Skip to main content

இதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை???

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி, அதிமுகவில் 114, திமுகவில் 97, சுயேட்சை 1 என மொத்தம் 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக உள்ளது.
 

dmk admk



இதில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 தேர்தல் நடைபெற்றது, மீதமிருக்கும் 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படுகிறது. 
 

இந்நிலையில் அதிமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், திமுக ஆட்சியை கைப்பற்றவும் மிகுந்த முயற்சிகளை எடுத்துவருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் கைவசம் இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். அதிமுக கூட்டணியிலிருக்கும் 114 எம்.எல்.ஏ.க்களில் அதிமுக 111 + தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு (இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினர்) ஆகியோர் இருக்கின்றனர். திமுகவில், திமுக 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 மொத்தம் 97பேர் உள்ளனர். காலியாக 22 தொகுதிகள் உள்ளன. 


அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மொத்தம் 10 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஏனென்றால் கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதேநேரம் அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 108 ஆக குறைந்துவிடும். இதனால்தான் 10 தொகுதிகளில் வெற்றி தேவை. 

 

dmk admk



திமுக கூட்டணி இணக்கமாகவே இருக்கிறது. ஆதலால் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மொத்தம் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டும் (திமுக கூட்டணி 97 +21=118). அப்படி வெற்றிபெற்றால் அவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இவற்றில் ஒன்றிரண்டு குறைந்தாலும் கடினமாகிவிடும். 


இந்த முடிவுகளை மாற்றும் சக்திகளாக இருப்பது அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள். இந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பல இடங்களில் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும். ஒருவேளை இவர்கள் சில தொகுதிகளைக் கைப்பற்றினால், அவர்களின் ஆதரவைக் கேட்கக்கூடும். நடைமுறை அரசியலில் அது சாத்தியமற்றதாகவே இருக்கும். ஆதலால் அவரவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர். 


அரசியல் என்பதே பல்வேறு திருப்புமுனைகளையும், அதிர்ச்சிகளையும் கொண்டதுதான். இவையெல்லாம் மே23 அன்று தெரியவரும், காத்திருப்போம்...

 

 

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.