Skip to main content

 “நெஞ்சு பொறுக்குதில்லையே.. எனும் சூழ்நிலையில் இதை சொல்கிறேன்..” - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

 Sylendra Babu video about government school students

 

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை தாக்குவது போன்றும், பள்ளி டேபிள், பெஞ்சுகளை உடைப்பது போன்றும் காணொளிகள் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “இரண்டு காணொளிகளை பார்த்தேன். அரசுப் பள்ளி மாணவர்கள், ஒரு ஆசிரியரை ஒரு குறிப்பிட்ட மாணவர் தாக்க முற்படுகிறார். அதேபோல், மற்றொரு இடத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த வகுப்பறையில் இருக்கும் டேபிள், பெஞ்சு உள்ளிட்டவற்றை சிரமப்பட்டு உடைக்க முற்படுகிறார்கள். 

 

பாரதியார் சொல்வதுபோல், “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் சூழ்நிலையில் தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். 

 

நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். நம் பெற்றோர்கள் நம்மை ஏன் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களிடம் பெரிய வருமானமோ, சொத்தோ இல்லை. 

 

உங்க அப்பா அம்மாவிற்கு சொத்து இல்லை. ஆனால், உங்களுக்கு நிறைய சொத்துகள் உள்ளன. நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளி, அங்கிருக்கும் விளையாட்டு மைதானம், அந்த வகுப்பறை, அங்கிருக்கும் டேபிள், பெஞ்சு, அங்கிருக்கும் ஆசிரியர் இது தான். உங்கள் சொத்து. 

 

நாங்க படிக்கும் போது பள்ளியில் டேபிள், பெஞ்சு எதும் கிடையாது. கீழே தரையில் அமர்ந்துதான் படித்தேன். இவற்றையெல்லாம் அரசு உங்களுக்கு வசதி செய்து கொடுத்து இருக்கிறது. அதனைத் தான் நீங்கள் உடைக்கிறீர்கள். 

 

இந்த ஆசிரியர்கள்தான் நமக்கும், கணிதம், அறிவியல், கணிணி, மூவாயிரம் ஆண்டு வரலாறு, மனித சரித்திரம் உள்ளிட்டவற்றை கற்பிப்பார்கள். இவர்கள் தான் நமக்கு மிகப் பெரிய சொத்து. அப்படி இருக்கும்போது, அறிவையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில், இதுபோன்ற வன்முறை செயல்களை ஏன் செய்கிறீர்கள். 

 

இந்தச் செயல்கள், நம் வீட்டிற்கே நாம் தீவைப்பது போன்றும், நம் கை, கால்களை நாமே வெட்டுவது போன்றும் உள்ளது. உங்கள் ஆதாரங்களை நீங்களே சேதப்படுத்திக் கொள்கிறீர்கள். இனி இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். பள்ளிக்கூடத்திற்கு வருவது என்பது ஒரு மிகப்பெரிய நோக்கத்தோடு வருகிறோம். இங்குதான் நீங்கள் முழு மனிதராக, சிந்தனையாளராக வளரவேண்டிய ஆற்றல் படைத்தவராக மாறவேண்டிய ஒரு பயிற்சி இடம் தான் பள்ளிக்கூடம். ஆகவே அந்த இடத்திற்கு மிகவும் மரியாதை தரவேண்டும். ஆசிரியர் பெருமக்களை மிகவும் உயர்வாக எண்ண வேண்டும். உங்கள் மனங்கள் மாறவேண்டும். பள்ளிக்கூடங்களில் இது போன்ற வன்முறை சம்பங்கள் என்பது மிகப் பெரிய குற்றம். ஆகவே இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யாதீர்கள்.” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்