தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை கடந்த 5ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணையவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. 

Advertisment

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருப்பவரும், அக்கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்திக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்களில் ஒருவருமான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

201
congress Photograph: (delhi)

இந்த சூழலில் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் வாங்கியுள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது என்றும் திமுக அரசை விமர்சித்து பிரவீன் சக்கரவர்த்தி பதிவை ஒன்றை வெளியிட்டார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

Advertisment

பிரவீன் சக்ரவத்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது. அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா  வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது. இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு.

203
congress Photograph: (dmk alliance)

மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு (சதவீதம்) என்பதே பொருத்தமான அளவை. தமிழ்நாட்டில் இந்த அளவை 2021-22 முதல் 2025-26 வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (Niti Aayog) விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழ்நாடு எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது. நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவு அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், 'எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.

தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை  நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ,ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத,வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.

எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு  மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது. 

தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித  கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல்,வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்துகொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.

தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம்,மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின்,அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்' என்று அந்த நீண்ட பதிவில் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

202
selvaperunthagai Photograph: (congress)

முதற்கட்டமாக ஜோதிமணியின் இந்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், ''ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருப்பினும் அனைவரையும் அரவணைத்தே செல்கிறேன். தேர்தல்  படிவம் மற்றும் முகவர்கள் போடுவது தொடர்பாக பிரச்சனை இருந்தது உண்மைதான் மறுக்கவில்லை. ஆனால் அதனை சரி செய்துவிட்டோம். கரூர் மாவட்ட காங்கிரஸில் ஒருவர் ஒத்துழைக்க மறுத்தார். அதுகுறித்து ஜோதிமணி குற்றம்சாட்டினார். என்னால் முடிந்த அதிகபட்ச நடவடிக்கை எடுத்தேன். கட்சிக்கு தேவை அறிவுரைகளும், ஆலோசனைகளும் தான். அதற்குத்தான் நாங்கள் காத்திருக்கிறோம் குறைகளே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி என்று தெரியவில்லை. ஏன் இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை.அவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த சலசலப்பும் இல்லாத திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த முரண்களுக்கு தீர்வு எளிதில் கிடைக்குமா அல்லது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை மாற வாய்ப்புள்ளதா என பல்வேறு ஊகங்களில் இறங்கியுள்ளனர் அரசியல் பார்வையாளர்கள்.