Skip to main content

ஆதித் தமிழ்க் கலைக்கு ஆவி கொடுக்கும் பேராசிரியர்!

 

professor - thoothukudi -  tamil arts

 

20 பேர் கொண்ட சிலா வரிசை இரு கூறாக எதிரும் புதிரும் நின்றுகொண்டு சீரான உடையோடு காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு உடல் நளினங்களோடு தாளம் தப்பாமல் பறையடித்து வளைந்து நெளிந்து ஆடுவதும், 30 பேர்களைக் கொண்ட கலர் ஆடைகளோடு காலில் சலங்கை மணி தெறிக்க, இரண்டு கைகளிலுள்ள பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கொண்ட துணிகளை வீசிக் கொண்டு தாளத்திற்கேற்ப ஒய்யாரமாகச் சுற்றியாடும் லாவகங்களைக் (ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டங்கள் போன்றவைகளை) கண்ணுறும் போதும் மனம் ஆறுதலடைவததோடு ஒரு வகை இதமான ஆனந்தமும் உடலில் ஊடுருவும்.

 

ஆதித்தமிழனின் பண்பாட்டுக் கலைகளான இவைகள் மேடையேறும் போது அந்த மேடையே ஜொலிக்கும். மேடையின் மதிப்பும் கௌரவமும் பன்மடங்கு உயரும். அதுதான் யதார்த்தம். இவைகளை மேடை ஏற்றும் போதுதான் நம் பண்டைத் தமிழரின் இந்தக் கலாச்சாரக் கலைகள் உயிர்தெழும், மரணிக்காமல் ஜீவிக்கும் .இந்தக் கலைகளைப் பலருக்குப் பயிற்றுவிக்கிறார் தூத்துக்குடியில் உள்ள பேராசிரியர் சங்கர்.

 

அண்மைக்காலமாக இந்த ஆயகலைகளும் அதனையே சுவாசமாகக் கொண்டவர்களின் வாழ்க்கையும் மங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிற பேராசிரியர் சங்கர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் வரலாற்றுப் பிரிவு பேராசிரியர். கூடவே ஒயிலாட்டம், பறையாட்டம் கட்டைக்காலாட்டம் போன்ற நம் முன்னோர்களின் கலைகளை முடிந்த வரை வளர்க்கிறார், வேர் பரப்பச் செய்கிறார்.

 

Professor

 

ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் கருவாகி உருவாகி வளர்வதைப் போன்றுதான், இந்தக் கலையின் கருவே நம் முன்னோர்களின் உயிர் நாடியான விவசாயத்திலிருந்து பிறக்கிறது. விவசாயத்தின் ஒவ்வொரு பணியிலும் ஒரு இசை மறைந்துள்ளது. ஏர் பிடிக்கும் போது, விதை விதைக்கும் போது, நாற்று நட்டி தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்தல், அறுவடை போன்ற ஒவ்வொரு விவசாயப் பணிகளிலும், வேலையின் சுமை தெரியாமலிருப்பதற்காக நளினமாக உடலசைத்து வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பாட்டாக்கிப் பாடுவார்கள். அதுதான் இயல்பு, வாடிக்கை. அதுவே நாளாவட்டத்தில் பண்படுத்தப்பட்டு மெருகேறி களத்து மேட்டில் கும்மியாட்டமாகி பின் சலங்கை பறையாட்டமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே விவசாயம்தான் இந்தக் கலைகளைப் பெற்றெடுத்த தாய் என்கிறார் பேராசிரியர்.

 

அதே  போன்று இதன் அங்கமான தெருக்கூத்து, தெரு நாடகம் போன்றவைகளில் பிரச்சாரமும் நடந்ததையடுத்து பறையாட்டம், ஒயிலாட்டங்கள் மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அது போன்று இந்தக் கலைகளின் மூலமாக மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்திற்கான புரட்சிகளும் அந்தக் கால சர்வாதிகார சமஸ்தானத்தைக் கூட அறுத்தெறிந்திருக்கின்றன. வலுவான பிரச்சாரப் பீரங்கியும் கூட. அது போன்ற தெருக்கூத்துக்களால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் சங்கர், தனது பறையாட்டம் ஒயிலாட்டக் கற்பித்தல் மூலம் பத்தாயிரம் கலைஞர்களை தென் மாவட்டத்தில் உருவாக்கியிருக்கிறார்.

 

ஆடைக்குறைப்போடு வரும் வெளிநாட்டினர் கூட 12 முழச் சுங்கிடிச் சேலையைக் கட்டிக் கொண்டு மாராப்புப் போட்டும், 4 முழவேட்டிச் சட்டையுடன் கூட்டமாகத் தமிழரின் அடையாளமான தை பொங்கலிட்டுக் கொண்டாடி, பறையடித்து மகிழுமளவுக்கு நம் முன்னோர்களின் கலைகள் மதிப்பு வாய்ந்திருக்கிறது. ஆனால் உள்ளூர் விழாக்கள், பொதுக்கூட்டம் திரட்டும் அரசியல்வாதிகள் கூட இதன் மகிமையை அறியாமல் கேரளாவிலிருந்து பெரும் பொருட்செலவில் கெண்டை மேளத்தை வரவழைக்கிறார்கள். இறக்குமதிதான் கௌரவம் என்று நினைக்கிறார்கள்.

 

அதற்குச் சற்றும் சளைத்ததல்ல தமிழனின் கலைகள் என்று வெளிநாட்டினரே சர்டிபிகேட் தரும்போது, இங்கே மட்டும் ஏன் அந்தப் புறக்கணிப்பு. ஒன்றைப் பார்க்கப் பார்க்கத்தான் ஈர்ப்பு கூடும், ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாகும் என்பது அடிப்பைடைத் தத்துவம். ஒவ்வொரு விழாக்களிலும், அரசியல் கூட்டங்களிலும் நம் பாரம்பரிய விவசாயம் ஈன்றெடுத்த இந்தக் கலைகளை மேடையேற்றிப் பாருங்கள், அதன் மதிப்பும் கௌரவமும் தெரியும். மட்டுமல்ல அதனையே நம்பியிருக்கும் கலைஞர்களின் வயிறும் பசியாறும்.

 

Ad

 

இன்னமும் இந்த ஆட்டக் கலைகள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளைத் தூண்டினால் மட்டுமே ஃபீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழும். அதை விடுத்து, நம் முன்னோர்களின் வாழ்விடம் தேடி, பெரும் பொருட்செலவில் அகழாய்வு நடத்துகிற அளவுக்கு நம் ஆதித் தமிழர்களின் இந்த ஆட்டக்கலைகள் மண்ணோடு புதைந்து விடக்கூடாது, என்ற குமுறலும் இதனை நம்பிய கலைஞர்களிடமிருந்து கிளம்புகிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !