Skip to main content

தனிமையின் முதல் நாள்!

Published on 25/03/2020 | Edited on 02/04/2020

 

      கரோனா ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழ்நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (24-3-2010) மாலை 6 மணியிலிருந்து 144 தடையுத்தரவு நடைமுறைக்கு வந்த நிலையில், இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என அறிவித்தார். இதனைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கைக்கூப்பி கேட்டுக்கொண்டதுடன், வீட்டை விட்டு வெளியே வந்தால் அது கொரோனாவை வலிய அழைப்பது போல ஆகிவிடும் என்றும் எச்சரித்தார்.
 

      மார்ச் 31 வரை 144 எனத் தொடங்கிய தமிழ்நாட்டின் தனிமைப்படுத்தல், பிரதமரின் உத்தரவினால் இந்தியா முழுமைக்குமான 21 நாட்கள் ஊரடங்கு நிலைமைக்குள் சென்றது. நேற்று மாலை நேரத்துக்கு முன்பாக ஒரு  வார காலத்திற்கான உணவுப்பொருட்கள்,காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசியத் தேவைகளை வாங்கிய மக்கள், 21 நாட்கள் ஊரடங்கு என்றால் என்ன செய்வது என்ற பதற்றத்துக்குள்ளாயினர்.

 

first day


 

      உலகை அச்சுறுத்தும் கரோனா ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுத்துதலைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதால் நள்ளிரவு முதல் இந்தியா முடங்கியது. 21 நாட்கள் தனிமையின் முதல் நாளான இன்று காலையில் தமிழகம் துக்க செய்தியுடன்தான் விழித்தது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கான முதல் பலியாக மதுரை அரச இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுக்காரர் உயிரிழந்தார் என்பதுதான் அந்த செய்தி. அத்துடன், கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், கொரோனாவுக்குப் பயந்து காட்டுப் பகுதி வழியே வந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காட்டுத் தீயில் சிக்கி இறந்த கொடூரச் செய்தியும் வீட்டில் முடங்கியிருந்தவர்களை அச்சுறுத்தியது.
 

      தமிழ்நாட்டில் எடப்பாடி அரசின் 144 தடையுத்தரவு பின்பற்றப்படுமா, மோடியின் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுமா என்ற சந்தேகமும் மக்களுக்கு இருந்தது. 144 என்றால் ஆட்கள் கூட்டமாக சேருவதற்குத்தான் தடை இருக்கும். தனித்தனியாக சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது. ஊரடங்கு என்றால் குறிப்பிட்ட சில நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியாது. 144 தடையுத்தரவையும் ஊரடங்கையும் கலந்தது போன்ற நிலைமையுடன்தான் தமிழ்நாட்டின் பொழுது விடிந்தது.

 

first day


 

      சென்னை போன்ற மாநகரங்களில் தொடங்கி, தமிழகத்தின் சிறு நகரங்கள் வரை பெரும்பாலான கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்குத் தடை இல்லை என அரசு அறிவித்திருந்தபோதும், நீண்ட நேர விற்பனைக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பத்திரிகைகள் விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள், பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளையும் அடைக்கச் சொல்லி காவல்துறை வலியுறுத்தியது.
 

      டீக்கடைகளில் கூட்டமாக ஆட்கள் நின்றால் போலீஸ் விரட்டியது. ஹோட்டல்களில் பார்சல் மட்டும் விற்கலாம் என்றபோதும், பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன. காய்கறி, பழங்கள் போன்ற அன்றன்றே விற்றாக வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். பொதுமக்கள் வருகை குறைவாகவும், காவல்துறை கண்காணிப்பு அதிகமாகவும் இருந்தது.

 

first day



 

      அவசர வேலை, அலுவலக வேலைகளுக்காக காரிலும் டூவீலரிலும் சென்றவர்களைப் போலீசார் நிறுத்தி விசாரித்தனர். உரிய காரணம் தெரிவிக்காவிட்டால் அவர்களை அனுமதிக்கவில்லை. சென்னை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை கையெடுத்துக் கும்பிட்டு கலங்கிய குரலுடன், பயணத்தைத் தவிர்த்து வீட்டிலேயே இருங்கள் கெஞ்சியதும், டூவீலரில் வந்த இளைஞர் ஒருவர் அவரது கால்களைத் தொட்டு வணங்கியதும் டி.வி.சேனல்கள் மூலம் பரவியது.
 

      இத்தகைய அன்பான  கோரிக்கைகள் ஒருபுறத்திலும், கொஞ்சம் அதட்டலுடன் விரட்டியது மறுபுறத்திலுமாக காவல்துறையின் கண்காணிப்பு  தொடர்ந்ததால், சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடாக இருந்தது. அதே நேரத்தில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த பலருக்கும் ஒரு நாள் பொழுதைக் கழிப்பது என்பது பெரும்பாடாக இருந்தது.  

 

first day


 

      டி.வி. பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளைப் பகிர்வது, நண்பர்கள்-உறவினர்களிடம் பேசி நலன் விசாரிப்பது, சமைப்பது, வீட்டுப் பணிகளைக் கவனிப்பது என தங்கள் நேரத்தை செலவிட்டாலும், 21 நாட்கள் இப்படியே இருக்கணுமா என்கிற பதற்றமான கேள்வி அவர்கள் மனதுக்குள் இருப்பதை வாட்ஸ்ஆப்பில் வெளியான பல பதிவுகள் படங்களுடன் அம்பலப்படுத்தின.
 

      ஒர்க் அட் ஹோம் எனும் வகையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவோர் உள்பட பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்தாலும், அதனை முடக்கமாகவே கருதினர். நகர்ப்புறங்களில் இருந்த அளவுக்கு கிராமப்புறங்களில் தனிமைப்படுத்துதல் சாத்தியமாகவில்லை என்றாலும் அங்கும் போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தது. தர்மபுரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில கிராமத்தினர் தங்கள் கிராமத்திற்கு வரும் சாலைகளை மூடி, வெளியாட்கள் வராதபடி பார்த்துக்கொண்டனர். எனினும் டீக்கடைகள் போன்ற இடங்களில் கூட்டம் இருந்ததால், அதனையும் மார்ச் 25 மாலையிலிருந்து மறு உத்தரவு வரும் வரை மூடச் செய்தது அரசின் உத்தரவு.

 

first day


 

      தனிமைப்படும் 21 நாட்களில், இரண்டாவது  வாரத்திலிருந்து அத்தியாவசியப்  பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். அதே நேரத்தில் அதன் விநியோகம் குறைவாக இருக்கும். நாள்தோறும் உழைத்து ஊதியம் பெறுகிறவர்கள், வாரச் சம்பளம் வாங்குவோர், மாதச் சம்பளக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கைகளிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இத்தகைய நெருக்கடியை அரசின் உதவியின்றி சமாளிக்கவே முடியாது. அதனால் அரசு இயந்திரங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கிறார்கள்.

 

first day


 

      இத்தகைய சிந்தனையுடன் வீட்டுக்குள் இருக்கும்போது, பாதுகாப்பு உணர்வைவிட கவலைகளும் பதற்றமும் அதிகரிக்கும். என்ன செய்வது-எப்படி நேரத்தைக் கடத்துவது என்ற சலிப்பும் ஏற்படும். தானாக வீட்டில் இருந்தால் ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டே இருப்பவர்கள்கூட, கட்டாயமாக வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற மனநிலையால் என்ன செய்வது என்ற சோர்வுக்குள்ளாயினர்.

 

first day


 

      மனச்சோர்வு ஏற்படாமல் நம்பிக்கையுடன் 21 நாட்களைக் கடத்த வேண்டிய கட்டாயத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உருவாக்கியுள்ளன. பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதாரத்துறை அமைச்சர் என அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று, 21 நாட்கள் மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அதற்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளையும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தையும் சரிவரக் கையாள வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் பொறுப்பு. அதனை வலியுறுத்தவேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.
 

எவர் பக்கம் அலட்சியம் ஏற்பட்டாலும் அது 21 நாள் முடக்கத்தின் நோக்கத்தை சட்டென சிதைத்துவிடும், மக்கள் ஊரடங்கு நாளான மார்ச் 22 அன்று மாலையில் கூட்டம் கூட்டமாக மணி அடித்து கொரோனாவைக் கூப்பிட்டதுபோல!  


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.