/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/new.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், கரோனா லாக்டவுனால் திரையரங்குகள் ஏழு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இத்தனை பெரிய இடைவேளைக்குப் பிறகு, அரங்குகள் திறக்கப்படவிருக்கின்றன. தமிழில் பெரிய படங்கள் எதுவும் தற்போது வெளிவராத நிலையில், ’இரண்டாம் குத்து’ என்ற பெயரில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருகிறது. அதை முன்னிட்டு சில திரையரங்குகளில் முதல் பாகத்தை திரையிடுகிறார்கள்.’இரண்டாம் குத்து’ படத்தின் டீசர் ஆபாச காட்சிகளும் வசனங்களும் நிறைந்திருந்ததால், கடும் எதிர்ப்பைப் பெற்றது. திரைத்துறைக்குள்ளே இருந்தே கடுமையான எதிர்ப்புகள் வந்தன.
இந்திய சினிமா நூறாண்டுகளைத் தாண்டி இன்றளவும் சிறப்பான படங்களைக் கொடுத்து வருகிறது. இதற்கு கதைக்களமும், மக்களின் ஆதரவும்தான் காரணம். ஆனால் இன்னொரு வகை படங்கள் உண்டு. அவை பெருவாரியான மக்களாலும் விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, அந்தத் திட்டே பிரபலமாக்கி வசூல் ரீதியாக பெருவெற்றி பெரும் படங்கள். சமீபத்திய எடுத்துக்காட்டுதான் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. சினிமா துறையிலேயே பலரும் கடுமையாக எதிர்க்கும் இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றியே. இது போன்று தமிழில் இதற்கு முன் திட்டு வாங்கி வெற்றி பெற்ற ஒரு சில படங்களை பார்ப்போம்.
நியூ
எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்த இந்தத் திரைப்படத்தின் கதைக்களமே சற்று வித்தியாசமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும். இதில் சிறுவனாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, மணிவண்ணன் செய்யும் அறிவியல் சோதனையினால் இளைஞனாக மாறி, தன்னை விட வயதில் மூத்த பெண்ணான சிம்ரனை திருமணம் செய்துகொண்டு இரவில் இளைஞனாகவும், பகலில் சிறுவனாகவும் இருப்பார். இந்தப் படத்தில் கிரண் ஒரு மாமி கதாபாத்திரத்தில் வருவார். அவர் வரும் காட்சி முழுவதும் இரட்டை அர்த்தத்திலேயே பேசுவார். படம் வந்த பிறகு இதில் பெண்களை தவறாக காட்டியுள்ளதாகவும், இரட்டை அர்த்தம் உள்ளதாகவும் சில காட்சிகளை நீக்கவும் வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன. இந்தப் படம் வந்த சில மாதங்களுக்கு 'விசில் அடிக்க' பலரும் தயங்கினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NEW- Film Ajith Jothika.jpg)
பாக்யராஜ், முருங்கைக்காய்க்கு புது அர்த்தம் கொடுத்தது போல, எஸ்.ஜே.சூர்யா விசிலுக்கு புது அர்த்தம் கொடுத்தார். இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் படம் வெற்றிகரமாக ஓடியது. வெளிவந்த பொழுது படத்தில், 'மார்க்கண்டேயா' என்ற பாடல் இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதற்காகவே மீண்டும் பார்த்தது ஒரு கூட்டம். இந்தப் படம் தந்த இமேஜ் இன்றும் எஸ்.ஜே.சூர்யா மேல் உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தப் படம் முதலில் அஜித், ஜோதிகா நடிப்பதாக இருந்து போஸ்டரெல்லாம் வந்தது. பின்பு மாறியது. அப்படி நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்?
துள்ளுவதோ இளமை
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ohlfKSdJpG0Bt82CBR2KojpG6s0.jpg)
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என்று இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த பொழுது, பலரும் குழப்பத்தில் கலங்கிப் போயினர். 'என் ராசாவின் மனசிலே', 'எட்டுப்பட்டி ராசா' என்று படமெடுத்த கஸ்தூரி ராஜாவா இது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அந்த அளவு அதிர்ச்சி ஏற்படுத்திய போஸ்டர்கள் அவை. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் தரமாக இருந்து ஹிட் அடிக்க படமோ வேறு விதமாக புகழ் பெற்றது. பள்ளி மாணவர்கள், மாணவிகளின் நட்பு, நட்பை மீறிய உறவு, உடல் மாற்றம், கிளர்ச்சி, என அத்தனையும் பேசிய இந்தப் படத்தில் மாணவர்களுக்குள் நடக்கக் கூடியது, நடக்கக் கூடாதது என அத்தனையும் காட்டியிருந்தார்கள். படம் வெளிவந்த பின்னர்தான் தெரிந்தது, இது கஸ்தூரி ராஜா படமல்ல, செல்வராகவன் படமென்று. தனுஷ் என்ற பெரும் நடிகன் அறிமுகமான இந்தப் படத்தில் அவரது எதிர்காலம் இப்படியிருக்கும் என யாரும் நினைக்கவில்லை. 'தீண்ட தீண்ட' பாடலுக்காகவே டீன் ஏஜ்காரர்கள் குவிய, பெற்றோர்களோ கொதித்தனர். இறுதியில் மெசேஜ் எல்லாம் சொல்லியிருந்தாலும் படம் முழுவதும் வேறு லெவல்தான். பள்ளி மாணவர்களை மிக மோசமாக சித்தரித்திருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இதன் வெற்றி, இதே போன்று பத்து படங்கள் வர வழிவகுத்தது. இது ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆனது.
வல்லவன்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/download_2.jpg)
சிம்பு என்றாலே சர்ச்சை என்று சொல்வதற்கு பிள்ளையார் சுழி போட்ட படமென்றால் அது வல்லவன்தான். படம் தொடங்கியதே சர்ச்சையோடுதான். 'மன்மதன்' பெருவெற்றிக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தை சிம்புவே இயக்கி நடித்தார். 'மன்மதன்' படத்திற்கே பெண்களை மோசமாக சித்தரிப்பதாக விமர்சனம் மெல்ல எழுந்தாலும், அது பெரிதாகவில்லை. ஆனால், இந்தப் படம் வெளிவரும் முன்பே வெளிவந்த போஸ்டரில், நயன்தாராவின் உதட்டைக் கடித்து இழுப்பார் சிம்பு, அப்பொழுதே ஆரம்பித்தது வம்பு. இதில் சிம்புவிற்கு இரண்டு ஜோடிகள் - நயன்தாரா,ரீமாசென். இதில் ரீமாசென்னுடனான காதல் முறிவு காட்சியில் சிம்பு பெண்களை இழிவாகப் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. படம் வெளியான ஒரு சில நாட்களில் சிம்புவும், நயன்தாரவும் ஒரு ஹோட்டல் அறையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வார இதழ்களில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மன்மதன் அளவுக்கு படம் சுவாரசியமாக இல்லையென்றாலும் இதுபோன்ற விளம்பரங்களினாலேயே திரைப்படம் ஓடி, வசூல் செய்தது. 'பீப்' சாங்குக்கெல்லாம் தொடக்கம் இதுதான்.
த்ரிஷா இல்லைனா நயன்தாரா
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trisha-illana-nayanthara.jpg)
2000 கிட்ஸுக்குத் தெரிந்த முதல் 'திட்டு வாங்கி வெற்றி' படம் இது. இசையமைப்பாளராக அமைதியே உருவமாகப் பார்க்கப்பட்ட, மனமுதிர்ச்சியின் உச்சியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஜி.வி.பிரகாஷ் நடிக்கப் போகிறார் என்றதும் அது எப்படிப்பட்ட படமாக இருக்குமென்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது, ஆனால், இப்படிப்பட்ட படமாக இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் 'பிட்டுப் படம்' பாடல் வெளிவந்த போதே மெல்ல எதிர்ப்புகள் தொடங்கின. படம் வந்ததும் 'வெர்ஜின் பசங்க' அது இது என்று இவர்கள் செய்த வாலிப கரைச்சல் பெண்களை கொதிக்க வைத்தது.
ஜி.வி.பிரகாஷிற்கு இரண்டு கதாநாயகிகள். 'கயல்' ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ். இருவரும் போட்டி போட்டு நடித்தனர். படம் வந்த பிறகு, 'எனக்குத் தெரியாமலேயே பல காட்சிகளை ஆபாசமாக எடுத்துவிட்டனர், கதையை மாற்றிவிட்டனர்' என்று ஆனந்தி பேட்டி கொடுத்து ஷாக் கொடுத்தார். இதில் வரும் வசனங்கள், பாடல்கள் என்று அனைத்துமே இரட்டை அர்த்தம் நிறைந்து இருக்கும். ஜி.வி.பிரகாஷை நம்பி தியேட்டருக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் எல்லாம் இடைவேளையிலே கிளம்பிச் சென்றுவிட்டனர். பல குடும்பங்களில் சண்டை இன்னும் ஓயவில்லையாம். என்னதான் எதிர்ப்புகள் இருந்தாலும் திரையரங்குகளில் இந்தப் படம் வசூல் வேட்டை நடத்தியது. அந்த நம்பிக்கையில்தான் ஜி.வி.பிரகாஷ் 'ப்ரூஸ்லீ' என்றும் இயக்குனர் ஆதிக் 'அஅஅ' என்றும் களமிறங்கிறனர். அந்தப் படங்கள் பார்த்து நொந்த மனங்கள் இன்னும் மீளவில்லை, அது வரலாறு.
இப்படி திட்டு வாங்கியே ஹிட்டடித்த படங்கள் எக்கச்சக்கம். சில பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சாமி இயக்கிய 'உயிர்' திரைப்படம் குடும்ப உறவை கொச்சைப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அது தந்த வெற்றியில் அவர் அடுத்தடுத்து 'மிருகம்', 'சிந்து சமவெளி' என அடுத்த லெவல்களுக்கு சென்று இப்பொழுதுதான் அமைதி காக்கிறார்.
'சிகப்பு ரோஜாக்கள்', ‘மன்மத லீலை’,'சின்ன வீடு' என்று அந்தக் காலத்திலேயும் 'ஜம்பு' என்று ஜெய்ஷங்கர் காலத்திலேயேயும்சில படங்களுக்கு விமர்சனம் எழுந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. மேலே நாம் பார்த்த இந்தப் படங்களிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தன, கவர்ச்சி காட்சிகள் இருந்தன. ஆனால்'இருட்டு அறையில் முரட்டு குத்து'வில் இரட்டை எல்லாம் இல்லை, ஒற்றை அர்த்தம்தான். 'ஹரஹரமஹாதேவகி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தையெடுத்தார், சந்தோஷ். இந்தப் படம் தந்த வசூலும் இடையில் வேறு மாதிரி இவர் எடுத்த ‘கஜினிகாந்த்’ படத்தின் தோல்வியும்'அடல்ட் ஹாரர்காமெடி' என்ற பெயரில் ‘இரண்டாம் குத்து’ எடுக்க வைத்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு படத்துக்கு எதிர்ப்பு வந்தால் பயப்படுவார்கள், படம் நஷ்டம் தந்துவிடுமோ என்று. இப்பொழுதெல்லாம் எதிர்ப்புதான் விளம்பரமே...
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)