ADVERTISEMENT

புது டெக்னிக் மூலம் 50 கோடிக்கு மேல் ஊழல்!!! ஒழியாத கரோனா தொற்று! ஓயாத ஊழல்!

09:43 AM Jul 28, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு கடைப்பிடிக்கும் முறைகள் மிகவும் ரகசியமானதாகவும், ஊழல் நிறைந்ததாகவும் காணப்படுகிறது என்கிறார்கள் நேர்மையான மருத்துவர்கள். சென்னையில் தினமும் 2,000 பேர் புதிய நோயாளிகளாக கணக்கிடப்பட்டு வந்த சூழல் கடந்த 10 நாட்களாக குறைந்து வருகிறது. 2000-க்கும் குறைவாகவே கணக்கு காட்டப்படுகிறது.

இதைப்பற்றி நாம் விசாரித்தபோது, நம்மிடம் பேசிய அதிகாரிகள், இது அப்பட்டமான பொய். சென்னையில் குறைந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சென்னையின் பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் கூடுகிறது. இங்கு வரும் நோயாளிகளின் கணக்கை மடை மாற்றி பக்கத்து மாவட்ட கணக்குகளாக மாற்றி அறிவித்துவிடுவதுதான் சென்னையில் கரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டதாக காட்டப்படுவதன் ரகசியம் என நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.

அதேபோல் கரோனா நோயை கட்டுப்படுத்த தேவையான பொருட்களை வாங்கும் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம் இதுவரை 400 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த 400 கோடி ரூபாய் பர்சேஸ்க்கு எந்த டெண்டரும் இல்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஆனந்த் என்பவர்தான் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அதிக விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்டை சீன கம்பெனிகளிடம் இருந்து வாங்கியவர். இப்பொழுது 'சீன பொருட்களை புறக்கணிப்போம்' என இந்திய அரசு சொல்லி வரும் வேளையில் சீனாவில் இருந்து என்-95 மாஸ்க்குகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. இவையனைத்தும் தரம் குறைந்த மாஸ்க்குகள் என்கிற செய்தி உலாவுகிறது.

அதேபோல் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'Hi flow canola' என்கிற இயந்திரத்தை தமிழக அரசு வாங்கியுள்ளது. வெண்டிலேட்டர் எனப்படும் மூச்சு அடைப்பை சீராக்க உதவும் கருவிக்கு பதில் இந்த Hi flow canola கருவியை உபயோகிக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மொத்தம் ஆயிரம் கருவிகள் 300 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு வாங்கியுள்ளது. இதற்காக எந்த டெண்டரும் விடவில்லை. இந்த கருவியை தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் 3 லட்சத்துக்கு குறைவாகவே தரத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு தெரியாமல் இந்த கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இதில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இதன் முழுப் பரிணாமமும் அறிந்தவர் ஆனந்த் என்கிறார்கள் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்த கரோனா காலத்தில் தமிழக அரசு செலவு செய்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு எந்தவித ஆடிட்டும் இல்லை. எனவே நினைத்ததை நினைத்த வகையில் எந்த வரைமுறையும் இல்லாமல் வாங்கிக் குவிக்கிறார்கள் அதிகாரிகள். விஜயபாஸ்கர் பொறுப்பில் உள்ள நிலையில் நடைபெறும் இந்த கொள்ளை தமிழக மருத்துவத்துறை அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.

மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இயங்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலவு செய்யப்படும் தொகை பற்றி கடந்த பத்து வருடங்களாக எந்தவிதமான ஆடிட்டிங்கும் செய்யப்படுவதில்லை என்கிறார் கோயம்புத்தூரைச் சார்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் முருகன்.

அரிசிப்பாளையம் என்கிற பகுதியை சார்ந்த இவர், ஒரு நள்ளிரவில் ஜுரம் பாதித்ததால் அவரது ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியுள்ளார். அவரை நிமிர்ந்துகூட பார்க்காமல் ஜன்னல் வழியே மருந்தை தூக்கி எறிந்திருக்கிறார்கள் அங்கிருந்த ஊழியர்கள். டென்ஷனான அவர், தமிழகத்தில் தற்பொழுதுதான் கரோனா கிராமப்புறங்களில் பரவி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பாடுகள் பற்றி ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் கடந்த 10 வருடமாக அரிசிப்பாளையம் என்கிற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணக்கு வழக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்காக தமிழக அரசு வருடம் ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்கிறது. கடந்த பத்து வருடமாக தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை எந்த விதமான கணக்கு தணிக்கைக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்படுத்தப்படவில்லை என அதிர்ச்சி தகவலை முருகன் தெரிவிக்கிறார்.

