சேலத்தில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், சீனியர்களை ஓரங்கட்டுவதால் ஒட்டுமொத்த மூத்த ரத்தத்தின் ரத்தங்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, மொரப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான சிங்காரத்தை, சேலம் மாநகர பொறுப்பாளராக நியமித்தார் அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் மற்றும் ஒரே சாதிக்காரர் என்பதால் சேலம் அதிமுகவினர் அவரிடம் ஆரம்பத்தில் பவ்யம் காட்டினர். அவரும் வந்த வேகத்தில் சூட்டோடு சூடாக வார்டு மற்றும் பகுதிகளைப் பிரித்து இளைஞர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.
கடந்த பத்து ஆண்டாக மாவட்ட செயலாளராக வலம் வந்த வெங்கடாசலத்தைக் கட்டம் கட்டிவிட்டு, முன்னாள் கவுன்சிலர் ஏ.கே.எஸ்.எம். பாலுவை புதிய மாவட்ட செயலாளராக கொண்டு வந்தார். சிங்காரத்தின் தடாலடிகளும், 'சுருக்' 'நறுக்' என்ற பேச்சும் கட்சி சீனியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/a5798-2025-12-12-16-42-06.jpg)
இந்தநிலையில்தான், சிங்காரத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 56வது வார்டு துணை செயலாளர் ஜினோத்குமார் சம்பத், தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கையெழுத்திட்ட ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது. இது, இலைக்கட்சி வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாநகர அதிமுகவில் நடக்கும் மோதல்கள் குறித்து மூத்த நிர்வாகிகள் நம்மிடம் விரிவாகப் பேசினார்கள். ''சேலம் மாநகர அதிமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிங்காரம், கட்சி வேலைகள் செய்யாத மூத்த வார்டு செயலாளர்களின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் விதமாக வார்டுகளை இரண்டு, மூன்றாக உடைத்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தார். தங்களிடம் எடுபிடியாக இருந்து வந்த பலரை தங்களுக்கு சமமாக வார்டு செயலாளர் பொறுப்பில் நியமித்து விட்டாரே என சிங்காரத்தின் மீது மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் 41வது வார்டு செயலாளராக இருந்த முன்னாள் கவுன்சிலர் அன்பழகன், தனது ஆதரவாளர்கள் 30 பேருடன் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டார். அம்மாபேட்டை பகுதி செயலாளர் எல்.வி.பிரகாஷ், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் கே.ஆர்.சரவணன் ஆகியோர் வகித்து வந்த பகுதி செயலாளர் பதவிகளையும் பறித்துவிட்டு 'டம்மி' பதவிகளில் அமர்த்தினார்.
இந்நிலையில், 56வது வார்டில் பூத் கமிட்டி பணிகளை மேற்கொள்ள சிங்காரம் 9 பேர் குழுவை நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வார்டு துணை செயலாளர் ஜினோத்குமார் சம்பத், காலங்காலமாக இப்பணிகளை மேற்கொண்டு வரும் எங்களைப் போன்ற சீனியர்களுக்குதான் பூத் கமிட்டி பணிகளை ஒதுக்க வேண்டும் என்று சிங்காரத்திடம் வெளிப்படையாகவே மோதினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/a5801-2025-12-12-16-42-38.jpg)
இது தொடர்பாக, கடந்த நவம்பர் 13ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜினோத்குமாரை, 'நீயெல்லாம் அதிமுகவை வைத்து சம்பாதிக்கதான் லாயக்கு. கட்சியில் இருக்கவே தகுதி இல்லை,' என சிங்காரம் அவரை வெளுத்துவிட்டார். இதனால் கொதித்துப் போன ஜினோத்குமார், 'மொரப்பூரில் இருந்து வந்த உனக்கு என்ன தெரியும்?. நீ எல்லாம் கட்சியை விட்டு வெளியே போனால்தான் அதிமுக உருப்படும்,' என்று ஏக வசனத்தில் எகிறி அடிக்க, கைகலப்பு நடக்காதது மட்டும்தான் பாக்கி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதன்பிறகு ஜினோத், தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தலைமைக்குக் கடிதம் எழுதினார்.
இது மட்டுமின்றி, கடந்த அக்டோபர் 6ம் தேதி நடந்த கூட்டத்தில், கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் தனது வட்டச் செயலாளர் பதவியைப் பறித்து சுந்தரபாண்டியன் வசம் வழங்கியதைக் கண்டித்து சிங்காரத்திடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இப்படி சீனியர்கள் பலருக்கு 'செக்' வைத்த சிங்காரம், சேலம் தெற்கு எம்எல்ஏ பாலசுப்ரணியம் வசமிருந்த 46வது வட்டக்கழக செயலாளர் பதவியையும் தட்டித் தூக்கினார். இதுகுறித்து பாலசுப்ரமணியம் எம்எல்ஏ, எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக புலம்பித்தள்ள, அவருக்கு மாநில அளவில் ஒரு டம்மியான பொறுப்பு கொடுத்து இப்போதைக்கு அமைதிப்படுத்தி இருக்கிறது கட்சித் தலைமை,'' என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/a5799-2025-12-12-16-43-09.jpg)
இது தொடர்பாக சேலம் தெற்கு எம்எல்ஏ பாலசுப்ரமணியத்திடம் கேட்டோம். 'கட்சி நிர்வாகிகளை, ஏதோ பண்ணையத்தில் வேலை செய்பவர்களைப் போல மரியாதைக்குறைவாக நடத்துகிறார், சிங்காரம். அவர் எதற்கெடுத்தாலும் 'ஷார்ட் டெம்பர்' ஆகிறார். எஸ்.ஐ.ஆர். பணிகளை நான் பார்ப்பதில்லை என்றும், இப்பணிகளில் ஈடுபடும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு செலவு செய்வதில்லை என்றும் கூறுகிறார்.
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து என்னிடம் ஒருவர்கூட பேசாதபோது நான் எப்படி தலையிட முடியும்? வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஜனவரி மாதம் சரிபார்த்தால் போதுமானது. 56வது வார்டு ஜினோத்குமார் விவகாரத்தின் பின்னணியில் நான் இருப்பதாக சிங்காரம் என் மீது குற்றம் சுமத்தியதால் அவரிடம் பேசினேன்.
என்னை வட்டச் செயலாளர் பதவியை விட்டு நீக்கியது குறித்து கட்சித் தலைமையிடம் முறையிட்டேன். 46வது வார்டில் நான் கட்சியை வளர்த்து இருப்பதால்தான் எம்.பி. தேர்தலில் என் வார்டில் கூடுதல் ஓட்டு வாங்கி இருக்கிறோம். காண்ட்ராக்டர்களிடம் கமிஷன் வாங்காமல் நேர்மையாக பணிகளைச் செய்து வருகிறேன்.
நான் சார்ந்த தேவாங்க செட்டியார் சமூகத்தில் இருந்து 5 பேரையாவது புதிதாக கொண்டு வந்து காட்டுங்கள் என்று சிங்காரத்திடம் சேலஞ்ச் செய்தது உண்மைதான். அவரும் தட்டுத்தடுமாறி 5 பேரை அழைத்து வந்து பொறுப்புகளில் நியமித்தார். அவர்கள் எல்லோருமே தாக்குப்பிடிக்க முடியாமல் 200 கி.மீ. வேகத்தில் ஓடிவிட்டனர். சேலம் புறநகரைச் சேர்ந்த ஒருவரை சிட்டிக்குள் கொண்டு வந்து பொறுப்பு வழங்கி இருக்கிறார்.
நிர்வாகிகள் கூட்டத்திற்குச் சென்றால், என்னை உட்காரக்கூட சொல்வதில்லை. சிங்காரம் நல்லபடியாக கட்சி வேலைகளைச் செய்தாலும் எல்லோரிடமும் சண்டை போடுகிறார் என்று தலைமையிடம் சொன்னேன். அவருடைய தவறை சுட்டிக்காட்டினால் 'சாரி' என்கிறார்.
ஆரம்பத்தில், பகுதி செயலாளர் ஜெகதீஸ்குமாரை வைத்து வேலை செய்தார். திறமைசாலியான அவரை இப்போது கழற்றி விட்டுவிட்டார். ஆனால் ஜெகதீஸ்குமாரால் அறிமுகப்படுத்தப்பட்ட நித்தின் என்ற சின்ன பையனை வைத்துக்கொண்டு சிங்காரம் வேலை செய்கிறார். அவர் வெளியேறினால்தான் சேலம் மாநகர அதிமுக உருப்படும். அவர் சுத்த மென்ட்டலுங்க,'' என வார்த்தையால் துவம்சம் செய்தார் எம்எல்ஏ பாலசுப்ரணியம்.
துணை செயலாளர் ஜினோத்குமார் சம்பத்திடம் கேட்டபோது, ''கட்சிப் பொதுச்செயலாளர் இருக்கும் ஊரிலேயே பொறுப்பாளர் போட வேண்டிய தேவை என்ன வந்தது? மொரப்பூரில் இருந்து ஒருவரை பொறுப்பாளராக போட வேண்டிய தேவை என்ன? கையாளாகாத ஒருவரிடம் நாங்கள் கைக்கட்டி நிற்க வேண்டிய தேவை இல்லை. சிங்காரம் எத்தனை தேர்தலைப் பார்த்துவிட்டார்?
நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்துதான் சம்பாதிக்கிறேனே தவிர, ஒருபோதும் கட்சிப் பணத்தை கையாடல் செய்யவில்லை. என்னைப் போன்ற சீனியர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களை பூத் கமிட்டிக்கு நியமித்தது தவறு. இதைக் கேள்வி கேட்டதற்கு என்னை குற்றவாளியாக்கி விட்டனர்,'' என்றார்.
இதுபற்றி சிங்காரத்திடம் விளக்கம் பெற்றோம். ''சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த வெங்கடாசலம், தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்எல்ஏ ஆக இருந்து பல நூறு கோடி சொத்துகளை குவித்துவிட்டார். ஆனால் கட்சி அலுவலகம் இருந்த இடம் அவருடையது என்பதால் அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அப்படிப்பட்டவர் எதற்கு மாவட்டச் செயலாளராக நீடிக்க வேண்டும்?
எம்எல்ஏ பாலசுப்ரமணியம், சொந்த வார்டில் கூட கட்சியை வளர்க்கவில்லை. அதனால்தான் அவருடைய வார்டு செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இப்போது அந்த வார்டு முழுக்க புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கட்சி வேலைகள் ஜரூராக நடக்கின்றன. தேர்தலில் அவருக்காக கட்சி செலவு செய்திருக்கும்போது, அவர் கட்சிக்கு செலவு பண்ணக்கூடாதா?
என் மீது குற்றம் குறை இருந்தால் நேரடியாகச் சொல்லும்படி நிர்வாகிகளை அழைத்துக் கேட்டேன். அப்போது எம்எல்ஏ பாலசுப்ரமணியம், நான் சிறப்பாக செயல்படுவதாகச் சொன்னவர் இப்போது புகார் சொல்கிறார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்பார்வையிட பாலசுப்ரணியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் சட்டமன்றத்துக்குப் போய்விட்டார். அதன்பிறகாவது அவர் அந்தப் பணிகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் என்னிடம் வந்து, எனக்கு ஏதாவது கட்சி வேலை கொடுங்க என்று கேட்டார். தேவைப்பட்டால் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது கட்சித் தலைமை கொடுத்த 30 லட்சம் ரூபாயை சுருட்டிக்கொண்ட ஜினோத்குமார், வாக்கு எண்ணிக்கை அன்று ஜாலியாக ஒகேனக்கல்லுக்கு டூர் சென்றுவிட்டார். வரும் தேர்தலிலும் கட்சிப் பணத்தை சுருட்டுவதற்காகத்தான் பூத் கமிட்டி பணிகளை நாங்கள்தான் செய்வோம் என்று பிரச்னை செய்கிறார்.
பூத் கமிட்டி பணிகளுக்காக பூத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வேலை செய்யும்படி பகுதி செயலாளர் ஜெகதீஸ்குமாருக்கு சொல்லப்பட்டது. ஆனால் அவர் செலவு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவராகவே ஒதுங்கிக் கொண்டார்.
கட்சித் தலைமை எனக்குக் கொடுத்த வேலைகளை நேர்மையாகச் செய்கிறேன். வரும் தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறேன். எனக்கு கட்சியில் வேலை செய்யக்கூடிய ஆள்கள்தான் வேண்டும். போட்டோ ஷூட் நடத்தும் ஆள்கள் வேண்டாம்,'' என்று சரவெடியாய் வெடித்தார் சிங்காரம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/a5802-2025-12-12-16-43-42.jpg)
சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலுவிடம் கேட்டபோது, ''கட்சியின் அமைப்புச் செயலாளரிடம் ஜினோத்குமார் எதிர்த்துப் பேசியது சரியல்ல. அவருடைய ராஜினாமா கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை. எம்எல்ஏ பாலசுப்ரமணியத்திற்கும், பொறுப்பாளருக்குமான விவகாரத்தில் நான் எதுவும் தலையிடவில்லை,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
சிங்காரத்திற்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் என்னதான் புகார் மனுக்களை தட்டிவிட்டாலும், எடப்பாடி பழனிசாமியோ பாராமுகமாக இருப்பதாக புலம்புகின்றனர் சீனியர்கள். வரும் தேர்தலில் இதற்கான விலையை அதிமுக கொடுத்தே தீரும். சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்ற பிம்பம் உடையும் என வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர் அதிருப்தியில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/a5803-2025-12-12-16-41-43.jpg)