Skip to main content

"குஜராத்துல ஒரே நேரத்துல தேர்தல் நடத்த துப்பு இல்ல... இந்தியா முழுக்க தேர்தல் நடத்தி கிழிச்சிடுவானுங்க..." - சூர்யா சேவியர்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

dg

 

அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற தொங்கு பால விபத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பராமரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அவசர கதியில் பாலம் திறக்கப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என்று பலரும் மாநில அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 5க்கும் மேற்பட்ட நபர்களை மாநில அரசு கைது செய்துள்ளது. இந்நிலையில் அரசியல் விமர்சகர் சூர்யா சேவியரிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளார்கள். இந்த விபத்துக்கு பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறார்கள். இதுவரை எத்தனை நபர்கள் உயிரிழந்தார்கள் என்ற சரியான விவரம் வெளியானதாகத் தகவல் இல்லை. இந்த விபத்தை எப்படிப் பார்க்கிறீர்கள். உங்களின் கருத்து என்ன?

 

இந்தப் பாலம் எப்போது கட்டப்பட்டது, எதற்காக இடையில் மக்கள் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 114 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாலம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இடையில் பாலம் சேதமடைந்ததாகக் கூறி மறுசீரமைப்பு செய்ய அனுமதி அளித்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையே விரைவில் குஜராத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டு அவசர கதியில் இந்தப் பாலம் திறக்கப்பட்டது. இது திட்டமிட்ட படுகொலையாகத்தான் பார்க்க வேண்டும். பாலத்தை சரி செய்யத் துப்பில்லாமல் பாலத்தை மக்கள் ஆட்டினார்கள் அதனால் உடைந்துவிட்டது என்ற கதையைக் கூறுகிறார்கள். 

 

விரைவில் இமாச்சல், குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கான தேதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் குஜராத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கான தேதி மட்டும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. அடுத்தடுத்த மாதத்தில் நடைபெறும் ஒரு தேர்தலையே அறிவிக்கத் துப்பில்லாத இந்த அரசு இந்தியா முழுவதும் தேர்தல் நடத்திக் கிழித்து விடுவோம் என்கிறார்கள். கேட்டால் ஒரே நாடு ஒரே தேர்தலாம். இவர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்ற வக்கற்றவர்களாக இருக்கும்போது இவர்கள் மக்களுக்காக எப்படி சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.  இந்த விபத்தே திட்டமிட்ட படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும். 

 

இவர்களால் எதையாவது உருப்படியாகச் செய்ய முடிகிறதா என்றால் எதுவும் இல்லை. நான் ரஷ்யாவில் அதிவேகமாகச் செல்லக்கூடிய ரயிலில் பயணித்துள்ளேன்.  1000 கிலோ மீட்டர் தூரத்தை சில மணி நேரங்களில் கடந்துவிடும். இந்த ரயில் செல்லும் பாதை பெரும்பாலும் காடுகளில் பயணிக்கும் வகையிலேயே இருக்கும். அதனால் காட்டு விலங்குகள் அடிப்பட்டு உயிர்ச்சேதம் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இருபுறமும் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு இருக்கும். இது அந்த ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கும் இருக்கும். இங்கேயும் தற்போது அதிவேக ரயில் விடுகிறோம் எனக் கூறிக்கொண்டு என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தினசரி மாடுகள் மீது மோதி ரயில் சேதமடைவதை நாம் பார்க்கிறோம். இது ஒன்றும் காட்டுப் பகுதியில் நடைபெறவில்லை. இவை அனைத்தும் நகரங்களில் செல்லும்போது இந்த விபத்து நடைபெறுகிறது. நாட்டு விலங்குகள் இவை. காட்டு விலங்குக்கே ஒரு வெளிநாட்டு அரசு பாதுகாப்பு கொடுக்கும்போது இந்த அரசு எந்த மாதிரியான பாதுகாப்பைத் தருகிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். 

 

மக்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசு பதவி விலக வேண்டும். மக்களுக்காக என் இதயம் புரள்கிறது, உருள்கிறது என்ற கதையெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நீங்கள் பதவி விலக வேண்டும். அதுதான் உண்மையான வருத்தமாக இருக்கும். நடிப்பதை முதலில் நிறுத்துங்கள். அரியலூர் ரயில் விபத்து நடந்த உடனே அதற்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்கள். அந்த மாதிரியான நல்ல அரசியலை இவர்களிடம் எதிர்பார்த்தால் நாம் தான் முட்டாள். 500க்கும் மேற்பட்டவர்கள் பாலத்தில் பயணம் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 150க்கும் மேற்பட்டவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதில் பெண்களும் சிறுவர்களும் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.