Skip to main content

நாட்டு மாடுகளைக் குறிவைக்கும் ‘பீட்டா’!

 

 
தமிழகத்தின் பாரம்பரிய மாட்டு இனங்களில் மிகவும் முக்கியமானவை பர்கூர் மற்றும் ஆலாம்பாடி இன மாடுகள். சத்தான பாலுக்கும், வண்டி ஓட்டுவதற்கும், நிலங்களில் உழவுவேலை செய்வதற்கும் ஏற்ற உடலமைப்பைக் கொண்ட இந்த இரு மாட்டு இனங்களும் தமிழகத்தை தாயகமாக கொண்டவை.

1951-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது  தமிழர்களின் பூர்வீக நிலமாக இருந்த கோவை மாவட்டத்தின் கொள்ளேகால் பகுதி கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. இதன் விளைவாக இந்த இரு மாட்டு இனங்களும், அந்த மாடுகள் வளரும் நிலப்பகுதியும் கர்நாடக மாநிலத்துடன் சேர்ந்துவிட்டது. ஆனாலும் அங்கு வாழும் மக்களில் எழுபது விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே.

மேற்குத்தொடர்ச்சிமலையில் உள்ள சத்தியமங்கலம் காடுகளுக்கு கிழக்கில், போதைமலை மற்றும் மாதேஸ்வரன் மலை காடுகளுக்கு மேற்கிலிருக்கும் காடுகளிலும் காட்டை ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு, காலங்காலமாகவே மாடுகள் வளர்ப்பது மட்டும் தான் தொழில். இந்தப்பகுதியில் உள்ள காடுகளில் நூற்றுகணக்கான மாடுகளை பத்து முதல் பதினைந்து பேர் ஒன்றாக சேர்ந்து அடர்ந்த காடுகளுக்கு உள்ளே ஓட்டிச்சென்று பட்டி அமைத்து வளர்த்துவருகிறார்கள்.

1790-களில் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த அலெக்ஸ்சாண்டர் ரீடு என்ற ஆங்கிலேயர் இந்த காடுகளில் மறைந்து வாழ்ந்துகொண்டு, இவ்வழியாக மைசூர் நாட்டுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வழிப்பறி மற்றும் கொள்ளை போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்த ஒருசில பழங்குடி இன மக்கள் குழுக்ககளை, இராணுவத்தின் மூலம் கைதுசெய்து கொண்டுவந்து அவர்களுக்கு ஆடு, மாடுகள் வளர்ப்பு பற்றி கற்றுக்கொடுத்து, கால்நடைகள் வாங்க நிதி உதவி செய்து கொடுத்துள்ளார் என்ற தகவல் சேலம் கெஜட்டியர் ஆவணத் தொகுப்புகளில் உள்ளது.தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வெளியூர் வேலைகளுக்கு சென்றுவிட்டாலும், சற்று வயதில் மூத்தவர்கள் இன்னும் மாடு மேய்ப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். கொள்ளேகால் வட்டம், ஆனூர், இராமாபுரம், அஜ்ஜிபுரம், மின்னியம், ஊக்கியம், நல்லூர், நால்ரோடு, சந்தானபாளையம், ஜல்லிபாளையம், ஒடக்காப்பள்ளம், தாளபெட்டா, கவுதள்ளி, மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட ஊர்களிலும், காடுகளிலும் வாழும் மக்கள் பர்கூர் இன மாடுகளை வளர்கிறார்கள்.

மாதேஸ்வரன் மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆலாம்பாடி, செங்கப்பாடி, மாறுகொட்டாய், ஆத்தூர், கோட்டையூர், பொரசால்நத்தம், அப்பகாம்பட்டி, பொன்னாச்சி போன்ற ஊர்களை ஒட்டிய காட்டுப்பகுதியில் வாழும் மக்கள் ஆலாம்பாடி இன மாடுகளை வளர்த்து வருகிறார்கள்.

இந்த இரு இன மாடுகளுமே முழுநேரமும் காடுகளில் கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாக சுற்றி மேய்ந்து வருபவை. உரிமையாளர்கள் இவற்றைக் கட்டிவைத்து பால் கறக்கும் வழக்கம் இல்லை. ஐம்பது மாடுகள் முதல் முன்னூறு மாடுகள் வரை கூட்டம் கூட்டமாக காடுகளில் வாழும்போது இயற்கையான முறையிலேயே இனச்சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மாட்டுக்கூட்டத்தில் பிறந்து வளரும் கன்றுகளை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை பிடித்து கொண்டுவந்து ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழாவில் கூடும் மாட்டுச் சந்தையில் விற்பனை செய்வார்கள். தாய்ப்பசுவின் பால் முழுவதையும் குடித்துவிட்டு, மலைப்பகுதி காடுகளில் விளையும், இயற்கையான இலைதழைகள், புற்களை உண்டுவாழும் இந்த மாடுகளின் கன்றுகள் உடல் பலமும், நோய்எதிர்ப்புசக்தியும் கொண்டவையாக இருக்கும்.

இந்த மாட்டுக்கன்றுகளை நல்ல விலைகொடுத்து வாங்கிக்கொண்டுபோக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்கு வருவார்கள்.

தற்போது, திருவிழா கூட்டம் கலைகட்டிவருகிறது. வரும் 08.08.17 முதல் 13.08.17 வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தாங்கள் வளர்த்த மாடுகளை விற்பனை செய்ய கொண்டுவரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு பேரிடியாக வந்துள்ளது; காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இராகவேந்திரா சாமிகள் என்ற அமைப்பு.

கடந்த ஒரு வாரமாக தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பாலாறு, கர்கேகண்டி, கேர்மாளம், கடம்பூர் போன்ற இடங்களில் உள்ள வனத்துறை மற்றும் காவல்துறை சோதனைச் சாவடிகளில் தானியங்கி கேமராவை வைத்துவிட்டு, காவலிருக்கும் இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பீட்டா அமைப்பினர், “நாட்டு மாட்டு இனங்களை அழியாமல் பாதுகாப்போம். கர்நாடகாவில் உள்ள நாட்டு மாடுகளை கறிக்காக விற்பனை செய்ய வெளியில் எங்கும் கொண்டு செல்லக்கூடாது. மாடுகளை வளர்க்க முடியாதவர்கள் எங்களிடம் விட்டுவிடுங்கள்; நாங்கள் விலை கொடுத்து வாங்கி மாடுகளை வளர்த்துக் கொள்கிறோம்” என்று துண்டறிக்கை விநியோகம் செய்கின்றனர்.சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறை அலுவலர்களிடம் நாட்டு மாடுகள் மாநில எல்லையில் வெளியே கொண்டுசெல்வதை தடுக்கவேண்டும் என்றும் இந்த அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் வனத்துறையினர் அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்கு மாடுகளை கொண்டு செல்லக்கூடாது. மீறி கொண்டு சென்றால், அந்த மாடுகளைப் பிடித்து காஞ்சி காமகோடி பீடத்துக்கு கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மக்கள் நாட்டு மாடுகளை வாங்கவும், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மாடுகளை விற்பனை செய்யவும் தயாராக உள்ள நிலையில் தடையாய் நிற்கிறது காஞ்சி காமகோடி பீடம். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- பெ.சிவசுப்ரமணியம்