Advertisment

தமிழகத்தை குறிவைத்து தீவிரவாதம்?உளவுத்துறை அதிர்ச்சி!

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல் நூற்றுக்கணக் கான பேரை பலி வாங்கியது. அந்த தாக்குதல் தமிழகத்தின் கோவை, சென்னை; கேரளாவில் பாலக்காடு, தமிழக-கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்றிருக் கும். ஆனால் இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையோடு இருந்ததனால் தவிர்க்கப்பட்டிருக் கிறது என்கிறார்கள் தீவிரவாத எதிர்ப்பில் நிபுணத் துவம் பெற்றிருக்கும் காவல்துறை அதிகாரிகள். அவர்களிடம் பேசிய போது, "சாகீர் நாயர் போன்றவர்கள் பரப்பி வரும் வழிபாட்டு முறையான "வஹாபிசம்' முஸ்லிம் இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. இதில் "ஜிஹாத்' போற்றப்படுகிறது.

Advertisment

srilanka

வஹாபிசத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும் நான்கு இளைஞர்கள் கூடினாலும் ஜிஹாத்தின் சாதக பாதகங்கள் பற்றிய விவாதம் எழுகிறது. யார் அதிகம் தங்கள் மத விரோதிகளை தாக்கினார்களோ அவரே ஹீரோவாக இளைஞர்களால் கருதப்படுகிறார். இந்த ஹீரோ வழிபாடுதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இமாம் அலி இப்படி உருவானவன்தான்'' என்கிறார்கள். இப்பொழுது சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இயங்கும் ஐ.எஸ். தீவிரவாதி கள் சிறந்த ஜிஹாதிகள் என வஹாபிசத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கருதி, அவர்களை பின்பற்றத் தொடங்குகிறார்கள். இன்று உலகத்தை கைக்குள்ளே கொண்டு வந்திருக்கும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற இன்டர்நெட் சேவைகள் இலங்கை, இந்தியா, சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகளை கடந்து ஜிஹாதி மனநிலையில் இருக்கும் இளைஞர்களை ஒன்றிணைக்கின்றன என்கிற அதிகாரிகள் அதற்கு உதாரணமாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவனின் கதையை சொன்னார்கள்.

srilankan

Advertisment

2015ஆம் ஆண்டு முதல் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கத்தார் நாடு வெளியேற்றிய பாலகாட்டைச் சேர்ந்த இளைஞருடன் கோவையில் கைது செய்யப்பட்ட கலீஃபா இயக்கத்தினர் தொடர்பிலிருந்திருக்கிறார்கள். இந்த பாலக்காட்டுக்காரர் ஜப்பாத் அல் நுங்ரா என்கிற ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்காக சிரியாவுக்கு செல்ல முயன்ற போது கத்தார் அரசு இவரை வெளியேற்றியது. சிரியாவிலிருந்து 2015-ஆம் ஆண்டு கோவைக்கு அவர் வந்துள்ளார். கோவையில் இருந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அவர் கத்தாரில் இருந்த போதே கோவையைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவாக உருவாக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழுவில் அவரை இணைத்துள்ளார்கள். இந்த பாலக்காட்டு இளைஞரை 2019-ல்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சி கண்டுபிடிக்கிறது.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில்தான் கோவை தொடர்புகள் தெரிய வருகிறது. கத்தாரில் இயங்கிய இந்த ஐ.எஸ். ஆதரவு தீவிரவாத அமைப்பை ஹஷீர் என்கிற மலையாளி உருவாக்குகிறார். அவர் ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பை உருவாக்கிய அப்துல்லா யூசூப்புடன் தொடர்பு வைத்திருந்தார். அப்துல்லா யூசூப் ஆப்கானிஸ் தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பிறகு இந்த அமைப்பு பலவீனமடைகிறது.

கர்நாடகா மற்றும் கேரளா, கோவை ஆகிய இடங்களில் உள்ள பலரையும் இந்த அமைப்பு இணைத்திருக்கிறது என அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது பேஸ்புக் நண்பர்களை அலசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. ஆராயும்போதுதான், கலீஃபா என்கிற அமைப்பை கோவையில் நடத்தி வந்த முகம்மது அசாருதீன் சிக்குகிறார். அசாருதீனும் அவரது நண்பர்களும் தங்களது பேஸ்புக் பக்கங்களில் இசுலாமிய ஜிஹாத் பற்றி அதிகம் பதிவு செய்திருக்கிறார்கள். கோவையில் தங்கள் மத எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை லாரி ஏற்றிக் கொல்வது, வெடிகுண்டு வீசி தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொல்வது போல கொல்ல வேண்டும். அவர்கள் பொதுமக்கள் அல்ல. இசுலாமிய எதிரிகள் என குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப்பதிவுகளில் பதிவு செய்துள்ளதையும் அவர்கள் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களுக்கு வந்து சென்றதை வைத்து மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் முதல் தகவல் அறிக்கையிலும் அவர்களது சமூக வலைத்தள பதிவுகளை பதிவு செய்துள்ளது. இலங்கையில் தாக்குதல் நடப்பதற்கு முன்பே கோவை, சென்னை போன்ற இடங்களில் தாக்குதல் நடத்துவது பற்றி இவர்கள் திட்டமிட்டனர் என குறிப்பிடும் தேசிய புலனாய்வு ஏஜென்சி, இலங்கை குண்டுவெடிப்புக்கு பிறகு இவர்கள் தீவிரமாக தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் எனவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தான் இலங்கையில் குண்டுவைத்த சஹ்ரான் ஹாஸ்மியுடன் தொடர்பில் இருந்தார்கள். ஆனால் சென்னை பூந்தமல்லியில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கர் என்பவர் இலங்கையில் குண்டு வைத்தவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். அவரையும் கேரளாவில் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சி கைது செய்தது. கேரளாவிலும் பலரை ஐ.எஸ். தொடர்புடையவர்கள் என என்.ஐ.ஏ. கைது செய்தது. அவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் போலவே ஜிஹாத் பற்றியும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைப்பது பற்றியும் சமூக வலைத்தளங்களில் பேசியதோடு ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர்களாக தான் இருந்தார்கள் என்கிறது தேசிய புலனாய்வு ஏஜென்சி.

கோவையில் பிடிபட்டவர்களிடம், துண்டுப் பிரசுரங்களை கைப்பற்றியதுடன், பதினான்கு மொபைல் போன்கள், 29 சிம் கார்டுகள், மூன்று லேப்டாப்புகளையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி கைப்பற்றியதாக செய்திகள் வெளிவருகிறது. எனினும் குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறிவைத்து என்.ஐ.ஏ. செயல்படுவதாகவும், ஜனநாயக ரீதியான அமைப்புகளை தடை செய்ய என்.ஐ.ஏ. பயன்படுத்தப்படுகிறது எனவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகிறது. ""எங்களுக்கும் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை'' என எஸ்.டி.பி.ஐ.யும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவும் அழுத்தமாக மறுத்து வருகிறது. ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும். தீவிரவாதம் எந்த மதச்சாயம் பூசி வந்தாலும் நசுக்கப்பட வேண்டும்.

incident public issues srilanka Tamilnadu vigilance officers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe