Skip to main content

சினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம்! - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி

இன்று அவர் சூப்பர் ஸ்டார், தலைவர், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அன்று, ஒரு வில்லன் நடிகர், ஒரு படம் மட்டுமே நடித்திருந்தவர். அவரது மனநிலை எப்படி இருந்தது, என்ன கனவுகள் இருந்தன? பின்வரும் பேட்டி 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி அறிமுகமான பின்பு எடுக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டில் 'பொம்மை' இதழில் வெளியானது...  

 

aboorva ragangal rajinikanth


  
நடிப்பில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

படங்களைப் பார்த்து.

திரைப்படத்தில் நடிக்க நீங்கள் முயற்சி செய்தது உண்டா? அந்த முயற்சிகளைச் சொல்ல முடியுமா?

பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து பயிற்சியும் முயற்சியும் எடுத்தேன். தென் இந்திய பிலிம் வர்த்தக சபை நடத்தும் நடிப்புப் பள்ளியில் டாக்டர் பி.என்.ரெட்டியிடம் டிப்ளமா வாங்கினேன்.

உங்கள் முயற்சியின்போது ஏற்பட்ட மனக் கசப்பான அனுபவம்?

சில மாணவர்கள் என்னை அதைரியம் அடையச் (Discourage) செய்தது ஒரு கசப்பான அனுபவம்.

உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, உங்களை ஊக்குவித்தவர்கள் யார்?

திரு. கே.பாலசந்தர் ஒருவர்தான்.

நடிக்க வருவதற்கு முன், உங்கள் எண்ணத்தில் 'இப்படித்தான் நடிக்க வேண்டும்; இத்தகைய
கதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும்' என்று முன்கூட்டியே தீர்மானித்திருந்தது உண்டா?


நான் யாரையும் பின்பற்ற விரும்பவில்லை. புதிய முறையில் நடிக்கவே நான் விரும்பினேன். நடித்தேன். இனியும் அவ்விதமே நடிப்பேன்.


கே.பாலசந்தரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது?

பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நான் கன்னடப் பிரிவில் இருந்தேன். திரு. கே.பாலசந்தர் தமிழ் நடிப்புப் பிரிவுக்கு போதகராக வந்தார். பாலசந்தர் வகுப்புகளை இணைத்து நடத்தி, பாடம் சொல்லிக் கொடுத்தார். நான் பாலசந்தரின் விசிறி. அவர் படங்களில் ஒன்றையும் பார்க்கத் தவறியதில்லை. அவர் என்னுடைய மானசீக குரு. 'நடிப்பைத் தவிர, நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?' என்று அவரிடம் என் முதல் கேள்வியைக் கேட்டேன். "நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்கக் கூடாது!' என்று பளிச்சென்று கூறினார் கே.பி. இதுதான் எங்கள் அறிமுகம். இப்படித்தான் அது நடந்தது! அடுத்து அவர் "தமிழ் பேச வருமா?" என்று என்னிடம் கேட்டார். "கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்றேன். "நீங்கள் என்னை கலாகேந்திரா ஆபீஸில் வந்து பாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

உங்களைத் தேர்ந்தெடுக்க பாலசந்தர் நடத்திய தேர்வைப் பற்றிச் சொல்ல முடியுமா?

கலாகேந்திராவில் அவரைச் சந்திக்கப் போனேன். ஏதாவது ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார் பாலசந்தர். ஒரு கன்னட நாடகத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு நடித்தேன். அப்போது தமிழ் எனக்குச் சரளமாகப் பேச வராது. "இப்படி சொல்லக் கூடாது. நீ முதலில் தமிழ் பேசக் கற்றுக் கொள். உனக்கு எப்படி ஒரு சிறப்பான இடம் கிடைக்கிறது பார்!" என்றார். 'அபூர்வ ராகங்கள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'மூன்று முடிச்சு' - இப்படி அன்றே மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்தார்.

 

 

kb and vasanthஎடுத்த எடுப்பிலேயே வில்லன் கதாபாத்திரம்தான் உங்களுக்குத் தரப்பட்டதா?

ஆம். எடுத்த எடுப்பிலேயே வில்லன் வேஷமே கிடைத்தது. அந்த வாய்ப்பு பாலசந்தரை இன்ஸ்டிடியூட்டில் சந்தித்த பின்னர்தான் கிடைத்தது. 'ஆர்.சிவாஜி ராவ்' என்று இருந்த என் பெயரை பாலசந்தரே 'ரஜினிகாந்த்' என்று மாற்றி அமைத்தார்.'

பாலசந்தரைப் பற்றி, அவரது டைரக்ஷனில் நடிப்பதற்கு முன்பாக, நீங்கள் கேள்விப்பட்டிருந்தது என்ன?

ரொம்ப கோபக்காரர். மூடி((Mood))யாக இருப்பார் என்று.

அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தினமும் பாலசந்தரை ஒரு முறை நினைத்து விட்டுத்தான் மேக்-அப் போட்டுக் கொண்டு செட்டுக்குள் போகிறேன்.

உங்களது முதல் நாள் படப்பிடிப்பு பற்றி சொல்லுங்கள். உங்கள் மனநிலை இருந்த விதம் பற்றி சொல்லுங்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் இந்தப் படப்பிடிப்புப் பற்றி விசாரித்தார்களா?

கேமரா பயம் இல்லை. ஆனால் பாலசந்தர் பற்றித்தான் பயம். மிகப் பெரிய டைரக்டர் முன்னால் நடித்து நல்லபடியாக பெயர் வாங்கத்தான் அப்படிப் பயந்தேன். வேஷத்தைப் பற்றி நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் விசாரிக்கவில்லை. "பாலசந்தர் உன் நடிப்பில் திருப்தி அடைந்தாரா?" என்றுதான் விசாரித்தார்கள்.

நடிக்கும்போது, பாலசந்தர் உங்களை என்றாவது கடிந்து கொண்டது உண்டா?

அவரிடம் நான் திட்டு வாங்காத நாளே இல்லை. இன்னும் நன்றாக நடிக்கணும். புகழ் பெறணும் என்பதற்காக அன்புடன் கடிந்து கொள்வார். ஒரு நாள் 'மூன்று முடிச்சு' செட்டே என் கனவில் வந்தது. டைரக்டரே கனவில் வந்துவிட்டார். கனவில் கூட அவர் என்னைக் கடிந்து கொள்ளும் காட்சிதான்.

 

villain rajiniசெட்டில் உங்களுடன் சகஜமாகப் பழகி, உங்களைக் கவர்ந்தவர் யார்?

ஸ்ரீவித்யா, கமல், சிவகுமார், விஜயகுமார், ஸ்ரீபிரியா ஆகியோர் சகஜமாகப் பழகி என்னைக் கவர்ந்த கலைஞர்கள்.

படம் வெளிவந்த தினம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

'அபூர்வ ராகங்கள்' படத்தை கிருஷ்ணவேணியில் பார்க்க பகல் காட்சிக்குச் சென்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை. பிளாக்கில்  டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தேன்.

உங்களை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டது  உண்டா?

உடனே அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அச்சமயம் நான் தாடி வளர்த்து வந்தேன். ஆனாலும் ஒரு ஒன்பது வயதுப் பெண் தியேட்டரில் பின்புறம் இருந்தவள், "மாமா! நீங்கள்தானே படத்திலே ஆக்ட் பண்றேள்!'' என்று கேட்டுவிட்டாள். தன் குடும்பத்தவருக்கும் என்னை அறிமுகம் செய்வித்தாள் அந்த ஒன்பது வயதுப் பெண். என் முதல் ரசிகை அந்தச் சிறுமிதான்.

உங்கள் நடிப்பைப் பற்றி வந்த விமர்சனத்தைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?

என் பட விமரிசனங்களைப் படித்தேன். ஒரு பிரபல வார இதழ், என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, 'இன்னும் நன்றாக நடிக்கலாம்...!' என்று குறிப்பிட்டது என்னைக் கவர்ந்தது. நன்றாக இருந்தது என்று புகழ்வதை விட, என் நடிப்பில் சொல்லியிருந்த குற்றங்களையே நான் ஆர்வமாகப் படித்தேன்.


நடிப்பதற்கு வருவதற்கு முன்பு யாருடைய நடிப்பு உங்களைக் கவர்ந்திருந்தது?

நடிகர் நாகேஷ் ஒருவர்தான் என்னைக் கவர்ந்தவர்.

இன்னாரைப் பின்பற்றி முன்னேற வேண்டும் என்று யாரையாவது நினைத்தது உண்டா?

யாருடைய பாணியைப் பின்பற்றியும் நான் நடிக்க நினைத்ததில்லை. என்னுடைய, அதாவது ரஜினிகாந்த் பாணியில் - பல்வேறு நடிப்புத் திறனைக் காட்டவே விரும்புகிறேன்.

தமிழ்ப் படவுலகில் வில்லன் வேடத்தில் சிறந்து விளங்கும் நம்பியார், அசோகன், ஸ்ரீகாந்த், வாசு இவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? இவர்கள் யாராவது உங்களைப் பாராட்டியது உண்டா?

ஸ்ரீகாந்த் என்னைப் பாராட்டியிருக்கிறார். 'இறைவன் கொடுத்த வரம்' என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம். அப்போது ஒரு நாள் அவர் மனம் திறந்து என்னைப் பாராட்டினார்.

வில்லன் நடிகரான நீங்கள் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியுமா?

நிச்சயம் - நான் குணசித்திர வேடங்களையும் ஏற்பேன். நடிக்க முடியுமா, முடியாதா என்பதை என்
நடிப்பைப் பார்த்து ரசிகர்கள்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.

வில்லன் - இந்தச் சொல்லுக்கு நீங்கள் எப்படி விளக்கம் தர விரும்புகிறீர்கள்?

'அளவுக்கு அதிகமான சுயநலம் கொண்டவன்' என்ற சொல்லே வில்லன் என்பதற்குப் பொருத்தம் என்று கூறுவேன்.

நடிப்பில் உங்களுக்கு அறிவுரைகள் கூறிய மூத்த கலைஞர்கள் யாராவது உண்டா?

திரு. எஸ்.வி.சுப்பையா, திரு. வி.கே.ராமசாமி, திரு. நாகேஷ் ஆகியோர் நிறைய அறிவுரைகள் கூறியுள்ளனர்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்