Advertisment

எத்தனை கட்சிகள்... எத்தனை கொள்கைகள்... தமிழருவி மணியன் கடந்து வந்த பாதை!

tamilaruvi manian

Advertisment

"இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது. தி.மு.க.வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வர மாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொது வாழ்க்கைப் பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம்." என்று தமிழருவி மணியன் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அருவியிலிருந்து ஊற்றும் நீர்போல தமிழில் பலமணிநேரம் சொற்பொழிவு ஆற்றும் இவரது வல்லமையை பார்த்த காமராஜர்தான் தெய்வசிகாமணி எனும் இவருக்கு‘தமிழருவி’ என்கிற பட்டத்தை வழங்கினார்.அன்றிலிருந்து தமிழருவி மணியன் என இன்றுவரை அழைக்கப்படுகிறார். கிட்டத்தட்ட ஐம்பது வருட காலம் அரசியலில் இருப்பவர், தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடம் கிடைத்துவிட வேண்டும் என்று போராடிக்கொண்டிருப்பவர் திடீரென இறப்பு வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று சொல்வதற்கு காரணம், ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் முடிவுதான். 2018ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதிலிருந்து அவருடைய அரசியல் ஆலோசகராக இருந்து வருகிறார் தமிழருவி மணியன்.

பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் காமராஜரின் அரசியலால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் காமராஜர் தொடங்கிய ஸ்தாபன காங்கிரஸில் சேர்ந்தார். காமராஜரின் மறைவுக்கு பின்னர் வி.பி சிங்கின் ஜனதா தளம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஜனதா கட்சியில் இருந்து விலகிய ராமகிருஷ்ணா ஹெக்டே, லோக் சக்தி என்னும் கட்சியை தொடங்கியபோது அக்கட்சியின் தமிழ்நாடு தலைவராக செயலாற்றினார் தமிழருவி மணியன். திராவிடக் கட்சிகளை ஒழித்து தமிழ்நாட்டில் மாற்று அரசியலை உருவாக்கதான் பாடுபடுகிறேன் என்று பேசிவந்த தமிழருவி மணியன், அப்போதைய திமுக தலைவரான கலைஞருடன் நெருக்கமாக இருந்த காலகட்டமும் உள்ளது. திமுகவிலிருந்து பிரிந்த வைகோவை அடுத்த முதல்வராக்குவேன் என்றும் சபதமும் எடுத்திருந்திருக்கிறார். அந்த சமயத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசினார். இதற்காக ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுலாவும் மேற்கொண்டுள்ளார். அது ஒரு காலம். இதன்பின் ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் தமிழருவி மணியன் இணைந்துகொள்ள, இறுதியில் தமிழ் மாநில காங்கிரஸை காங்கிரஸுடன் இணைக்கும்போது மீண்டும் காங்கிரஸுக்கே வந்து சேர்ந்தார். இதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு, கலைஞர் ஆட்சியில் திட்டக் கமிஷன் குழு உறுப்பினராக 30 மாதங்கள் பணியாற்றினார். ஈழப் பிரச்சனையால் அந்தப் பதவியில் இருந்து விலகினார். 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டியில் உறுப்பினராக செயலாற்றியவர். ஈழப் பிரச்சனை காரணமாக அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதே ஆண்டில் காந்தி பிறந்தநாளன்று காந்திய மக்கள் இயக்கத்தை தொடங்கினார்.

Advertisment

2014ஆம் ஆண்டு காந்திய மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றினார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை ஆதரித்தார். இக்கால கட்டத்தில் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். ஒரு சமயத்தில் ரஜினிகாந்தையும் விமர்சித்து மேடைகளில் பேசியிருக்கிறார் தமிழருவி மணியன். இதன்பின் எப்படியோ இருவருக்கும் ஒத்துப்போக, இருவரும் சேர்ந்து கட்சி நடத்தும் பணிகளில் ஆயத்தமானார்கள். ரஜினிகாந்த் கட்சி தொடங்கிவிட்டால் காந்திய மக்கள் இயக்கத்திலுள்ள 3 லட்ச தொண்டர்களை அக்கட்சியுடன் இணைப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், ரஜினியின் முடிவால் தமிழருவி மணியனின் இத்தனை வருட அரசியல் பயணம் நின்றுவிட்டது.

தமிழக அரசியலில் தனக்கென இடம் கிடைத்துவிட வேண்டும் என போராடிய தமிழருவி மணியன், அதற்காக பல கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். பாரபட்சமில்லாமல் அனைத்து கொள்கைகளிலும் தூக்கிப் பிடித்திருக்கிறார்.

rajnikanth tamilaruvi manian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe