நாட்டு மக்கள் நான்கு நாட்கள் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இதுபோன்ற மோசமான சட்டப் பாதுகாப்புகளால் மன்னரை யாரும் எதிர்க்க முன்வரவில்லை. மீறி எதிர்த்தால், சிறை. அதையும் மீறி எதிர்ப்பை தொடர்ந்தவர்கள் மாயமானார்கள். இது அந்த நாட்டின் இளைஞர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து தொடர்ந்து பேசிவந்தார் மனித உரிமை ஆர்வலர், அனன் நம்பா. அவர் அரசுக்கு, 10 அம்ச கோரிக்கையை முன்மொழிந்தார். அதை அரசு ஏற்கவில்லை, சிறை வைக்கப்பட்டார் அனன். இவரின் 10 அம்ச கோரிக்கைகளைக் கையில் ஏந்தி போராட ஆரம்பித்தார் கல்லூரி மாணவி, பனுசியா. கூட்டம் பெருகியது. அரசருக்கும் பிரதமருக்கும் நெருக்கடி முற்றியது. இறங்கி வந்தது அரசு. அனன் நம்பா உள்ளிட்ட சில போராளிகளை விடுதலை செய்தது.


தாய் மாணவர்கள் போராட்டத்தின் போது மூன்று விரல்களை உயர்த்திக் காட்டுகிறார்கள். இதன்மூலம், மூன்று வேண்டுகோள்களை முன்வைக்கின்றனர். ‘நாடாளுமன்ற சபையைக் கலைக்க வேண்டும்’, ‘மக்களை அச்சுறுத்தும் சட்டங்களை அகற்ற வேண்டும்’, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்’. மேலும், இணையத்தில் #Milk Tea Alliance (பால் தேயிலை கூட்டணி) எனும் அமைப்பு மூலம் சீனாவுக்கு எதிரான அணிகளை ஒருங்கிணைக்கின்றனர். அதாவது, ‘தைவான்’, ‘தாய்லாந்த்’, ‘ஹாங்காங்’, ‘இந்தியா’ உள்ளிட்ட நாடுகளின் இணையவாசிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்றனர். சீனாவைத் தவிர மற்ற நாடுகளில், பால் கொண்டே ‘டீ’ தயாரிக்கப்படுகிறது. இதனால், சீனா எதிர்ப்பை கூர்மைப்படுத்த ‘பால் தேயிலை கூட்டணி’ என இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது


தாய்லாந்து சமாதானத்திற்கான நிலம்


மன்னரை அவ்வளவு எளிதில் ஊடகங்கள் நெருங்கிவிட முடியாது. (நம்மூரிலேயே அது சாத்தியம் கிடையாது). இந்த மாதத் தொடக்கத்தில் தாய்லாந்தில் நடந்த ஒரு நிகழ்வில் மன்னரும், ராணியும் கலந்து கொண்டனர். அப்போது சி.என்.என் ஊடக நிருபர் மன்னரை நோக்கி கேள்வி எழுப்பினார். எப்போதாவது அரிதாகப் பேசும் மன்னர், இந்த முறை வாய் திறந்தார். ‘நாங்கள் எல்லோரையும் நேசிக்கிறோம்’, ‘தாய்லாந்து சமாதானத்திற்கான நிலம்’ என்றார். இதனால் மன்னர், போராட்டக்காரர்களுடன் சமாதானம் பேச முன்வருவார் எனச் சொல்லப்படுகிறது.



மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் இப்போது வெகுமக்களின் போராட்டமாக மாறி தாய்லாந்தை அதிர வைத்துள்ளது. காதல் மன்னன் வஜிரலங்கோன், தாய்லாந்தையும் காதலித்தால், அரும்பாகி மொட்டாகி விரைவில் ஜனநாயகப் பூ மலரும்.

தமிழ்நாட்டுக்குக் கிளம்பளாங்களா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT