Advertisment

படத்தைப் படமாகப் பாருங்கள்... பெயரில் அரசியலைக் கொண்டு வந்தால் இனி ஏ,பி,சி,டி என்றுதான் வைக்க முடியும் - சூர்யா சேவியர் தடாலடி!

jl

Advertisment

சூர்யா நடித்து பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை தினந்தோறும் ஏதாவது ஒரு குழுவினர் எழுப்பிவருகிறார்கள். குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சில அமைப்புகள் இந்தப் படத்தைக் கடுமையாக எதிர்ப்பதுடன் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளன. இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாகவும், அதில் வரும் பெயர் அரசியல் தொடர்பாகவும் அரசியல் விமர்சகர் சூர்யா சேவியரிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

ஜெய்பீம் படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல முறையில் விமர்சனம் வந்துகொண்டிருக்கும் நிலையில், சிலர் அந்த படத்தில் தங்கள் சமூகத்தை அவமானப்படுத்தியுள்ளனர் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். படத்தில் மற்ற கேரக்டர்கள் உண்மை சம்பவத்தில் உள்ளது போல் இருக்கின்ற நிலையில் குருமூர்த்தி என்ற பெயர் மட்டும் எதற்காக வைக்க வேண்டும், அதில் உள்நோக்கம் இருக்கிறது என்று எதிர்தரப்பினர் கூறி வருகிறார்கள். மேலும் காலண்டர் விவகாரத்தில் வேண்டும் என்றே அவ்வாறு செய்ததாக வருத்தப்படுகிறார்கள், எங்கள் சமூக மக்களை கோபக்காரர்களாக காட்ட வேண்டும் என்று படம் எடுத்தவர்கள் முடிவு செய்து இப்படி காட்சிகளை அமைத்துள்ளனர் என்று கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஜெய்பீம் படம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்துவதற்காக, வேறொரு சமூகத்தை தாழ்த்துவதாக நான் பார்க்கவில்லை. இந்த படத்தில் ஆதிக்கத்திற்கும், அடக்கு முறைக்கும் எதிரான ஒரு கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள். பாமகவினர் அவர்களின் சமூகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தான் செய்த தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள். அதற்கான எல்லா முயற்சிகளையும் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்கள் கட்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று தானே பெயர் வைத்துள்ளார்கள், வன்னியர் கட்சி என்று பெயர் வைக்கவில்லையே? அவர்கள் தன்னை கார்ல் மார்க்ஸ் என்று பேசி வரும் சூழலில் இந்த மாதிரியான எதிர் கருத்துக்களை வைக்க வேண்டிய அவசியம் என்ன, அப்படி என்ன இதில் தவறாக சொல்லிவிட்டார்கள். அனைத்து கட்சிகளிலும் இவர்கள் குறிப்பிடும் சமூகத்தை சேர்ந்தவர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமே அந்த சமூகத்தின் அடையாளம் என்று கூறி அனைவரும் அதற்கு ஆதரவு தருவதை போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார்கள்.

Advertisment

பெயர் வைப்பதை பிரச்சனையாக்கி வருகிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும். ஏன் குரூமூர்த்தி என்று பெயர் வைத்தீர்கள் என்றால், பிறகு என்ன பெயர் வைத்தால் இவர்கள் திருப்திப்படுவார்கள். கதாநாயகன், கதாநாயகிக்கு இனி ஏ,பி,சி,டி என்று தான் பெயர் வைக்க வேண்டும். பாட்ஷா படத்தில் வில்லன் பெயர் மார்க் ஆண்டனி என்று பெயர் வைத்திருப்பார்கள். அதற்காக ஏன் எங்கள் சமுதாய பெயரை வைத்தீர்கள் என்று கேட்க முடியுமா? என்ன பேசுகிறோம் என்று ஓரளவுக்காவது தெரிந்து பேச வேண்டும். ருத்ரதாண்டவம் படம் பாருங்கள், அதில் அம்பேத்கார் படம் போட்ட சட்டை அணிந்த ஒரு நபர் கஞ்சா விற்பதை போன்று காட்சிகளை அமைத்துள்ளார்கள். திருமாவளவனை குறியீடாக வைத்துள்ளார்கள். இதை அந்த இயக்குநரே பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த மாதிரியான காட்சிகளை அவர்கள் படத்தில் காட்டிவிட்டு பெயர் வைப்பதை குற்றம் சொல்லி வருகிறார்கள். சேகுவேரா படத்தை போட்டு ஒருவர் போதை மருந்து கடத்துவதாக காட்டியுள்ளார். சேகுவேரா என்றைக்கு போதை மருந்து கடத்தினார் என்று தெரியவில்லை. இந்த காட்சிகளை படத்தில் அவர் வைக்கிறார். அதனை மக்கள் ஏற்றுக்கொள்கிறாரா அல்லது நிராகரிக்கின்றார்களா என்பதுதான் முக்கியம். இங்கே ஜெய்பீம் படத்தை வெகுமக்கள் ஏற்றுக்கொண்டு ஆதரிக்கிறார்கள், நாடு கடந்து அதனை பாராட்டி வருகிறார்கள். புதிய புதிய சாதனைகளை அந்த திரைப்படம் படைத்து வருகிறது. அதனை பொறுக்க முடியாமல் சிலர் அதன் மீதுபுழுதி அள்ளி வீசப்பார்க்கிறார்கள்.

எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள், எனவே சிலரை தனியாக அடையாளப்படுத்தி பேசுவது என்பது மிகவும் தவறான ஒரு செயலாகும். சாதியை அவமானப்படுத்திவிட்டீர்கள், மதத்தை அவமானப்படுத்திவிட்டீர்கள் என்று இதை போன்று தொடர்ந்து கூறி வந்தால் இனி வரும் காலத்தில் சினிமாவே எடுக்க முடியாமல் போய்விடும். பார்வதிக்கு அப்போது உதவி செய்து இந்த வழக்கை அடுத்தகட்டம் எடுத்து செல்ல உதவியதே கோவிந்தன் என்ற அதே சமூகத்தை சேர்ந்தவர் தான். அவரை மிரட்டுகிறார்கள், எப்போது மிரட்டுகிறார்கள், நேற்று முன்தினம் வழக்கறிஞர்கள் அவர் வீட்டுக்கு சென்று நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இதை செய்தார்கள், நாம் இந்த வழக்கில் பார்வதிக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறோம்,எனவே நம் சமூகத்தை குறைத்து காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதனை அவர் நிராகரித்துள்ளார். இவ்வாறு படத்தை படமாக பார்க்காமல் அதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தோம் என்றால் எந்த கலை படைப்பும் வெளியே வர முடியாது. எனவே இந்த படம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம். சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள் நிறைய படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இத்தோடு இதனை கடந்துவிட வேண்டும்.

anbumani ramadoss Surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe