Skip to main content

"அது ரதமா, 108 ஆம்புலன்ஸா... இப்படி சர்ருன்னு போகுது" - தமிழன் பிரசன்னா

Published on 21/03/2018 | Edited on 22/03/2018
prasannsa


விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரபிரதேசத்தில் தொடங்கிய ராமர் ரத யாத்திரையை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் எவருக்கும் இருக்கக்கூடாது. அந்த துணிச்சலை பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது. ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மு.க.ஸ்டாலினுக்கு உரிமை இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா,

ரத யாத்திரையை எதிர்க்கிற துணிச்சல் தமிழகத்தில் யாருக்கும் இல்லை என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை. நேற்று தமிழகம் முழுவதும் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடந்தது. ரத யாத்திரை என்றால் பொறுமையாக செல்ல வேண்டும். 108 ஆம்புலன்ஸ் மாதிரி பறக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் இந்த ரத யாத்திரையை யாரும் விரும்பவில்லை. இது தந்தை பெரியார் பிறந்த மண். ஆட்சியாளர்கள் அடிமை சேவகம் செய்வதற்காக, பாஜகவிடம் அவர்களுடைய காரியம் ஆகுவதற்காக ஏதேதோ அடிமை சேவகம் செய்து அவர்களுக்கு சாமரம் வீசுகிற இந்த அயோக்கியத்தனத்தை இந்த ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கொள்ளை ரீதியாக எதிர்க்கிறது.

ரத யாத்திரையை இந்துக்கள் நடத்தக் கூடாதா என தமிழிசை கேட்கிறார். தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை யாரும் தடை செய்வதில்லை. விநாயகர் ஊர்வலத்தை யார் நடத்துகிறார்கள் என்றால் முச்சத்தில் இருக்கிற இந்துக்களான ஆட்டோ டிரைவர்கள், பல இளைய நண்பர்களும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. முருகன் கோவிலுக்கு ஊர்வலம் போகிறார்கள். அதனை யாரும் தடுக்கவில்லை. வேல் கொண்டு போகிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. திருப்பதி கோவிலுக்கு கொடை கொண்டு போகிறார்கள். அதனை யாரும் தடுக்கவில்லை. இங்கே அந்த கவுடளின் பெயரால், அந்த ஊர்வலத்தின் பெயரால் நாட்டை துண்டாக்கக்கூடிய மதவாத சக்திகள் நடமாடவில்லை.

ஆனால் இந்த ஊர்வலத்தின் மூலம் அவர்களின் முதல் கோரிக்கையே ராம ராஜ்ஜியம் அமைப்போம், ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்கிறார்கள், ஏற்கனவே நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இந்த விவகாரம் இருக்கும்போது ராமர் கோவில் கட்ட நிதி கேட்பது என்பது ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. ராமனுக்கு உகந்தது வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கிருத்துவர்களுக்கு உண்டானது. ஞாயிற்றுக்கிழமை என்பதை ரத்து செய்துவிட்டு, வியாழக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ராமன் ராவணனை வதம் செய்து துரத்தியடித்த மண். இந்த மண்ணில் இருந்துதான் அயோத்திக்கு போகும் என்று சொல்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

இந்தியா என்பது பௌத்தர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், கிருத்துவர்களுக்கும், இந்துக்களுக்கும் எல்லோருக்குமான தாய்மடி. அந்த தாய்மடியில் படுக்கிற எல்லோரும் குழந்தைகள்தான். எந்த குழந்தையையும் தாய் வேறுபடுத்தி பார்க்கமாட்டாள் என்று அம்பேத்கார் சொல்கிறார். ஆனால் இவர்கள் ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று கொண்டு வந்தார்கள் என்றால், ராமராஜ்ஜியம் இந்துக்களுக்கான ராமராஜ்ஜியமா, இந்துத்துவாவுக்கான ராமராஜ்ஜியமா?

ratha yatra


பாபர் மசூதியை கட்டி முடிப்போம் என்று இந்தியா முழுக்க ஊர்வலம் கிளம்பினால் இவர்கள் அனுமதிப்பார்களா. நாட்டை பிரிவினை செய்கிற சக்தி என்று இவர்கள் சொல்லுவார்கள். அதைத்தான் இன்றைக்கு சொல்லுகிறோம். இன்றைக்கு முன்மாதிரியாக அயோத்தியில் கோயில் கட்டுவோம் என்று சொன்ன அத்வானி ரதம் சென்றபோது 14 ஆயிரம் இந்தியர்கள் கொல்லப்பட்டார்கள்.

மணி ஆட்டுவதற்கு இந்து வேண்டாம், கோயில் கருவறைக்குள் செல்வதற்கு இந்து வேண்டாம், ரவுடித்தனம் பண்ணுவதற்கும், அவனை தூண்டிவிட்டு பிரச்சனை செய்து நடுதெருவில் சந்தி சிரிக்க வைக்க இந்து வேண்டும். இந்து என்கிற பெயரை இந்துத்துவா சக்திகள் பயன்படுத்துவதை ஒரு நாளும் அனுமதிக்கமாட்டோம்.

இங்கு இந்துக்கள் வேறல்ல, இஸ்லாமியர்கள் வேறல்ல, கிருத்தவர்கள் வேறல்ல, இந்த மண் சமதர்ம மண். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்றவர்களால் வடித்தெடுக்கப்பட்ட மண். இந்த மண்ணை மதத்தின் பெயரால் துண்டாட நினைத்தால் இவர்கள்தான் துண்டாடிப்போவார்கள்.

இந்த ரத ஊர்வலம் 5 மாநிலங்கள் வழியாக வந்தது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா வழியாகவும், கம்யூனிஸ்டு ஆளும் கேரளா வழியாகவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மட்டும் தான் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு இங்கு வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறாரே?

அரசியல் ஆதாயம் தேடுவதாக சொல்கிறார்கள். திமுக எதிர்க்கிறது. திமுகவை எதிர்க்கக்கூடிய சீமான் இதனை எதிர்க்கிறார். சீமானை எதிர்க்கிற தமிழ்தேசிய வாதிகள் இதனை எதிர்க்கிறார்கள். தமிழ்தேசியதிற்கு எதிராக இருக்கிற தமிழ் ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். இஸ்லாமிய அமைப்புகள், கிருத்துவ அமைப்புகள் எதிர்க்கிறது. இதனை எதிர்ப்பதற்காகவே ஒருங்கிணைக்கப்பட்ட குழுவின் தலைவர் பாண்டியன். அவர் ஒரு இந்து. அவர் தலைமையில் 80 அமைப்புகள் எதிர்க்கின்றன.

இந்த மண் பெரியார் பிறந்த மண். அண்ணா பிறந்த மண். தலைவர் கலைஞர் போன்றவர்கள் சமத்துவத்தை பேணி காத்த மண். கர்நாடகாவில் போனார்கள், கேரளாவில் போனார்கள் என்றால் அங்கு அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும்தான். இங்கு கொள்கை ரீதியான பிரச்சனை. இந்த மண்தான் சமத்துவத்திற்கான மண். அந்த சமத்துவத்திற்கான மண் என்கிற அடிப்படையில் கொள்கை ரீதியாக சின்ன துரும்பு கிளம்பினாலும் அதை முளையிலேயே கிள்ளி எரிகிற வீரமும், அந்த துணிவும், அந்த எதிர்ப்புத் தன்மையும் திமுகவிடம் இருக்கிறது. திமுக அதனை வலிந்து செய்கிறது. ஆகவே அவர்கள் அந்த எதிர்ப்பை தாங்க முடியாமல் கொந்தளிக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.