Advertisment

மக்களவையில் பாஜகவைப் பதறவிட்ட தமிழக எம்.பி.க்கள்!

நமது வழியையும் ஆயுதத்தையும் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

Advertisment

loksabha

புதிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளும் பாஜக எடுத்த ஆயுதம், தமிழக எம்.பி.க்களின் ஆயுதத்தை தீர்மானிக்க உதவியிருக்கிறது.

Advertisment

மக்களவையில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு, இந்த பதவியேற்பு நிகழ்வு அமைந்துவிட்டது. புதிய உறுப்பினர்கள் உறுதியேற்பு நிகழ்வு ஜூன் 17 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. பெரும்பான்மையோடு பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் என்ன நடக்கும் என்று இந்த நாடு அஞ்சியதோ அதன் தொடக்கமாகவே நேற்று அந்தக் கட்சியின் போக்கு அமைந்தது.

ஸ்மிருதி ராணி உறுதிமொழி ஏற்க அழைக்கப்பட்டவுடன் மோடி உள்ளிட்ட பாஜகவினர் நீண்ட நேரம் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இதுவே ஒருவிதமான அநாகரிகமாக கருதப்பட்டது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்ததை கொண்டாடும் வகையில் அவர்களுடைய செயல் அமைந்தது. எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று நடுநிலையாளர்கள் கூறினார்கள்.

இந்த அத்துமீறல் அத்துடன் முடிந்துவிடவில்லை. மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், அஸ்வினி சவ்பே உள்ளிட்ட சிலர் இந்தியாவின் அலுவல் மொழியாகக்கூட இல்லாத சில ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பல்வேறு மாநில மொழிகளிலும் உறுதிமொழி ஏற்கத் தொடங்கினார்கள்.

loksabha

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளியான பிரக்யா தாகூர் உறுதிமொழி ஏற்றபோது தன்னை பெண்துறவி என்று கூறினார். மக்களவை விதிகளுக்கு புறம்பான இந்த வார்த்தைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. உடனே, மீண்டும் சாத்வி என்ற வார்த்தை இல்லாமல் பிரக்யா உறுதிமொழி ஏற்றார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் சிலர் பதவியேற்க வந்தபோது பாஜக உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார்கள். மக்களவை மரபுகளுக்கு மாறான இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க தமிழக எம்.பி.க்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி செவ்வாய்க்கிழமை 18 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் அழைக்கப்பட்டபோது திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் உறுதிமொழி ஏற்று முடித்தவுடன் வாழ்க பெரியார் என்று கூறினார். இப்படித்தான் தொடங்கியது தமிழக எம்.பி.க்களின் அதிர்ச்சி வைத்தியம்.

loksabha

பெரியார் என்ற பெயர் பாஜகவினரிடம் பதற்றத்தை உருவாக்கியது. நீங்கள் ஸ்ரீராம் என்றால் நாங்கள் பெரியார் என்போம் என்கிற வகையில் இந்த உறுதியேற்பு தொடங்கியது. மத்தியசென்னை உறுப்பினர் தயாநிதி மாறன் உறுதிமொழியை வாசித்தபிறகு வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று உணர்ச்சிகரமாக முழக்கமிட்டார். இது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்துவந்த திமுக உறுப்பினர்களில் தர்மபுரி டாக்டர் செந்தில்குமார் கருப்புச்சட்டையுடன் வந்ததுடன், வாழ்க திராவிடம், வாழ்க பெரியார் என்று கூறினார்.

ஈரோடு கணேசமூர்த்தி எனது தாய்நாடு தமிழ்நாடு, தாயகத்தின் உரிமை காப்போம் என்று அதிரவைத்தார். திருமாவளவன் உறுதியேற்பின் போது வாழ்க அம்பேத்கர், பெரியார், வாழ்க ஜனநாயகம், சமத்துவம் என்றார். இந்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பாரிவேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்றார். கனிமொழி வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்றார். சிபிஎம் உறுப்பினர் வெங்கடேசன் தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க என்றார். சீனியர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தமிழில் உறுதிமொழியை வாசித்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.

காங்கிரஸ் உறுப்பினர்களில் திருநாவுக்கரசரும், கார்த்திக் சிதம்பரமும் கடவுளறிய உறுதிமொழி ஏற்பதாக கூறினர். அதிமுக உறுப்பினரான ரவீந்திரநாத் கடவுளறிய உறுதிமொழி ஏற்பதாக கூறியதுடன், வாழ்க எம்.ஜி.ஆர்., வாழ்க அம்மா, வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என்று கூறி பாஜகவினரை பரவசப்படுத்தினார். பாஜக உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக மேஜைகளைத் தட்டினார்கள்.

மொத்தத்தில் பாஜக மேற்கொள்ளும் பிரிவினைவாத, மதவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள எங்களிடம் பெரியார் இருக்கிறார் என்று தமிழக எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பகிரங்கமாகவே பதிவு செய்து, பாஜகவை பதற்றமடையச் செய்திருக்கிறார்கள்.

admk congress loksabha parliment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe