Skip to main content

கட்டுப்பாடு மட்டும் போதுமா… கரிசனம் காட்டவேண்டாமா... கவலையில் புளியங்குடி மக்கள்...

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சமீபத்தில் தென்காசி மாவட்டம் பிரிந்தபோது, புளியங்குடி தென்காசிக்குள் அடங்கிப்போனது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி, தமிழகமெங்கும் எலுமிச்சைப் பழத்தை விநியோகம் செய்வதால் லெமன் சிட்டி எனப் பெயர் பெற்றது. சமீபத்தில் அது கரோனா சிட்டியாகியிருக்கிறது.


  tenkasi district puliangudi


ஏப்ரல் 22 வரை தென்காசி மாவட்டத்திலுள்ள 31 கரோனா நோயாளிகளில், 28 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள். இந்தியாவே ஊரடங்கில் இருந்தாலும், கூடுதல் கரோனா நோயாளிகளைக் கொண்ட நகர்களுக்கான கெடுபிடிகள் தனி. அது புளியங்குடியையும் இறுக்கியது. தெருவுக்கு தெரு தகரம் வைத்து அடைக்கப்பட்டது. மற்ற ஊர்களில் காலை 1 மணி வரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான அனுமதி இருக்க, புளியங்குடியில் அதற்கும் அனுமதியில்லை. மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தெருவுக்கு தெரு போலீஸ் காவல் நிற்க ஊரே முடங்கிக் கிடக்கிறது.

அதீத கெடுபிடியையடுத்து ஊர் மக்களிடையே முணுமுணுப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. “இந்தக் கட்டுப்பாடுகள் மக்களோட நன்மைக்காகத்தான் புரியுது. ஆனாலும் வேறுசில விஷயங்கள்லயும் நகராட்சி கவனம் செலுத்தியிருக்கணும்ல. காய்கறிகளை நகராட்சியே சப்ளை செய்யுது. ஏற்கனவே இருக்கும் நகராட்சி ஊழியர்கள் இதைக் கூடுதல் பணியா செய்றதுனால அவங்களுக்கு சிரமம்தான். ஆனா, காய்கறி சரிவர கிடைக்கமாட்டேங்குதே” என்கிறார்கள்.

 

nakkheeran app


மளிகை பொருட்களுக்கு மூன்று செல்பேசி எண்களை கொடுத்துள்ளார்கள். இந்த எண்களுக்கு உங்களுக்கு வேண்டிய பொருட்களை வாட்ஸ்அப் செய்தால் பொருட்கள் வீடுதேடி வருமென்கிறார்கள். ஆனால் ரெண்டு மூன்று நாட்களாகிறது பொருட்கள் வந்துசேர… பால் பண்ணைக்காரர்கள் சப்ளை செய்வது தடுக்கப்பட்டுள்ளதால், ஊர் முழுக்க ஒன்றுபோல பால் கிடைப்பதில்லை. சில பகுதிகளில் கிடைக்கிறது. இன்னும் சில பகுதிகளிலேோ பாலே கிடைக்கவில்லை. குழந்தைகளை வெச்சிருக்கிற வீடுகள்ல நிலைமை திண்டாட்டம்தான்” என்கிறார்கள்.

கரோனா பாதிப்பு ஏற்பட்ட தெருக்களில் சுகாதாரப் பணியாளர்கள் ப்ளீச்சிங் பவுடர், டிஸ்இன்பெக்டண்ட் தெளிப்பதில் காட்டும் அக்கறை மற்ற தெருக்களில் இல்லை. சில தெருக்களில் வழக்கமான குப்பை அகற்றும் பணியே நடைபெறுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் ஒலிக்கின்றன.

மருந்தகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அலைபேசியில் அழைத்துதான் மருந்துகளை ஆர்டர் செய்யவேண்டியிருக்கிறது. முன்பு வாடிக்கையாளர் என்ற முறையில் மெடிக்கலில் சாதாரணமாக வாங்கிவந்த சர்க்கரை, இரத்த அழுத்த மாத்திரைகளுக்கும் ப்ரிஸ்கிரிப்ஷன் கேட்கிறார்கள். ஊரடங்கில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் நோயாளிகள் எவரிடம் போய் ப்ரிஸ்கிரிப்ஷன் வாங்கிவருவது என்கிறார் ஒரு பெரியவர். மருந்துகளில் இத்தகைய கெடுபிடி காட்டினால், கரோனா மரணங்களுக்குமுன் இதர மருத்துவ இறப்புகள் நிகழ ஆரம்பித்துவிடும் என்கிறார்கள் ஆத்திரமாய்.
 

tenkasi district puliangudi


ஏ.டி.எம்.மில் காசு எடுக்கக்கூட போக முடியாத நிலையே நிலவுகிறது. இதனாலும் காய்கறியோ… மளிகை பொருளோ இல்லாததனாலும், பக்கத்து அண்டை வீட்டில் கைமாற்று, இரவல் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கரோனா தொற்றுக்கு ஏதுவாகிவிடும் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

கரோனா நோய் தொற்று ஏற்பட்ட தெருக்களில்கூட இன்னும் முழுமையாய் கரோனா சோதனைகள் நடத்தி முடிக்கப்படவில்லை. இந்த வேகத்தில் போனால் என்றைக்கு கரோனா நோயாளிகளைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, சிகிச்சையளித்து குணப்படுத்துவது என விரக்தியாய் கேட்கிறார்கள் சிலர்.

இப்பவே புளியங்குடிக்காரனா என ஏளமாகக் கேட்கிறார்கள். நிலைமை சரியானாலும் கொஞ்ச நாளைக்கு புளியங்குடிக்காரன்னாலே விலகி நிற்கிற மாதிரிதான் இருக்கும்போல… பிற ஊர்க்காரர்கள் தம் ஊரை ஒதுக்கிவிடுவார்களோ என கவலைப்படுகிறார் ஒருவர்.

தென்காசியின் கரோனா ஹாட்ஸ்பாட்டாய் மாறிவிட்ட நிலையில், மற்றவர்களுக்கு மே 4-ல் ஊரடங்கு அகற்றப்பட்டாலும், புளியங்குடிக்கு ஊரடங்கு அகற்றப்படுமா என்பது சந்தேகம். அதைக் கருத்தில் கொண்டு ரேஷனில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களோடு நிவாரணத் தொகையும் வழங்கவேண்டும். இல்லையெனில் கரோனா நோயின் தாக்கத்தைவிட பசியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிவிடுவார்கள் என்கிறார்கள் நம்மிடம்.