ADVERTISEMENT

தை மாதத்தை ஏற்பதிலும் கலைஞர் எதிர்ப்பு அரசியல்!!!

06:28 PM Jul 31, 2018 | kamalkumar

உலகின் எந்த ஒரு மொழியினருக்கும் இல்லாத வகையில் தமிழனின் ஆண்டுக் கணக்கிற்குத்தான் அருவறுப்பான பின்னணி இருக்கிறது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

சர்வதேச அளவில் ஜூலியஸ் சீசர் உருவாக்கிய ஜூலியன் காலண்டர் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது, 16 ஆம் நூற்றாண்டில் போப் 13 ஆவது கிரிகோரி திருத்தி அமைத்தார். எனவேதான், தற்போதைய காலண்டர் கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.

ரஷ்யாவில், சீனாவில் என்று ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு மொழிக்குழுவிலும் ஒவ்வொரு விதமான ஆண்டுக்கணக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரியர் வருகைக்கு முந்தைய தமிழர்கள் காலத்தை பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் பிரித்துக் கணக்கிட்டார்கள்.

ஒரு ஆண்டை சித்திரை வைகாசி மாதங்களை இளவேனில் காலம் என்றும், ஆனி, ஆடி மாதங்களை முதுவேனில் காலம் என்றும், ஆவணி, புரட்டாசி மாதங்களை கார் காலம் என்றும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர் காலம் என்றும், மார்கழி, தை மாதங்களை முன்பனி காலம் என்றும், மாசி, பங்குனி மாதங்களை பின்பனி காலம் என்று ஆறாக பிரி்தது பெரும்பொழுது என்றார்கள்.

ஒரு நாளை, வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறாகப் பிரித்து சிறுபொழுது என்றார்கள்.

ஒரு நாள் என்பது 60 நாழிகை கொண்டது என்றும், ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள் என்றும் கணக்கிட்டார்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் என்பது இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது என்கிறார்கள்.

தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரையும் கோள்களின் பெயரையும் வைத்தனர்.

தமிழில் ஆண்டுக் கணக்கு என்பது எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், பேரரசரின் பிறப்பு, மன்னர்கள் முடிசூட்டிக்கொண்ட நாளின் தொடக்கம், ஒரு தலைநகரின் தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்காலத்தில் தமிழர்கள் தொடர் ஆண்டு முறையை கடைப்பிடித்துள்ளனர். சங்க இலக்கியங்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் இந்த விவரம் கிடைத்திருக்கிறது. தமிழ், தமிழ்நாடு தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை தொடர் ஆண்டுக் கணக்கில் குறித்துவைத்து பாதுகாக்க தமிழர்கள் முயற்சிக்கவில்லை. அதற்கு 60 ஆண்டுகள் சுழற்சி முறையே காரணம் என்கிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் 60 ஆண்டு சுழற்சி முறை நடைமுறையில் இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஆரியர்கள் வருகைக்குப்பிறகே 60 ஆண்டுகள் சுழற்சி முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அறிவியலுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பது புரியத் தொடங்கியபோது, தொடர் ஆண்டுமுறைக்கு மாறவேண்டும் என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.

குறிப்பாக தமிழ் 60 ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருத மொழியில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, அந்த 60 பெயர்களுக்கும் சொல்லப்படும் கதை அருவறுப்பாக இருக்கிறது. அதாவது, கிருஷ்ணரின் காதலியாக நாரதர் உருமாறினாராம். இருவரும் இணைந்து 60 ஆண் குழந்தைகளை பெற்றார்களாம். அந்த 60 குழந்தைகளின் பெயர்களைத்தான் தமிழ் ஆண்டுகளின் பெயர்களாக வைத்திருக்கிறார்களாம்.

அறிவியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கதை, மற்றும் தொடர்ச்சியை கருத்தில் கொண்டே, யேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்று 1921 ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்கள் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்ற தமிழக முதல்வராக இருந்த கலைஞர் 1971 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார்.

அதன்பிறகு, தமிழ் ஆண்டின் முதல் மாதம் எது என்ற கேள்வி விவாதத்துக்கு வந்தது. விளைச்சலை அறுவடை செய்து உற்சாகமாக இருக்கும் மாதம் தை மாதம். அந்த மாதத்தையே தமிழ் ஆண்டின் தொடக்க மாதமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையையும் 2006 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர்தான் நிறைவேற்றினார்.

தமிழ், தமிழர் அடையாளம், தமிழர் நாகரிகம், தமிழர் உரிமை ஆகியவற்றை பாதுகாக்கும் கலைஞரின் நடவடிக்கைகளை ஆரியர்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. வழக்கம்போலவே, தை மாதம் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என்ற கலைஞரின் ஆணையையும் ரத்து செய்தார் ஜெயலலிதா.

தமிழ், தமிழ்தேசியம் என்று ஏதேதோ பிதற்றும் ஒரு கூட்டம் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒரு வார்த்த பேசவில்லை என்பதில்தான் இருக்கிறது அவர்களுடைய கலைஞர் எதிர்ப்பு அரசியல்.

அவர்களுக்கு தமிழைப் பாதுகாப்பதைவிட, கலைஞருக்கு வரலாற்றுப் பெருமை சேர்ந்துவிடக்கூடாது என்பதுதான் முதல் நோக்கம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT