/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/188_26.jpg)
‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசிவருகின்றனர். அந்த வகையில் திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம் குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டனை வெட்டி எடுப்பதற்கான சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு நடத்தியது. ஒன்றிய அரசுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது? என்ற ஒரு கேள்வி இருக்கிறது. இரண்டாவதாக ஏலத்தில் தனியார் நிறுவனம் பங்குபெறும் அதிகாரம் எப்படி வந்தது? என்ற கேள்வி இருக்கிறது. இந்த இரண்டு கேள்விக்குமான பதில் 2023 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்திய சுரங்கம் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம்தான். இந்த சட்டத்தில் இருந்துதான் இரண்டு முக்கிய மாற்றம் நிகழ்கிறது. முதலாவதாக பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே வெட்டி எடுக்கலாம் என்று பட்டியலிடப்பட்ட கனிமங்களை, தனியார் நிறுவனங்களும் வெட்டி எடுக்கலாம் என்ற மாற்றம் வந்தது. அதனால்தான் வேதாந்தாவின் துணை நிறுவனம் உள்ளே வந்தது. இரண்டாவதாக மாநில அரசாங்கங்கள் மட்டும் ஏலம் விடலாம் என்று சொல்லப்பட்ட பல்வேறு கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விடும் என மாற்றம் செய்தனர்.
மேற்கூறப்பட்ட அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்திருந்தால், ஒன்றிய அரசு ஏலம் விடுவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்காது. ஏலம் நடந்திருக்காது. அப்படியென்றால் இந்த ஏலத்திற்கு மூலக் காரணமாக இருந்தது, அ.தி.மு.க ஆதரித்த 2023ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சுரங்கம் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம்தான். தி.மு.க. இந்த சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறது. ஆனால் அந்த சட்டத்தை ஆதரித்தது மட்டுமின்றி அதைக் கொண்டு வரக் காரணமாக இருந்ததும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த ஆட்சிதான். மூன்று சட்டங்களை 30 நிமிடத்தில் கொண்டு வந்தார்கள். அதற்காக மக்களவையில் நடத்தப்பட்ட விவாதம் வெறும் 19 நிமிடம்தான். மாநிலங்களவையில் அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பெரும் அமளி நடந்து கொண்டிருந்தது. அந்த அமளிக்கு மத்தியில் தம்பிதுரை அந்த சட்டத்தை ஆதரித்து ஒன்றிய அரசுக்கு ஏல உரிமையைக் கொடுப்பது பாராட்டுக்குரியது என்றார்.
யுபிஏ அரசு இருந்த சமயத்தில் கனிமங்கள் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட அட்டணைப் பகுதி பி பிரிவிலுள்ள கனிமங்களை பொதுத்துறையில் உள்ள நிறுவனங்கள் மட்டும்தான் வெட்டி எடுக்க உரிமம் இருந்தது. தனியார் நிறுவனம் அதில் கை வைக்க முடியாது. பொதுத்துறை அந்த சட்டத்தை மாற்றி தனியார் நிறுவனமும் வெட்டி எடுக்கலாம் என்று கொண்டு வந்தது ஊழல் ஒழிக்கின்ற லட்சனமா? பொதுத்துறை வெட்டி எடுத்தால் ஊழல் நடக்குமா? தனியார் நிறுவனம் வெட்டி எடுத்தால் ஊழல் நடக்குமா? தனியாருக்கு தாரை வார்ப்பது ஊழல் நடவடிக்கை என்று சொன்னால் மக்களை அது ஏமாற்றும் வேலைதான். மாற்றி இயற்றப்பட்ட சட்டத்தின் மூலமாகத்தான் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏலம் நடக்கிறது.
ஏலத்தை மாநில அரசே நடத்தலாமே என்று கேள்வி கேட்டால் அதற்கு ஒன்றிய அரசு, நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட அரிய வகை கனிமங்கள் கிடைக்கும் இடத்தை கண்டுபிடித்து வைத்துள்ளோம் என்றும் அந்த கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளில் வெறும் 19 இடங்களை மட்டும்தான் மாநில அரசு ஏலம் விட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் மாநில அரசாங்கம் அந்த கனிம வளங்களை வெட்டி எடுக்க சுணக்கமாக இருக்கிறது என்று பதிலளித்துள்ளது. மாநில அரசுகளுக்கு அந்த பகுதியிலுள்ள சூழலைப் பற்றியும் மக்கள் எதிர்ப்பை பற்றி நன்றாகத் தெரியும். அதனால்தான் அமைதியாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பதற்காக ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதைத்தான் அ.தி.மு.க. ஆதரித்துள்ளது. அதில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கமும் ஒன்று. ஒரு மசோதா நிறைவேற வரும்போது அதனுடைய சாதகம் மற்றும் பாதகத்தை பொதுவாகப் பேசவதற்காகவா மக்களவைக்கு தம்பிதுரை செல்கிறார்?. அந்த மசோதா நிறைவேறாமல் இருந்திருந்தால் ஒன்றிய அரசு ஏலம் விடுத்திருக்க முடியுமா?
அந்த சட்டத்தை மிரட்டலுக்கும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு அரிட்டாபட்டியில் கனிமங்கள் இருப்பதைக் கண்டறிய ஒரு தனியார் நிறுவனத்திற்கு உரிமம் கொடுப்பார்கள். அவர்கள் கண்டறிந்து மாநில அரசுக்கு ஒரு ரிப்போர்ட் கொடுப்பார்கள். கண்டுபிடித்த கனிமத்தை ஏலம்விட்ட பிறகு அதிலிருந்து வரும் பணத்தை கண்டுபிடித்த அந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை மக்கள் பாதிப்பால் கனிமங்களை வெட்டி எடுக்கவில்லை என்றால் மாநில அரசின் நிதியிலிருந்து அந்த நிறுவனத்திற்கு பணம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடுமையான மசோதாவை ஆதரித்து வந்துவிட்டு பொதுவாக பேசினோம் என்று சொல்வது செய்த துரோகத்தை மறைப்பது. அரிட்டாபட்டி டங்கஸ்டன் சுரங்கத்துக்கு காரணமே சுரங்கம் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம்தான் என்பதை முதலில் சொன்னது எடப்பாடி பழனிசாமிதான். சொல்லிவிட்டு அந்த சட்டத்தை தடுக்கவில்லை என்று தி.மு.க.வைப் பார்த்துச் சொல்கிறார். ஆதரித்ததை அவரே ஒப்புக்கொண்டு, அது இப்போது அம்பலப்பட்டவுடன் தம்பிதுரை நான் மணியை மட்டும்தான் அடித்தேன் சத்தம் அதுவாகத்தான் வந்தது என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)