Advertisment

தலிபான் '2.0' - மிரட்சியில் ஆப்கன்; என்ன செய்யப் போகிறது இந்தியா?

Taliban 2.0 - History of Afghanistan - Crisis surrounding India

Advertisment

அந்தச் சம்பவம் அரங்கேறிவிட்டது. எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது. உலக நாடுகள் குற்றவுணர்ச்சி ஏதுமற்று கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஆப்கனுக்கும் மக்களாட்சிக்கும் ஏழாம் பொருத்தம். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றுவிட்டார். ஆப்கன் தலைநகர் 'காபூலும்' தலிபான் வசம் வீழ்ந்துவிட்டது. ஆப்கன் ராணுவம் துப்பாக்கிகளை கீழே போட்டு வெள்ளைக் கொடிகளைத் தேடத் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் விமானத்தில் முண்டியடித்துக்கொண்டு வெளிநாடுகளுக்குப் புறப்படத் தொடங்கிவிட்டனர். விமான நிலையங்கள் நிசப்தமாகிவிட்டன. அமெரிக்கத் தூதரகம் தனது முக்கிய ஆவணங்களை நெருப்பு வைத்து எரித்துவிட்டது. இந்தியாவும் தனது பணியாளர்களை அழைத்து வந்துவிட்டது. இப்போது, ஆப்கானிஸ்தான் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கனின் இந்த நிலைக்குயார் காரணம்?

உலகின் மிகப் பழமையான நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. பாரசீகர்கள், மங்கோலியர்கள் உள்ளிட்ட பலரின் ஆக்கிரமிப்புக்கு ஆப்கன் உள்ளாகியிருந்தது. ஆப்கன் வரலாற்றில் மன்னர் அமானுல்லா கான் நினைவு கூரத்தக்கவர். ஆங்கிலேய காலனியில் இருந்த ஆப்கன், மன்னர் அமானுல்லா வருகைக்குப் பின் புத்தெழுச்சி பெற்றது. 1919-ம் ஆண்டு முதல் 1929-ம் ஆண்டு வரை ஆப்கனை ஆண்டுவந்தார் அமானுல்லா. 19.08.1919 அன்று ஆப்கன் சுதந்திர நாடாகப் பிரகடனமானது. பெண்கல்வி குறித்து உரக்கக் குரல் எழுப்பினார். மேலும், இஸ்லாமிய பெண்கள் 'பர்தா' அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என அப்போதே முற்போக்காகப் பேசினார். அவ்வளவுதான் கிளர்ச்சி வெடித்தது. இதனால், அமானுல்லா பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு, மன்னர் அமானுல்லாவின் உறவினர் நாதிர் கான் வசம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வெறும் நான்கு ஆண்டிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார்.

Taliban 2.0 - History of Afghanistan - Crisis surrounding India

Advertisment

பிறகு, நாதிர் கானின் மகன் சாகிர் ஷா அரியணை ஏறினார். 1933 தொடங்கி 1973 வரை ஆட்சி செய்தார். சுமார் 40 ஆண்டுகாலம், ஆப்கனுக்கு நிலையான ஆட்சியைத் தந்தவர் எனும் பெருமை இவரையே சேரும். இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக, சாகிர் ஷாவின் உறவினர் சர்தார் தாவுத் சதித் திட்டம் மூலம் ஆப்கனைக் கைப்பற்றுகிறார். பிறகு, 1978-ல் தாவுத் குடும்பத்துடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படி பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும்போது, சோவியத் ரஷ்யா ஆப்கனில் மெதுவாக மூக்கை நுழைக்கிறது. ஆம், தாவுத் கொலையின் பின்னணியில் ரஷ்யா இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்து, தாவுத் அரசுக்கு எதிராகப் போராடியஹபிசுல்லா அமீன் என்பவரின் கீழ் ஆட்சியதிகாரம் செல்கிறது. டிசம்பர் 1979-ல் அமீனையும் காலி செய்த சோவியத் ராணுவம், காபூலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால், ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுவை உருவாக்கி, அதற்கு சத்தமில்லாமல் ஆதரவளித்து வந்தது பாகிஸ்தான்.

அதைப் போலவே, ரஷ்யாவுடன் பனிப்போர் செய்துவந்த அமெரிக்காவும் தனது பங்குக்கு குழுக்களை உருவாக்கி ஆதரவு அளித்தது. சவுதியும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்தது. ஆப்கனைக் கைப்பற்றிய பிறகு, ஒரு பொம்மை அரசை நிறுவி ரஷ்யா ஆட்சி செய்ய முயன்றது. ஆனாலும் பலதரப்பு எதிர்ப்புகளையும் கையாள முடியாமல் ரஷ்யா திணறியது. விளைவு, 1989-ம் ஆண்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தாயகம் திரும்பியது ரஷ்யப் படைகள். பத்தாண்டு காலம் ஆப்கனை ஆண்ட ரஷ்யா, பல வீரர்களைப் பலி கொடுத்திருந்தது. ஒருவழியாக, ரஷ்யாவை வெளியேற்றிய மகிழ்ச்சியில் அமெரிக்கா ஆப்கனைக் கைகழுவியது. போரினால்சிதலமடைந்த ஆப்கனை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால், ரஷ்யாவை ஒழிப்பதற்கு உருவான கிளர்ச்சிக் குழுக்கள் இப்போது தங்களுக்குள் மோதிக்கொண்டன. அதையடுத்து, கிளர்ச்சிக் குழுக்களிடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அரசுகளுக்கு நடுவே கையெழுத்தாகும் உடன்பாடுகளே காற்றில் பறக்கும்போது, இவையெல்லாம் நிலைக்குமா என யோசிப்பதே அர்த்தமற்றது.

Taliban 2.0 - History of Afghanistan - Crisis surrounding India

கிளர்ச்சிக் குழுவில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற சில உறுப்பினர்கள், 'தலிபான்' எனும் அமைப்பைக் கட்டியெழுப்பினர். மெல்ல மெல்ல தலிபான் அமைப்பு எழுச்சி பெற்றது. மிகக் கடுமையான மோதலுக்குப் பிறகு, 1996ஆம் ஆண்டில் இவ்வமைப்பு காபூலைக் கைப்பற்றியது. தலிபான் அமைப்பு, மத அரசியலைக் கையில் எடுத்தது. 2000ஆம் ஆண்டு முடிவில், நாட்டின் 90%-க்கும் மேற்பட்ட நிலப்பரப்பைக் கைப்பற்றியது தலிபான். மிகக் கடுமையான சட்டங்களுடன் தலிபானின் ஆட்சி அமலுக்கு வந்தது. ஆட்சிக்கு முல்லா ஓமர் தலைமை தாங்கினார். பெண் கல்வி மறுக்கப்பட்டது. பெண்கள் வேலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆண்களுக்கு 'தாடி' கட்டாயமாக்கப்பட்டது. தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் எட்டாக் கனியானது. பிற்போக்குத்தனமான ஆட்சியை ரசனையுடன் செய்துவந்தது தலிபான் அமைப்பு. அதேசமயம், சில உருப்படியான விஷயங்களையும் செய்தது இவ்வமைப்பு. லஞ்சம் ஒழிக்கப்பட்டது. மீறுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டது. ஆப்கனின் முக்கியத் தொழிலான 'ஒபியம்' (போதைப் பொருள்) உற்பத்திக்குத் தடை விதிக்கப்பட்டது.

அதேசமயம், தலிபானின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஆப்கனின், பாமியன் நகரில் உள்ள பெரிய புத்தர் சிலை உடைத்து நொறுக்கப்பட்டது. இது உலகெங்கும் கடும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. இப்படி, தலிபானின் நடவடிக்கைகள், உலக நாடுகள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தேறியது. செப்டம்பர் 11, 2011-ம் ஆண்டு அமெரிக்காவை உலுக்கிய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் பின்லேடன். பின்லேடனின் அல்கொய்தாவைப் பாலூட்டி சீராட்டி வளர்த்துவந்தது ஆப்கன். பின்லேடனை ஒப்படைத்துவிடுமாறு எச்சரித்தது அமெரிக்கா. தாடியைத் தடவியவாறே யோசித்துக்கொண்டிருந்தது தலிபான். ஆனால், யோசிக்கவெல்லாம் நேரமில்லை என கடுகடுத்தது அமெரிக்கா. ஆனாலும், ஆப்கனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. 2001, நவம்பர் 13-ம் தேதி காபூலைக் கைப்பற்றியது அமெரிக்கப் படைகள். தலிபான் தலைவரானமுல்லா ஓமர் தலைமறைவானார். பின்லேடனும் தப்பிச் சென்றார். ஆப்கனில் அமெரிக்கா ஆசிபெற்ற கர்சாய் அதிபரானார்.

Taliban 2.0 - History of Afghanistan - Crisis surrounding India

அதையடுத்து, நடைபெற்ற தேர்தலில் அஷ்ரப் கனி அதிபராக நியமிக்கப்பட்டார். இவரும் அமெரிக்காவின் உற்பத்திதான். 2001-ல் இருந்து ஆப்கனை தத்தெடுத்துக்கொண்டது அமெரிக்கா. தலிபான் பிரச்சனை செய்யும் போதெல்லாம் அப்பாவைத் தேடும் குழந்தையாக, அஷ்ரப் கனியின் அரசு அமெரிக்காவிடம் புகார் சொல்லும். அமெரிக்காவும் 'என்ன பிரச்சனை' எனும் தொனியில் சமாதனம் செய்துவைக்கும். இப்படி, தலிபான் அழிப்பில் தீவிரமாக இயங்கிய அமெரிக்கா, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை, 2011-ம் ஆண்டு தீர்த்துக்கட்டியது. பின்லேடனுக்கு முடிவுரை எழுதிய அமெரிக்கா, ஆப்கனைக் கழற்றிவிட சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. அதேசமயம், தலிபான் அமைப்பு புத்துயிர் பெற்று வளர்ந்துவந்தது. அதன் அசுர வளர்ச்சி அஷ்ரப் கனியின் அரசுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இருப்பினும், அமெரிக்கா துணைக்கு இருப்பதால், கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் அஷ்ரப். பின்லேடனே அழிந்ததுக்குப் பிறகு இது தேவையற்ற போர் எனக் கருதியது அமெரிக்கா. தேவையில்லாமல், அமெரிக்காவின் பணமும் படை வீரர்களும் அழிவது அமெரிக்க அரசுக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்தது. அதனால், செப்டம்பர் 2018-ல் பேச்சுவார்த்தைக்குத் தலிபானிடம் இறங்கிவந்தது அமெரிக்கா. இப்போதுதான், மீண்டும் அரசாலும் ஆசை தலிபானுக்குத் துளிர்விட்டது. அதாவது தலிபான் 2.0 தலையெடுத்தது.

இதற்கிடையே, 2019-ம் ஆண்டு ஆப்கன் பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இப்போதுவரை அதற்கான முடிவுகள் வெளியாகவே இல்லை. ஆனால், '14 மாதங்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கனை விட்டு வெளியேறும்' என, பிப்ரவரி 2020-ல், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்கா அறிவித்தது. இது, ஆப்கனுக்கு பெரும் இடியாய் இறங்கியது. அமெரிக்கா சொன்னது போலவே ஆப்கனை விட்டு வெளியேறியது. 'ஆப்கனை விட்டு அகலாதீர்கள்' என எவ்வளவோ அஷ்ரப் கனி அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டார். சொல்லப்போனால், அழுகாத குறையாகக் கெஞ்சிக் கேட்டார். அமெரிக்கா தன் முடிவில் இருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. இந்தியாவிடம் உதவி கேட்டார் ஆப்கன் அதிபர். அப்பேர்ப்பட்ட அமெரிக்காவே பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும் போது, நமக்கு ஏன் ஊர் வம்பு என ஒதுங்கிக் கொண்டது இந்தியா. ஆனாலும், காபூல் நகரில், கையறு நிலையில், தலிபான் வருகைக்காகக் காத்திருந்தார் அதிபர் அஷ்ரப் கனி. தலிபான் படைகள் வந்ததும், ரத்தமின்றி சத்தமின்றி ஆப்கனை கைமாற்றிவிட்டு அப்ஸ்காண்ட் ஆனார். மிக எளிதாக ஆப்கனை அபகரித்துவிட்டது தலிபான். முல்லா உமர் இறந்த நிலையில், தலிபான் அமைப்பின் இணை நிறுவனரான அப்துல் கனி ஆப்கனை ஆளப் போகிறார் எனச் சொல்லப்படுகிறது.

Taliban 2.0 - History of Afghanistan - Crisis surrounding India

'அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்' எனக் கன்னத்தில் கைவைத்துக் காத்திருந்த சீனா, இப்போது கொண்டாட்டத்தில் திளைத்து வருகிறது. ஒருபுறம், ஆசியப் (ஆப்கன்) பகுதியில், மிகப் பெரிய படைத்தளமாக அச்சுறுத்தி வந்த, அமெரிக்காவின் கூடாரம் இப்போது காலியாகிவிட்டது. இன்னொருபுறம், ஏற்கனவே இந்தியாவுக்கு அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் காலூன்றிய சீனா, இப்போது ஆப்கனிலும் தடம்பதிக்க ஆழம் பார்க்கிறது. எனவே, 'டபுள் டமாக்கா' சந்தோஷத்தால் தலை கால் புரியாமல் தலைகீழாகக் குதிக்கிறது. அதேநேரம், தலிபான்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்துவந்த பாகிஸ்தானோ பதற்றத்தில் இருக்கிறது. காரணம், ஆப்கனில் அவர்கள் (தலிபான்) இருக்கும் வரை சரி. ஒருவேளை, பாகிஸ்தானில் இருக்கும் தலிபான் கிளைக் குழுக்கள், 'இஸ்லாமாபாத் நோக்கிப் படையெடுத்தால் என்ன செய்வது' எனும் கேள்வி பாகிஸ்தான் ஆட்சியாளர்களைக் கலவரப்படுத்துகிறது. இப்போது இந்தியாவின் நிலை இன்னும் மோசமடைந்துள்ளது.

இப்போதுதான், ஆப்கன் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல லட்சம் கோடிகளை வாரி இரைத்துள்ளது இந்தியா. கடந்த, இருபது வருடங்களாக பல முதலீட்டுத் திட்டங்களை அங்கே செய்துள்ளது. இப்போது இவையெல்லாம் தலிபான் வசம் சென்றுள்ளது. என்னதான் பாகிஸ்தானுக்கும் தலிபானுக்கும் சின்னச் சின்ன முட்டல் மோதல் இருந்தாலும், தலிபான் பாகிஸ்தான் பக்கம்தான் நிற்கும் எனச் சொல்லப்படுகிறது. 'அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுன்டா' எனும் ரகத்தில், பாகிஸ்தான் தலிபானுடன் எப்போது வேண்டுமானாலும் கூட்டு வைத்து இந்தியாவை அச்சுறுத்தும் எனக் கூறப்படுகிறது. இப்படி, 'ஆப்கானிஸ்தான்', 'பாகிஸ்தான்', 'சீனா' என முப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா.

Taliban 2.0 - History of Afghanistan - Crisis surrounding India

உலக நாடுகளின் உறக்கத்தைக் கலைத்து உற்சாகப் பவனி வருகிறது தலிபான் குழு. போர்ச் சூழலில் புதையுண்ட ஆப்கன் தேசம், மீண்டெழும் வழி தெரியாமல் சிக்கிக் கிடக்கிறது. ஆப்கன் வரலாற்றை அசைபோட்டால் ரத்தமும் பீரங்கியுமே எஞ்சி நிற்கிறது. 'பேரரசுகளின் சவக்குழி' என வர்ணிக்கப்படும் ஆப்கன், இப்போது சவக்குழியில் மல்லாந்து கிடக்கிறது. அகதிகளை உற்பத்தி செய்யும் ஆப்கன் தேசத்தில் எப்போது அமைதி குடியேறும்?

Afganishtan china India talibans
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe