Skip to main content

தம்பியின் குறி தப்பியதில்லை...

Published on 26/11/2017 | Edited on 26/11/2017
தம்பியின் குறி தப்பியதில்லை...

பொன்னாலை.

அங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 

யாழ்பாணம் நகர மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பாவுக்கு அந்தக் கோவில் என்றால் ரெம்பவும் இஷ்டம். 

அதெப்படி?

கிறிஸ்தவருக்கும் இந்து கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?

அவர் அப்படித்தான். இத்தகைய நாடகங்களால்தான் யாழ்பாணத்தின் மேயராக, ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.,யாக அவரால் ஆக முடிந்தது. சிறீமாவோ பண்டார நாயகாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். 

அவர் செய்த தவறு சொந்த இன மக்களின் சந்தோஷத்தைக் கெடுத்தது. அதற்குத்தான் அவர் தண்டனையை எதிர்நோக்கி இருந்தார். ஆனால், அந்த விஷயம் அவருக்கு தெரியாது. 

தமிழ் இளைஞர்கள் அனைவருமே அவரை குறிவைத்திருந்தனர். சிவக்குமரன் முயற்சி செய்து செத்துப்போனான். ஆனால், அவனுடைய நண்பர்கள் விடுவதாய் இல்லை. 



வேலுப்பிள்ளை பிரபாகரன், காண்டீபன், இன்பம், இன்னும் ஒரு நண்பர் என மொத்தம் 4 பேர்தான். தீவிரமாக ஆலோசித்தார்கள். 

“அவனைக் கொன்றுவிட வேண்டும். அதுதான் தமிழ் தேசத்திற்கு நல்லது. உண்ணாவிரதம், ஊர்வலம் எதுவும் பிரயோஜனமில்லை. அவனைக் கொல்வதன் மூலம் தமிழர்களுக்கு புதிய பாதையையும் நாம் காட்டுவோம்” என்றார் பிரபாகரன். 

“பொன்னாலையில் வேண்டாம்” என்றார் காண்டீபன். இவர் தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன். தனது தந்தையின் தொகுதியில் உள்ள பொன்னாலையில் இப்படி ஒரு கொலை வேண்டாம் என்று அவர் கருதினார். ஆனால், பிரபாகரன் முடிவு எடுத்துவிட்டார். 

1975ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி. பெருமாள் கோவில் வாசலில் பிரபாகரன் தனது நண்பர்களுடன் காத்திருந்தார். யாரிடமும் பதட்டமில்லை. உதறல் இல்லை. 

தமிழ் மக்களுக்காக இதை செய்யப்போகிறேன் என்று தனக்குள் கூறிக்கொண்டார் பிரபாகரன். 

வழக்கம்போல, போவோர் வருவோரை பார்த்து கும்பிட்டபடி காரில் வந்தார் ஆல்பிரட் துரையப்பா. பக்தி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்துக்களை கவருவதற்கு அவர் நடத்தும் நாடகம். வரதராஜ பெருமாள் கூட அவருடைய நாடகத்தை ஏற்க மாட்டார். 


துரையப்பா

எதிரே நிற்கும் எமனை அறியாமலேயே காரை விட்டு இறங்கினார். பிரபாகரன் கொஞ்சம்கூட பதட்டம் இல்லாமல், தனது துப்பாக்கியை இயக்கினார். பாய்ன்ட் பிளாங்க் ரேஞ்ச் என்பது துப்பாக்கி சுடுதலில் ஒரு இலக்கு. அந்த இலக்கில்தான் குறிதவறாமல் சுட்டார் பிரபாகரன். 

இறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அவருடைய உடல் மீது டி.என்.டி. என்று எழுதப்பட்ட அட்டையை வீசினார்கள். அவருடைய காரிலேயே ஏறி தப்பினார்கள். 

தகவல் இலங்கை முழுவதும் பரவியது. ஏதுமறியாதவர் போல பிரபாகரன் தனது வீட்டில் வந்து படுத்து தூங்கினார். 

“பயல்கள் சாதித்து விட்டார்கள்” தமிழர்கள் நெஞ்சில் ரகசிய பெருமிதம் பொங்கி வழிந்தது. 

யார் இந்த பிரபாகரன்?

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் குடும்பம் பிரபலமான குடும்பம். அவரது அப்பா வேலுப்பிள்ளை அரசாங்க நில அளவைத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தார். அம்மா பார்வதி அன்பே உருவானவர். அதிர்ந்து பேச மாட்டார். கோவில், கடவுள், புத்தகம் தவிர வேறு எதுவும் பெரிதாக தெரியாது. வீடு முழுவதும் புத்தகங்கள் இரைந்து கிடக்கும்.



வேலுப்பிள்ளையின் தாத்தா கட்டிய வைத்தீஸ்வரன் கோவில் வல்வெட்டித்துறையில் பிரபலமான கோவில். 

பிரபாகரன் வீட்டில் கடைசி பையன். பாலா, வினோதினி என்ற இரண்டு சகோதரிகள். ஒரு மூத்த சகோதரர். எல்லோருக்கும் பிரபாகரன் என்றால் ரொம்ப பிரியம். தம்பி என்றுதான் அழைப்பார்கள். 

அப்பாவுடன் பிரபாகரனுக்கு நெருக்கம் அதிகம். மிக உரிமையுடன் எப்போதும் அவர் மடி மீது அமர்ந்திருப்பார். அப்பாவுக்கு தந்தை செல்வாவை பிடிக்கும். அவர்தான் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார் என்று நம்பினார். 

ஆனால், நடந்து கொண்டிருந்த விஷயங்கள் அந்த நம்பிக்கையை போக்கிக் கொண்டிருந்தன. சிங்களர்களின் அட்டூழியம் அதிகரித்துக் கொண்டே போனது. 

ஒருநாள் பாணந்துறை கோவில் குருக்கள் ஒருவரை உயிரோடு கொளுத்திவிட்டார்கள் என்று அப்பாவின் நண்பர்கள் கூறினார்கள். அப்போது பிரபாகரனுக்கு 3 வயது. 

“அவர்களை குருக்கள் திருப்பி அடிக்கவில்லையா?”

மகனின் இந்தக்கேள்வியை தந்தை எதிர்பார்க்கவில்லை. திருப்பி அடிக்க வேண்டும் என்கிற எண்ணம் பிரபாகரனிடம் இருந்திருக்கிறது. தந்தையும் நண்பர்களும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் சின்னவயதில் இருந்தே பிரபாகரனுக்குள் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. 



கொழும்பில் இருந்து பிரபாகரனின் அத்தை வந்திருந்தார். ரொம்பநாள் கழித்து அவரை பிரபாகரன் குடும்பத்தினர் பார்த்தனர். அத்தையின் முகத்திலும் கழுத்திலும் கைகளிலும் தீக்காய வடுக்கள் இருந்தன. 

“இது எப்படி அத்தை வந்தது?” பிரபாகரன் கேட்டார்.

“ஏய், சும்மா இருங்க...” என்றார் அம்மா.

பிள்ளைகள் அடங்கி விட்டார்கள். சற்றுநேரம் கழித்து, அம்மா இல்லாத சமயத்தில் அத்தையிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தனர். 

அத்தை சொன்ன கதை அதிர்ச்சியூட்டியது. 

கொழும்புவில் சிங்களர்கள் தமிழர்களை விரட்டிவிரட்டி கொன்றார்கள். அத்தையின் வீட்டுக்கும் வந்தார்கள். அத்தையும் மாமாவும் அவர்களின் பிள்ளைகளும் அறைக்குள் ஓடி ஒளிந்தார்கள். சிங்கள வெறியர்கள் கவலைப்படவில்லை. ஒரு கேன் நிறைய பெட்ரோலை வீட்டுக்குள் ஊற்றினர். தீ வைத்தனர். வீடு தீப்பற்றி எரிந்தது. மாமா தீயில் சிக்கி இறந்தார். அத்தையும் பிள்ளைகளும் பின்பக்க சுவரேறி குதித்து தப்பினர். அவர்கள் வீட்டுக்கு பின்னால் இருந்த சிங்கள குடும்பத்தினர் சிலர் பாதுகாப்பு அளித்தனர். 

தமிழர் பகுதிகளில் மட்டுமின்றி, நாடு முழுவதும் சிங்களர்களின் அட்டூழியம் பரவி இருப்பதை முதன்முறையாக பிரபாகரன் உணர்ந்தார். 

1970களின் தொடக்கம். சிங்கள அரசு தமிழர்களின் கல்வியில் கை வைத்தது. அதைத்தொடர்ந்து மாணவர் பேரவை தொடங்கப்பட்டது. பொன்னுதுரை சத்தியசீலன் இந்த பேரவையை தொடங்கினார். ஏராளமான மாணவர்கள் சிங்கள எதிர்ப்பு உணர்வுடன் பேரவையில் இணைந்தனர். போராட்டங்களை நடத்தினர். 

பிரபாகரனும் பேரவையில் ஈடுபாடு காட்டினார். மாணவர்களுக்குள் தீவிரவாதம் வளர்ந்தது. 1972ல் துரையப்பா ஸ்டேடியத்தில் மேயர் ஆல்பிரட் துரையப்பா பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு குண்டு வெடித்தது. வெடிக்கச் செய்தது பிரபாகரன். அவருக்கு அப்போது 16 வயது. 

போலீஸ் பிரபாகரனை விரட்டியது. பிரபாகரனுடன் இருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். பிரபாகரன் இருட்டும் வரை வீட்டுக்கு வரவில்லை. 

அன்று அக்கா வினோதினிக்கு திருமணம். திருமண வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்தனர். எல்லோரும் பிரபாகரனைத் தேடினார்கள். அப்பாவுக்கு கவலை அதிகரித்தது. 

பிரபாகரன் என்ன செய்கிறான்? எங்கே போகிறான்? சமீப நாட்களாக அவனுடைய நடவடிக்கை சந்தேகப்படும்படி இருக்கிறதே, அக்காவின் திருமணத்தைவிட வேறு என்ன முக்கியமான காரியத்துக்கு போயிருக்கிறார் என்று அவருக்குள் கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்தன.

 இரவு நேரம். பிரபாகரன் வீட்டுக்கு வந்தார். எல்லோருக்கும் கவலை தீர்ந்தது. 

“எங்கப்பா போயிருந்தாய்?” வாஞ்சையுடன் கேட்டார் அப்பா.

பிரபாகரன் பதில் சொல்லவில்லை. 

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அப்பா கூறி, பிரபாகரன் கேட்டிருக்கிறார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் பிரபாகரனுக்கு பிடித்தவர்கள் சிலர்தான். அவர்களில் சுபாஷ் சந்திர போஸ் முக்கியமானவர். அடுத்தவர், பகத்சிங்.

உரிமைகளை வென்றெடுக்க நடத்தும் போராட்டத்தில், பிச்சை கேட்பது கேவலம். இது என் நாடு. இங்கே உனக்கு என்ன வேலை. நீயும் நானும் மனிதர்கள்தான். எனக்குரிய நிலத்தில் உனக்கேது உரிமை?

இப்படித்தானே இருக்க வேண்டும் விடுதலைக் குரல்.

அதை விடுத்து சாத்வீக போராட்டம் என்று என்று கூறி ஒண்ட வந்தவனிடம் அடி வாங்கியா சிறையில் பொழுதைக் கழிப்பது?

இதுதான் பிரபாகரனின் சிந்தனை.

இலங்கையின் ஒரு பகுதியில் நீ வந்து குடியேறினாய். நான் ஒரு பகுதியில் குடியேறினேன். உனக்கே நான் மன்னனாக இருந்தேன். என்னை ஒருபோதும் நீ வென்றதில்லை. வெள்ளைக்காரன் நிலப்பகுதிகளை இணைத்தான். அவன் யார் எனது நிலத்தை உன்னுடன் இணைக்க?

தனது பாதை சரிதான் என்று பிரபாகரன் நம்பினார்.ஒரு அறைக்குள் போய் படுத்துக் கொண்டார். அதிகாலை நேரம். இன்னும் இருள் விலகவில்லை. நெடுநேரம் திருமண வேலைகளை பார்த்துவிட்டு அப்போதுதான் படுத்திருந்தார் வேலுப்பிள்ளை. 

“யாரது? இந்நேரத்தில் கதவைத் தட்டுறது?” தூக்கக்கலக்கத்துடன் கதவைத் திறந்தார். உடனே திமுதிமுவென்று போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர். 

“எங்கே உங்கள் மகன்?” கேட்டபடியே வீடு முழுவதும் தேடினார்கள். வேலுப்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை. 

“இங்கேதான் படுத்திருக்கிறான்” என்று பிரபாகரன் படுத்திருந்த அறையின் கதவை திறந்தார். ஆனால், அங்கே தலையணையும் பாயும் மட்டுமே இருந்தது. பிரபாகரன் வெளியேறி இருந்தார். 

போலீஸ் தேடத் தொடங்கிவிட்டது. இனி ஆபத்துதான். வீட்டுக்கு போக முடியாது. வீட்டில் உள்ளவர்களுக்கு வீண் பிரச்சனை ஏற்படும். 

பிரபாகரன் ஒரு குழுவில் இருந்தார். அத்தனைபேரும் இளைஞர்கள். சிலர் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். 

25 பேர் இருப்பார்கள். அவர்களை இருவர் வழிநடத்தினர். ஒருவர் பெயர் நடராஜா தங்கதுரை. இன்னொருவர் பெயர் யோகச்சந்திரன் என்ற குட்டிமணி. 

தமிழர் தலைவர்களால் எந்தவிதமான பயனும் இல்லை. ஆயுதப்புரட்சி ஒன்றுதான் சுகவாழ்வை கொண்டு வரும் என்று நம்பியவர்கள்.

ஆயுதப்புரட்சி நடத்த நினைத்தால் போதுமா? ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் சுலபத்தில் கிடைத்து விடுமா? அவற்றை பயன்படுத்த பயிற்சி வேண்டாமா? 

பழைய துப்பாக்கிகள் சிலவற்றை தேடிப்பிடித்து வாங்கினார்கள். மெக்கானிக் ஒருவரின் உதவி கிடைத்தது. துப்பாக்கியின் பாகங்களை பிரித்து மாட்டவும், அவற்றை இயக்கவும் பழகிக் கொண்டார்கள். 



அவரிடம் இருந்து தொழில்நுட்பத்தை நன்றாகக் கற்றுக் கொண்டவர் பிரபாகரன்தான். குழுவில் மிகச்சிறுவனாக இருந்த பிரபாகரன் மீது குட்டிமணிக்கும் தங்கதுரைக்கும் பிரியம் அதிகம். 

இரவு முழுவதும் எங்காவது ஒரு ஓரத்தில் படுத்து உறங்குவார்கள். பகலில் காடுகளுக்குள் திரிவார்கள். சர்க்கரைவள்ளிக் கிழங்குதான் பொதுவான உணவு. அதிலும் பிரபாகரன் சர்க்கரைவள்ளிக் கிழங்குக்கு பச்சை மிளகாயை தொட்டுக்கொள்ள பயன்படுத்தினார். 

ஒரு குழுவில் இருந்தாலும் குழுவினரின் ஏனோதானோ நடவடிக்கைகளில் பிரபாகரனுக்கு ஆர்வம் இல்லை. தனக்கென்று ஒரு பாதையை சிந்தித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்திலேயே அவருக்கு நெருக்கமான சிலர் கிடைத்தனர். அத்தனைபேரும் போலீசாரால் தேடப்பட்டவர்கள். 

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள். தாங்கள் அனைவரும் தனிக்குழுவாக செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். தங்களுக்குள் பேசி அமைப்புக்கு புதிய தமிழ் புலிகள் என்று பெயர்கூட வைத்து விட்டார்கள். 

தலைமறைவு வாழ்க்கை எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் இருக்கும் இடம் போலீசுக்கு தெரிந்து விட்டது. போலீசுக்கு தெரிந்தது போலவே பிரபாகரனின் அப்பாவுக்கும் தெரிந்து விட்டது. 

ஒருநாள் நேரில் வந்து விட்டார். தந்தையைப் பார்த்த பிரபாகரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தார். மெதுவாக மௌனத்தை கலைத்தார். உறுதியான குரலில் பேசினார். 

“என்னை விட்டுவிடுங்கள். என்னால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை” என்றார். 

தந்தை வேலுப்பிள்ளை மகனை கைகழுவி விட்டு வீடு திரும்பினார். மகனோ, குழுவினருடன் இடத்தை மாற்ற முடிவு செய்தார். 

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்