அத்துடன் நிற்காத முருகன், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எத்தனை மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மருத்துவ பணியாளர்கள் எத்தனை பேர் நியமிக்கப்படுகிறார்கள். கரோனா காலத்தில் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என விவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் தமிழக சுகாதாரத்துறையிடம் கேட்கிறார். அவர் பெற்ற ஆர்.டி.ஐ. விவரங்களின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 300 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 90 பேர் டாக்டர்கள்.

இந்த கரோனா காலக்கட்டத்தில் 40 மருத்துவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். இதில் இவர்கள் மாற்றப்பட்டதற்கான காரணம், அவர்களது சுய விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டார்கள் என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. ஆனால் கன்னியாகுமரியில் இருப்பவர் கோவைக்கும், கோவையில் இருப்பவர் மதுரைக்கும், மதுரையில் இருப்பவர் வேலூருக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இப்படி மண்டலம் விட்டு மண்டலம் எப்படி சுய விருப்பத்தின் பேரில் மாற்றம் நடந்திருக்க முடியும் என ஆர்.டி.ஐ.யில் கேட்டபொழுது, அதற்கு பதில் இல்லை.

மாற்றப்பட்டவர்கள் எல்லோரும் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் இருக்கும் மர்மங்களைப் பற்றி நம்மிடம் பேசிய முருகன், இந்த மாறுதல்களை விஜயபாஸ்கரின் பி.ஏ.வாக இருந்த சீனிவாசன் மற்றும் அமைச்சர் வேலு மணியின் பி.ஏ.வாக இருந்த தேவராஜ் ஆகியோர் இணைந்து கவனித்துள்ளனர். மாற்றம் செய்யப்பட்ட ஒவ்வொருவரையும் வேண்டுமென்றே வெவ்வேறு மண்டலங்களுக்கு தூக்கி அடித்துவிட்டு, அவர்களை மறுபடியும் வேலை பார்த்த இடத்திற்கே நியமிப்பதற்கு லகரங்களில் பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது ஆவணங்கள் மூலமாகவே தெரிய வருகிறது.

மருத்துவ பணியாளர்களின் நியமனமும், பணி மாறுதலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலேயே நடைபெறுகிறது. இதை ஆன்லைனில் யாரும் பதிவேற்றுவதில்லை. ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி 50 கோடிக்கு மேல் டிரான்ஸ்பர் ஊழல் நடந்துள்ளது என்கிறார் முருகன்.

இப்படி சாதாரண டிரான்ஸ்பர் தொடங்கி மருத்துவ உபகரணங்கள் வாங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கையில் இஷ்டம் போல கணக்கு காட்டுவது என எந்த விதமான தணிக்கையும் கட்டுப்பாடும் இல்லாமல் சுகாதாரத்துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கரோனா என்கிற நோய் தொற்றை காரணம் காட்டி கொள்ளையடிக்கப்படுகிறது என்கிறார்கள் நேர்மையான மருத்துவர்கள்.

-தாமோதரன் பிரகாஷ், சிவா


கணக்கு மர்மம்!

நூறு பேர் அளவில் பரவிவந்த கரோனா தொற்று ஆயிரக்கணக்காக மாறி, 5000 என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் எனப் பலரும் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். சுகாதாரத்துறை செயலாளர் வீட்டில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதை அவரே தெரிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட வட்டாட்சியர் ஒருவர் கரோனாவுக்கு பலியானது பலருக்கும் வேதனையைத் தந்தது. வழக்கம்போலவே அரசுத்தரப்பில் 5000த்தைத் தொட்டுவிடக்கூடாது என்ற வகையில், கடந்த ஒரு வார காலமாக, கணக்கு வெளியிடப்பட்டு வந்ததை இப்பட்டியல் காட்டுகிறது.

ஜூலை மாத கரோனா பாதிப்பு நிலவரம்...

11-ந் தேதி - 4,244, 12-ந் தேதி - 4,328, 13-ந் தேதி - 4,526,

14-ந் தேதி - 4,496, 15-ந் தேதி - 4,549, 16-ந் தேதி - 4,538,

17-ந் தேதி - 4, 807, 18-ந் தேதி - 4,902, 19-ந் தேதி - 4,979,

20-ந் தேதி - 4, 985, 21-ந் தேதி - 4,965

இந்நிலையில், ஜூலை 22 அன்று 5,849 என உச்சத்தை எட்டியது. அதுமட்டுமின்றி, இதுவரை வேறு காரணங்களால் இறந்தவர்களாக கணக்கு காட்டப்பட்ட 444 பேர் கரோனாவல் இறந்திருப்பதை அரசு அமைத்த குழுவே உறுதி செய்து அறிக்கை அளித்தும், சுகாதாரத்துறை அமைச்சர் அதனை ஏற்க மறுத்து தனது பாணியில் விளக்கமளித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT