Advertisment

அப்பாடா பிரச்சினை முடிந்தது... வரப்போகும் தீர்ப்புகளால் கலக்கத்தில் அதிமுக... அடுத்தது என்ன?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் நவம்பர் 17-ம் தேதி முடிவதால், அதற்கு முன்பாக அதிரடியாக பல தீர்ப்புகளை வழங்கினார். அந்த தீர்ப்புகள் இந்தியா முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவரது மேற்பார்வையில் வழங்கப்பட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தீர்ப்பு, தமிழகத்தில் ஒரு பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியது.

Advertisment

bjp

"ரஞ்சன் கோகாய் கொடுத்த ராமஜென்ம பூமி தொடர்பான தீர்ப்பு ஒருவிதமான ஆதரவையும் பலமான எதிர் உணர்வுகளையும் உருவாக்கியது என்றாலும் அனைவராலும் ஒரு வழியாக ஏற்கப்பட்டது. "அப்பாடா பிரச்சினை இத்துடன் முடிந்தது' என்கிற பெருமூச்சு இந்தியா முழுவதும் ஏற்பட்டது. ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள ரஞ்சன் கோகாய் அனுமதித்தார். ஆனால் பா.ஜ.க. இத்தனை ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரமான கோவிலை இடித்து மசூதியை கட்டினார்கள் என்பது பொய் என ஆணித்தரமாக மறுத்து தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். முஸ்லிம்களுக்கு ஒரு மசூதி போனது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு தங்களது பிரச்சார பீரங்கியே காணாமல் போய்விட்டது. இந்தத் தீர்ப்பை பா.ஜ.க. வரவேற்றதன் மூலம் இதுவரை முஸ்லிம்கள் மீது பழிபோட்டு செய்து வந்த பிரச்சாரம் பொய் என சுப்ரீம் கோர்ட் சொன்னதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார் சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் ஒருவர்.

admk

Advertisment

ராம ஜென்ம பூமியை தொடர்ந்து, "தகவல் அறியும் உரிமைச் சட்டம் சுப்ரீம் கோர்ட்டை கட்டுப்படுத்துமா' என்கிற கேள்விக்கும் ரஞ்சன் கோகாய் பதிலளித்துள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வந்த 12 வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வரவில்லை. 2007ஆம் ஆண்டு சுபாஷ் அகர்வால் இந்த சட்டத்தின் கீழ் கேட்ட விவரங்களை சுப்ரீம் கோர்ட் தரமறுத்தது. மத்திய தகவல் ஆணையம் "சுப்ரீம் கோர்ட் என்பது ஒரு பொது நிறுவனம். பொதுமக்களின் வரிப் பணத்தில் இயங்கும் சுப்ரீம் கோர்ட், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்டது' என உத்தரவிட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டே விசாரித்தது.

admk

ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டும், அதன் தலைமை நீதிபதி அலுவலகமும் கொண்டு வரப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வரும். அந்த வெளிப் படைத்தன்மை சுதந்திரமான நீதி வழங்கலை உறுதிப்படுத்தும். வெளிப்படைத் தன்மை சுப்ரீம் கோர்ட் என்கிற அமைப்பை பாடாய்படுத்தும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது' என தீர்ப்பளித்தது.

admk

இதே ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறப்பட்ட போதும், கோகாய்க்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக ரஞ்சன் கோகாய் தலைமையில் நான்கு நீதிபதிகள் வெளிப்படையாக கொந்தளித்தபோதும் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பது மர்மமான புதிராக இருந்தது. இந்த வாரம்தான் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் பொய் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வந்த கையுடன் சுப்ரீம் கோர்ட்டை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரஞ்சன் கோகாய் கொண்டு வந்து விட்டார். இது மிகவும் ஆரோக் கியமான விஷயம் என்கிறார்கள் வழக்கறிஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ரஞ்சன் கோகாய் தலைமையில் ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் சந்திரசூட். இவர் 2010-ஆம் ஆண்டு நவம்பரில் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு சட்டரீதியாக எந்த தடையுமில்லை. "சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்காதது மனித உரிமைகளை மீறிய செயல்' என தீர்ப்பளித்தார். அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா தலைமையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை கேரள அரசால் கூட சபரிமலையில் அமல்படுத்த முடியவில்லை. கோவிலுக்குச் சென்ற பெண்களை பக்தர்கள் தாக்கினார்கள். சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பு அதன் அமலாக்கல் தொடர்பான பெரிய விவாதத்தை சபரிமலை தீர்ப்பு உருவாக்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தவறானது. அதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென 60-க்கும் மேற்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். பொதுவாக ஒரு முறை ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கி விட்டால் அதை சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்வது இல்லை. சசிகலாவையும் ஜெயலலிதாவையும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என சொன்ன சுப்ரீம் கோர்ட் அதற்கெதிரான மறுபரிசீலனை மனுவை விசாரிக்கவேயில்லை. "ஜெ. இறந்து விட்டார்: அதனால் அவர் தண்டனை அனுபவிக்க மாட்டார்' என ஒற்றை வரி கருத்தோடு அந்த மறுபரிசீலனை மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டது. ஆனால் சபரிமலை மலை தீர்ப்புக்கெதிராக மலை போல வந்த மறுபரிசீலனை மனுக்களை வழக்கத்திற்கு மாறாக சீரியசாகவே எடுத்துக் கொண்டது.

நவ.14-ம் தேதி அந்த மறு பரிசீலனை மனுவில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. "இந்த மனுக்கள் பெண்களின் வழிபாட்டு உரிமையை கேள்வி கேட்கின்றன சபரிமலையில் மட்டுமல்ல, மசூதிகளிலும் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. பேகரா என்கிற முஸ்லிம் பிரிவினர் பெண்களின் வழிபாட்டு உரிமையை முற்றிலுமாக மறுக்கிறார்கள். பெண்களின் வழிபாட்டு முறை ஒவ்வொரு கோவிலுக்கும் மாறு படுமா? ஒவ்வொரு மதமும் தன் வழிபாட்டு முறை களைக் கடைப்பிடிக்க முடியுமா? அது பெண்களின் வழிபாட்டு உரிமையை கட்டுப்படுத்துமா? என்கிற கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. எனவே இதை ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடுகிறோம்' என ரஞ்சன் கோகாய், கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய மூவர் உத்தரவிட மற்ற இரு நீதிபதிகளான சந்திரசூட்டும், நரிமனும் "பெண்கள் சபரிமலையில் நுழைய தடை செய்வது சட்ட விரோதம்' என 3 : 2 என்ற அடிப்படையில் தீர்ப்பளித்தனர்.

தற்பொழுதுள்ள தீர்ப்பான சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி என்கிற தீர்ப்புக்கு எந்த தடையும் சுப்ரீம் கோர்ட் விதிக்காத நிலையில், இந்த வாரம் மண்டல பூஜை தொடங்குவதால் மறுபடியும் போராட்டக்காரர்களின் பூமியாக சபரிமலையை மாற்றியிருக்கிறது சுப்ரீம் கோர்ட் என்கிறது மறுபரிசீலனைக்காக வழக்கு தொடர்ந்த சபரிமலை பக்தர்கள் வட்டாரம்.

"சபரிமலையைப் போலவே ரஃபேல் வழக்கில் புதிதாக விசாரணை எதுவும் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்தனர். வழக்கமாக மறுபரி சீலனை மனுவை ஏற்காத சுப்ரீம் கோர்ட் இதனை டிஸ்மிஸ் செய்து விட்டது. ரஃபேல் தொடர்பான மறுபரிசீலனை மனுவில் பல புதிய விஷயங்கள் இருந்தன. அதில் இந்து ஆங்கில ஏடு ரஃபேல் விமானத்தின் விலைகளை முடிவு செய்ய பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபட்டது என்பதை ஆவணங்கள் மூலம் வெளியிட்டது. "அந்த ஆவணங்கள் எங்கள் அலுவலகத்திலிருந்து காணாமல் போன ஆவணங்கள்' என மத்திய அரசு சொன்னது. இவையெல்லாம் மறுபரிசீலனை மனுவில் இடம் பெற்றது. இதையெல்லாம் சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை'' என்கிறார் இந்த விவகாரத்தில் அதிக விவரங்கள் தெரிந்த டெல்லி பத்திரிகையாளர்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் அமைந்த ஆட்சியை கவிழ்க்க 17 எம்.எல்.ஏ.க்களை கடத்திக் கொண்டு போனது பா.ஜ.க. இன்று பா.ஜ.க.வின் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைய இந்த கடத்தல்தான் காரணமானது. இந்த பதினேழு பேரையும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ். சபாநாயகரின் இந்த உத்தரவு செல்லும். "அரசியலில் ஒழுக்கம் முக்கியம்' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் 2023 வரை அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிக் காலம் இருக்கிறது. அவர்களை தேர்தலில் போட்டியிட தடைவிதித்து சபாநாயகர் போட்ட உத்தரவு செல்லாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இது தவறான தீர்ப்பு. "சபாநாயகர் கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்தது சரி என சொல்லும் சுப்ரீம் கோர்ட், அவர்கள் அதே சட்டப்படி தேர்தலில் போட்டியிடக்கூடாது என தடை விதிப்பது தவறு என சொல்லக் கூடாது' என்கிறார் பிரபல வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டி.

"அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். உட்பட 11 பேர் வாக்களித்தது கட்சி தாவல் தடுப்புச் சட்டப்படி தவறு. அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க.வின் கொறடாவான சக்கரபாணி தொடர்ந்த வழக்கு அதே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கும் கர்நாடக வழக்கு போன்ற தீர்ப்பை தருமா என்ற கலக்கம் அ.தி.மு.க. தரப்பில் உள்ளது. அதே நேரத்தில் கொறடா உத்தரவு உள்பட பலவற்றிலும் கர்நாடக வழக்கிலிருந்து தமிழக வழக்கு மாறுபட்டது என்றும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கிறார்கள். வழக்கு என்ன ஆயிற்று என தி.மு.க. தரப்புக்காக வாதாடும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம் கேட்டோம். அந்த வழக்கில் ஒருநாள் வாதம் மட்டும்தான் பாக்கி. இறுதி வாதம் நடக்கும் நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாப்டே வேறு முக்கியமான வழக்குகளை விசாரிக்க சென்றுவிட்டார். கோகாய் நவ.17-ம் தேதி ஓய்வு பெற்றபின் அதே இடத்தில் பாப்டே தான் அடுத்த தலைமை நீதிபதியாக அமர உள்ளார். அவரிடம் நாங்கள் இந்த வழக்கை கொண்டு செல்ல தயாராக உள்ளோம். அவர் புதிய அமர்வை அழைப்பார். அவர்கள் வழக்கின் இறுதி வாதங்களை கேட்பார்கள். விரைவில் வழக்கு முடிவுக்கு வரும்'' என்கிறார்.

judgement politics admk eps ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe