Advertisment

இயக்கங்கள் இல்லை, தமிழ் உணர்வே இணையச் செய்தது! - அமெரிக்காவிலிருந்து ஒரு தமிழ் உள்ளம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துகுடி நகர மக்கள் ஐம்பது நாட்களாகப் போராடி வருகின்றனர். அவர்களுக்குபல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். நம் மண்ணை விட்டு இவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் எங்களை பாதிக்கும். தமிழ் மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் எங்கள் மனம் துடிக்கும். இயன்ற ஆதரவைத் தர வேண்டுமென தவிக்கும்.

Advertisment

Sterlite protest at Delever 1

அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரின் நெவார்க் நகரில் அமைதிப் போராட்டம் ஏப்ரல் 1 அன்று அங்கு வாழும் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் டெலவர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த (டெலவர், பிலடெல்பியா மற்றும் தென் செர்சி மாநிலம்) தமிழர்கள் கலந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பிப் போராடினர்.

மக்களுடைய பிரச்சனைகளை அரசு செவி கொடுத்து கேட்க முன்வரவேண்டும், தூத்துக்குடி மக்களுக்கான நீதியைபெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் கருத்தை பதிவிட்டனர். குறிப்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த இளையராஜா, அவரது குடும்பம் பாதிப்படைந்ததைப் பற்றி விரிவாகக் கூறினார். "ஊர் மக்கள் அடிக்கடி மயங்கி விழும் சம்பவங்களும், சுற்று வட்டாரங்களில் புற்று நோயும் அதிகரித்துள்ளது. அடுத்த போபாலாக தூத்துக்குடி ஆகாமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சனையிலும், 'வந்தால் பார்ப்போம்' என்றில்லாமல் 'வரும் முன் காப்போம்' என்று நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ச்சியா? வாழ்வா? என்றால், மக்களின் வாழ்வே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போராட்டம் பலமுறை திசை திருப்பப்பட்டுள்ளது. இன்று உண்மை உறைத்து தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். இதற்கு “ஸ்டெர்லைட் மூடுவிழா” மட்டுமே வெற்றியாக அமையும் என்றார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷா கூறும்பொழுது “இரயில் பயணங்களில் நாங்கள் பெரும் புகைமண்டலத்தைத் தாண்டி எங்கள் ஊருக்குச் செல்வோம். இந்த நச்சை சுவாசித்தா நாம் உயிர் வாழ்கிறோம் என்று மனம் வருந்தும். அக்கம்பக்கத்தினர் ஆஸ்துமா, மூச்சுப் பிரச்னையால் பாதிப்படைந்ததைப் பார்த்து, இதற்கு விடிவு எட்டாதா என்ற ஏக்கம் மனவருத்ததைக் கொடுக்கும். ஸ்டெர்லைட் கழிவு மேலான்மை சீர்கேடே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம். நச்சை நிலத்தில், நீரில் மற்றும் காற்றில் கலந்து தூத்துகுடியை முத்து நகர் என்ற பெயரிலிருந்து புற்று நோய் நகர் என்ற பெயர் மாற்றம் செய்திருக்கின்றனர்” என்று ஆதங்கமாக கூறினார்.

பின்னர் நான், “ஸ்டெர்லைட் நகரை மாசுபடுத்தியதின் விளைவாக ரூபாய் 100 கோடி உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்ததிலிருந்தே அவர்கள் பின்பற்றும் கழிவு மேலாண்மை குறைபாடு வெளிச்சத்திற்கு வந்தது. தமிழர்கள் அறம் சார்ந்து அமைதியாக போராட்டம் நடத்துவதை இந்த அரசு சாதாரணமாக எண்ணக் கூடாது. அவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி அவர்களுக்கான நீதியை நிலைநாட்ட முற்பட வேண்டும். தவறும் பட்சத்தில், இந்த அரசை வருங்காலங்களில் நீதிமன்றத்தில் மக்கள் கேள்வி எழுப்புவார்கள்” என்றுஎன் உணர்வை பகிர்ந்து கொண்டேன்.

Advertisment

Sterlite protest at Delever 2

இந்நிகழ்வில் முத்தாய்ப்பாக ஒரு நான்கு வயதுக் குழந்தை ஒலிப்பெருக்கியை வாங்கி “ஸ்டெர்லைட்டே ஓடிப்போ... ஸ்டெர்லைட்டே ஓடிப்போ”,என்று முழங்கியதும் கூடியிருந்த மக்கள் இன்னும் வேகமாக, உத்வேகத்துடன் பதில் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பல குழந்தைகள் தாமாக முன்வந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கமிட்டு தாங்கள் அநீதிக்கெதிரான வருங்காலத் தலைவர்கள் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள்.

மேலும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த துரைகண்ணன் மற்றும் சுரேஷ் பாஸ்கரன் இருவரும் பல பணிகளுக்கிடையில் தமிழர்களாக, தமிழ் உணர்வுக்காக ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி கூறினர். அத்துடன், இந்த அமைதிப் போராட்டத்தை அமெரிக்கா முழுவதும் ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

எந்த ஒரு அமைப்பும் சாராமல், தமிழர் என்ற ஒற்றை உணர்வோடு, அமெரிக்காவில், கடந்த வார இறுதியில் (சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில்), தமிழர்கள் வாழும் பல பகுதிகளிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதிப் போராட்டம் நடைப்பெற்றது!

தமிழர்களுக்கு பிரச்சனை எழுந்த ஒவ்வொரு காலகட்டத்திலும், அதாவது சல்லிக்கட்டு, நீட் விலக்கு போன்ற பிரச்சனைகளின் போதும் அமெரிக்கத் தமிழர்கள் அமைதிப் பேரணியைநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மாநிலமாம் டெலவரும் தற்போதைய ஸ்டெர்லைட் போராட்டத்திலும், முந்தைய போராட்டங்களிலும் தவறாமல் பங்கெடுத்து தமிழர்களின் நலன் காக்க, தொடர்ந்து குரல் கொடுக்கிறது.

America usa Tuticorin Sterlite sterlite protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe