Tenkasi district valasai woman vinothini passes away case

Advertisment

தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரை ஒட்டியுள்ள வலசை வயல்வெளிப் பகுதியின் கிணற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அக்கம்பக்கத்தில் விவசாயப் பணியிலிருப்பவர்கள் தகவல் தர, கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் கிணற்றை சல்லடையிட்டதில் சாக்குப் பையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று முகம் விகாரமாகச்சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட இளம்பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த எம்.வி. என்ற எழுத்தை மட்டுமே க்ளூவாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நான்கு நாட்களாக தமிழகமெங்குமுள்ள காவல்நிலையங்களில் பதிவான காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் தேடியும் பலனில்லை.

போலீஸ் டீம் தவித்துக்கொண்டிருந்த நிலையில்தான், காவல் நிலையத்திற்கு தன் 17 வயது மகனுடன் வந்த ஒரு தாய், "ஐயா, கொல பண்ணுன பொண்ணு ஒருத்திய தன்னோட நண்பர்களோட சேர்ந்து சாக்குமூட்டைல அடைச்சு வலசைக் கிணத்துல வீசுனதாச் சொன்னாம்யா. எனக்கு பக்குன்னு ஆயிருச்சி. வெவரம் தெரிஞ்சும் சும்மாயிருக்கக் கூடாதுன்னுதாம்யா, இவன நா ஒங்ககிட்ட ஒப்படைக்க வந்தேம்யா...'' என்று சொல்லி அந்த தாய், தன் மகனை ஒப்படைத்தாள்.

Advertisment

அந்தச் சிறுவனிடம் விசாரித்த தனிப்படை, உடனடியாக வலசைப் பகுதியின் 22 வயதுடைய மனோரஞ்சித் என்பவனைத் தூக்கி வந்து விசாரிக்க, நடந்தது அம்பலமாயிருக்கிறது. இப்போது அவனது நண்பர்களான வலசையின் மகா பிரபு, பரத், மணிகண்டன் உள்ளிட்டோரைகஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறது தனிப்படை.

படுகொலைக்கு ஆளான அந்த இளம்பெண் சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டையைச் சேர்ந்த வினோதினி. அவர் மாயமான புகார் பதிவான தேவகோட்டை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்ட தனிப்படை, உடலின் அங்க அடையாளத்தை தெரிவித்த பிறகே வினோதினி என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

வலசைப் பகுதியின் மனோ ரஞ்சித், தன் நண்பர்களான மகா பிரபு, பரத், மணிகண்டன் உள்ளிட்டோருடன் ஆலய திருவிழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் அடிக்கிற தொழிலில் இருந்திருக்கிறார். நிகழ்ச்சிகள் இல்லாத வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்தும் தனியாகவும் கஞ்சா, சரக்கு அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்.

மனோ ரஞ்சித்திற்கு இன்ஸ்டாகிராம் மூலமாக தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த வினோதினியின் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராம் மூலம் இவர்களின் பழக்கமும் காதலும் வளர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட வினோதினியின் மீது பைத்தியமாகவே மாறியிருக்கிறான்.

வினோதினியோ வேறு பலரையும் காதலித்ததோடு, வேறொருவரை திருமணம் செய்து கொண்டு சென்னை சென்றுவிட்டாள். திருமணத்திற்குப் பிறகும் மனோரஞ்சித்துடனான தொடர்பைக் கைவிடாமல் தொடர்ந்திருக்கிறார். இதனிடையே வினோதினிக்கும் அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பிறகும், மனோரஞ்சித்துடனான தொடர்பை வினோதினி விடாமல் தொடர்ந்திருக்கிறார்.

இதற்கு மத்தியில் பலமுறைவலசை வந்து மனோரஞ்சித்தோடு தனிமையிலும் இருந்திருக்கிறார் வினோதினி. இது மனோரஞ்சித்தின் பெற்றோருக்கும் தெரியவர,வேண்டாம் இந்தத் தொடர்புவிட்டுவிடு என்று சொல்லியும் வயது, தவறான உறவு தந்த ஈர்ப்பில் மனோரஞ்சித் தேவகோட்டையிலிருந்து வலசை வருகிற வினோதினியை தன் கிராமத்தின் ஒதுக்குப்புறமான வீட்டில் தங்க வைத்து குடும்பம் நடத்தியிருக்கிறான். கடந்த ஆக. 7 ஆம் தேதியன்று வினோதினியை ஊருக்கு வருமாறு மனோரஞ்சித் அழைக்க, வினோதினியும் வந்திருக்கிறாள். இருவரும் காட்டுப் பகுதிக்குள் சென்றவர்கள் தனிமையாகவும் இருந்திருக்கின்றனர்.

அதுசமயம் இன்ஸ்டாகிராம் மூலமாக வினோதினிக்கு வேறு பல இளைஞர்களுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றி வினோதினியிடம் கேட்டவன், “நான் உனக்கு உண்மையாக இருந்திருக்கிறேன். ஆனால் நீயோ...” என்று சொன்னதும் பதற்றமான வினோதினி. “நான் அப்படியெல்லாம் கிடையாது. உனக்கு நான் உண்மையாக உள்ளேன்” என்று கூறி சமாதானம் செய்திருக்கிறாள்.

“என்னை நம்பவில்லை என்றால் நீயே என்னைக் கொன்று விடு” என்று வினோதினி சொல்லியிருக்கிறாள். ஆத்திரத்திலிருந்த மனோ ரஞ்சித், அருகில் கிடந்த பெரிய கட்டையால் வினோதினியின் தலையில் மாறி மாறித் தாக்க, தலை, முகம் சிதறிப் போய் ரத்த வெள்ளத்தில் சரிந்த வினோதினி, சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்.

பதற்றத்தில் மனோரஞ்சித்தின் போதை இறங்க, தனது டிரம்ஸ் குழுவின் மகா பிரபு, பரத், கடையநல்லூர் மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை தொடர்புகொண்டு காட்டுப் பகுதிக்கு வரவழைத்திருக்கிறான். உடலை மறைப்பதற்காக ஆலோசனையில் ஈடுபட்டவர்கள் பெரிய சாக்குப் பையில் சிதைக்கப்பட்ட வினோதினியின் உடலைத் திணித்து, காட்டுப் பகுதியின் ஒதுக்குப்புறமுள்ள கிணற்றில் வீசிவிட்டு ஏதுமறியாதது போல் திசைக்கொருவராகப் பிரிந்து சென்றிருக்கின்றனர்.

இதுகுறித்து நாம் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜுவிடம் கேட்டதில், “பிடிபட்ட மனோரஞ்சித் விசாரணையில் நடந்ததை ஒப்புக்கொண்டான். அவரையும் உடந்தையாக செயல்பட்டவர்களையும் ரிமாண்ட் செய்துள்ளோம்” என்றார்.