Skip to main content

‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

சர்வதேச அளவில் எத்தனையோ போட்டிகள் நடந்தாலும், ஒலிம்பிக் என்றால் தனி மவுசு தான். கடந்த ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தரப்பில் இருந்து ஒருவர் கூட தங்கம் பெறாமல் வெளியேறி யிருந்தனர். அதை யடுத்து நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இந்தியாவிற்கு ஏறுமுகத்தைத் தந்தன. 



உயரம் தாண்டுதல் போட்டியில் கடந்த ஆண்டு சாதனையை முறியடுத்து, உலக சாதனையோடு தங்கப்பதக்கம் பெற்று வருவேன் என அன்றைய நாள் இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசியிருந்தார் மாரியப்பன். அதைப் போலவே அன்றைய போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார். நாடே ஒரு தமிழரை கொண்டாடித் தீர்த்தது. அவருக்கு தற்போது இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளின் ஒன்றான அர்ஜூனா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி என்ற கிராமத்தை யடுத்த பெரியவடுகபட்டியைச் சேர்ந்தவர்தான் இந்த மாரியப்பன். இவருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்களைச் சேர்த்து மூன்று பேர். இவரது தாயார் சரோஜாதான் காய்கறி வியாபாரம் பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். மாரியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார்.

மாரியப்பனுக்கு 5 வயதாக இருக்கும்போது பேருந்து காலில் ஏறியதில், கட்டைவிரல் தவிர்த்து மற்ற பாகங்கள் நசுங்கின. இதனால், ஒருகாலில் மட்டும் வளர்ச்சி குன்றிய நிலையில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். சிறுவயதில் இருந்தே உயரம் தாண்டுதலில் இருந்த ஆர்வம், அவரது கால்குறைபாட்டைத் தாண்டியும் அவரை வெற்றியை நோக்கி உந்தியது. அதை மாரியப்பன் வெளிக்காட்டத் தொடங்கியதில் இருந்தே மிகப்பெரிய கவனிப்பை ஏற்படுத்தித் தந்தது. அவரது திறமையை சரியாக உணர்ந்தவர்கள் அவரை மாவட்ட, மாநில உயரம் தாண்டும் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தனர்.



தொடர்ந்து தன் திறமையை வெளிப்படுத்திய மாரியப்பன், 2013 முதல் 2015 வரையிலான சர்வதேச உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். இதைக் கவனித்த பயிற்சியாளர் சத்ய நாராயணன், மாரியப்பனை பெங்களூரு அழைத்துச் சென்று மூன்று ஆண்டுகள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தினார். உலகத் தரம்வாய்ந்த பயிற்சிக்காக மாரியப்பனை ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் அவர் தன் சொந்த செலவில் அனுப்பிவைத்தார்.

‘எனது வெற்றிக்கு கோச் சத்ய நாராயணன் தான் முக்கியக் காரணம். அதை வேறு யாரும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது. அவரிடம் பயிற்சி பெற்றபோதுதான் ஷூக்கள் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டேன். அதுவரை எல்லா போட்டிகளிலும் வெறுங்காலில்தான் கலந்துகொள்வேன்’ என ஒரு பேட்டியில் மனம் திறக்கிறார் மாரியப்பன்.

அந்த இறுதிப்போட்டியின் கடைசி நிமிடங்களில் ஒட்டுமொத்த மைதானத்தையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார் மாரியப்பன். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உயரம் இல்லையென்றாலும், ஒற்றைக்காலில் கிட்டத்தட்ட 6.2 அடி உயரத்தை சாதாரணமாக தாண்டிவிட்டு, கூலாக இறங்கிவரும் மாரியப்பனை ‘தங்கமகன்’ மாரியப்பன் என்று கொண்டாடித்தீர்த்தனர்.
 
‘வெற்றிக்கும் முன்பும் பின்புமான என் வாழ்க்கை மிக வித்தியாசமானதாக இருக்கிறது. என்னை யாரெல்லாம் ஒதுக்கினார்களோ, அவர்களே என்னையும் என் குடும்பத்தையும் இப்போது நெருங்கி வருகிறார்கள். இந்தப் பதக்கமும் எனக்குள் பல சோகங்களைத்தான் ஏற்படுத்தியுள்ளது. எப்போது ஊருக்குப் போவேன், அம்மாவின் முகத்தைப் பார்ப்பேன் என்ற எண்ணத்தைத் தவிர வேறெதுவும் எனக்குள் இல்லை. நான் வெறும் மாரியப்பன் தான். என்னோடு தங்கவேலுவைச் சேர்க்க வேண்டாம்’ என பாராலிம்பிக் நிறைவுநாளில் பிரேசிலில் இருந்து ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் எண்ண ஓட்டங்களைக் கொட்டித்தீர்க்கிறார் மாரியப்பன்.



தற்போது இந்தியாவிற்காக பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவரது பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு, அர்ஜூனா விருது  வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

சாதிக்க வேண்டும் என்றால் தன்னிடம் இருக்கும் குறைகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் நிச்சயம் வெற்றிதான். அதன்பின் உலகமே உங்களைக் கொண்டாடும் என்பதற்கு மாரியப்பன் சிறந்த உதாராணம். அர்ஜூனா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாரியப்பனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்