Skip to main content

சுந்தர் பிச்சைக்கு காத்திருக்கும் சவால்களும், சோதனைகளும்...

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

கூகுளின் தாய் நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டதே நேற்றிலிருந்து இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளது. தமிழகத்தின் மதுரையில் பிறந்த ஒரு நபர் இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதை இந்தியாவே கொண்டாடி வருகிறது. 2004 ஆம் ஆண்டு மேலாண்மை நிர்வாகி என்ற சாதாரண பொறுப்பில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை இன்று அடைந்திருக்கும் உயரம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. இதற்காக அவர் சந்தித்த சவால்கள், முதலீடாக்கிய கடின உழைப்பு ஏராளம். ஆனால் நேற்று அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு மேலும் பல புதிய சிக்கல்களையும் அவர் சந்திக்க வழிவகுக்கும் என்கிறது சிலிகான் வேலி வட்டாரங்கள். அதுமட்டுமல்லாமல், கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் வேண்டுமென்றே மோசமான ஒரு காலகட்டத்தில் சுந்தர் பிச்சையை மாட்டிவிட்டுள்ளனர் என்ற குரலும் ஆங்காங்கே எழுந்து வருகிறது. சுந்தர் பிச்சையின் பதவியை சுற்றி இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழ காரணங்கள் என்ன..? 

 

sundar pichai's future as alphabet ceo

 

 

16 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக தற்போது பொறுப்பேற்றுள்ளார் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்திற்கு பின்பு தொடங்கப்பட்டாலும் அதன் தாய் நிறுவனம் என்று அழைக்கப்படும் ஆல்பபெட் நிறுவனம், எதிர்காலத்தை நோக்கியே கனவுகளை அறிவியலை கொண்டு அணுகும் முயற்சிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம். 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனமானது, இன்றைய தேதியில் சுமார் 28 துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது. இவை அனைத்திற்கும் சேர்த்தே சுந்தர் பிச்சை தற்போது தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஆல்பபெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது, கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளாக பொறுப்பேற்றனர். அதன் பிறகே தங்களது நம்பகமான ஊழியரான சுந்தர் பிச்சையிடம் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஒப்படைத்தனர். 

2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் க்ரோம், ஜி-மேப், ஆண்ட்ராய்டு என அந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் சிறப்பாக பணியாற்றி அந்நிறுவனத்தில் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தார். அந்த நல்ல பெயர்தான், "யாரை கூகுளின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கலாம்..?" என்ற லாரி பேஜின் கேள்விக்கு சுந்தர் பிச்சையின் பெயரை பிரதானமான பதிலாக வரவழைத்தது எனலாம். அமைதியான குணம் கொண்டவர், நேர்மையானவர், தொழில்நுட்பங்களில் கைத்தேர்ந்தவர், அனைத்திற்கும் மேலாக பல நிறுவனங்களிடமிருந்து தனக்கு வந்த அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகளை கூகுள் நிறுவனத்திற்காக மறுத்தவர் என்ற பெயர், ஆகியவை லாரி பேஜை மிகவும் கவர்ந்தன. இதன் காரணமாக கூகுள் நிறுவன சி.இ.ஓ பதவியிலிருந்து அவர் விலகியவுடன், அந்த இடத்தில் சுந்தர் பிச்சையை அமரவைத்தார். 

 

sundar pichai's future as alphabet ceo

 

கூகுள் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் அதிகாரமிக்க பொறுப்பில் அமர்ந்த சுந்தர் பிச்சை, அதன் பிறகு சந்தித்த சோதனைகள் ஏராளம். ஆனால் அவர் அவற்றை கையாண்ட விதமே இன்று அவரை ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக மாற்றியிருக்கிறது எனலாம். சீனாவில் கூகுள் தேடுபொறிக்கு விதிக்கப்பட்ட தடை, கூகுள் அலுவலகத்தில் எழுந்த நிறவெறி பிரச்சனைகள், மீ டூ புகார்கள், ஆண்- பெண் பாலின பாகுபாடு சர்ச்சை, அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட நம்பகத்தன்மை குறித்த விசாரணைகள் என பல சோதனைகளை கூகுள் நிறுவனம் சந்தித்தது. சீனா தடை செய்த கூகுள் தேடுபொறிக்கு பதிலாக 'டிராகன் பிளை' மென்பொருளை வடிவமைத்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டாலும், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இடையே சுந்தர் பிச்சைக்கு மேலும் நல்ல பெயரை பெற்று தந்தது. 

இதனை கடந்து கூகுள் ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகளை அவர் கையாண்ட விதம் பொதுவெளியில் சில விமர்சனங்களை சந்தித்தாலும், கூகுள் மேல்மட்ட உறுப்பினர்கள் குழு அந்த விமர்சனங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே கூறலாம். குறிப்பாக நிறவெறி மற்றும் ஆண்- பெண் பாலின பாகுபாடு சர்ச்சைகளை அவர் கையாண்ட விதம், கூகுள் நிறுவனம் மீது நம்பகத்தன்மை குறித்து நடத்தப்பட்ட காங்கிரஸ் விசாரணையில், மூன்றரை மணி நேரம் அடுக்கடுக்காய் அந்நிறுவனம் மேல் எழுப்பப்பட்ட விமர்சனம், குற்றசாட்டுகள் அனைத்தையும் புத்திசாலித்தனமாக, அதேசமயம் பதட்டப்படாமல் எதிர்கொண்ட சுந்தர் பிச்சையின் அமைதி ஆகியவை பலரையும் வியக்க வைத்தது. இப்படி அனைத்து விதங்களிலும் தங்களை கவர்ந்த சுந்தர் பிச்சைக்கு மிகப்பெரிய பரிசினை வழங்கியுள்ளனர் கூகுள் நிறுவனர்கள். 

 

sundar pichai's future as alphabet ceo

 

ஆனால் இந்த புதிய பொறுப்பில் அவருக்கு காத்திருக்கும் சவால்களும் ஏராளம். ஆல்பபெட் நிறுவனம் என்பது கூகுள் சம்பாதிக்கும் பணத்தை ஆராய்ச்சிகளில் செலவிடும் ஒரு நிறுவனமாகவே பெரும்பாலான நேரங்களில் பார்க்கப்படுகிறது. எதிர்கால தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி கோடிக்கணக்கில் பணம் செலவிடும் இந்த நிறுவனம், அதற்கு இணையாக வருமானம் ஈட்டுகிறதா என்பது கேள்விக்குறியே. ஆல்பபெட்டின் துணை நிறுவனங்கள் பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் செய்யும் முதலீடுகள், இன்னும் நிரந்தரமான வருமானமாக மாற்றப்படாமலேயே உள்ளன. தற்போது வரை செய்யப்பட்ட செலவுகளையும், இனி செய்யப்போகும் செலவுகளையும் ஈடு செய்யும் வகையில், வருமானம் தரும் ஒரு நிறுவனமாக இதனை மாற்றுதல் என்ற மிகப்பெரிய பொறுப்பு சுந்தர் பிச்சையின் தோள்களில் விழுந்துள்ளது. 

இதனை கடந்து, நம்பகத்தன்மை குறித்த விசாரணை குழு என்ற மிகப்பெரிய ஒரு நெருக்கடியையும் சுந்தர் பிச்சை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. வருங்காலத்தில் இந்த விசாரணை குழுவை எதிர்கொள்ளவதை தவிர்க்கவே, லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் இந்த பதவியில் சுந்தர் பிச்சையை அமர வைத்து, அவரை மாட்டிவிட்டுள்ளனர் என்ற பேச்சும் உலாவி வருகிறது. சவால்கள், சோதனைகள் அடுக்கடுக்காக எதிர்நின்றாலும், ஆல்பபெட் எனும் ஆலமரத்தின் வேரான கூகுள் நிறுவனம் கற்றுக்கொடுத்த அனுபவத்தினால் அனைத்தையும் சுந்தர் பிச்சை கடந்து வெற்றிகாண்பார் என்பதே அனைவரது ஊகமாக உள்ளது. அதேநேரம், சாதாரண ஒரு தமிழர், இன்று சிலிகான் வேலியின் அசைக்கமுடியாத சக்தியாக மாறியிருப்பது நமது இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கமே சுந்தர் பிச்சை எனும் மனிதனின் வெற்றிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது என்பதற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட வெற்றியின் அடையாளத்தை சுந்தர் பிச்சை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வார் என்பதை பார்க்க ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகும் ஆவலாகவே உள்ளது. 

 

Sundar Pichai

 

 

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தீபாவளிக்கு மக்கள் கூகுளில் தேடியது என்ன? 

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

What did people search on Google for Diwali?

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உ.பி. மட்டுமின்றி இதே ஏழ்மை நிலையில் நாடு முழுக்க பலர் தங்கள் தீபாவளியைக் கழித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இது ஒருபுறம் இருக்க, பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதும் நமது மக்கள் கூகுளை நாடுவது மரபாகவே மாறிவிட்டது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினர் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார். 

 

What did people search on Google for Diwali?

 

கூகுளில் அதிகம் தேடப்பட்டத்தில் முதல் 5 இடத்தைப் பிடித்த தேடலை அவர் வெளியிட்டுள்ளார். அதிலும், ஏன் எனும் கேள்வியுடன் தேடப்பட்டதை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கூகுளில் இந்த தீபாவளிக்கு மக்களால் அதிகம் தேடப்பட்டவை; 

 

1. இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?


2. தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்?


3. தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்?


4. தீபாவளி அன்று ஏன் இலட்சுமி பூஜை செய்கிறோம்?


5. தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியில் எடுக்கிறோம்?


எனும் ஐந்து விஷயங்களை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.