Skip to main content

சுமதி... தஞ்சம் கேட்டு வந்த எமன்! - ஆட்டோ சங்கர்#11

auto sankar 11 title
"தம்பி வணக்கம்'' என்ற பெண்மணியை நிமிர்ந்து பார்த்து "யாரும்மா நீங்க? என்ன விஷயம்?''

"என் பேரு   ஜோதி'' என்றாள் ஜோதி. புருஷனை விட்டு விலகி வந்து   சில   வருஷங்கள்   ஆகியிருந்தன. பெயர்தானே ஜோதியே தவிர, வாழ்க்கை இருட்டாத்தான் இருந்தது.

தாய் ஜோதிக்குப் பின்னால் பயந்தபடி எட்டிப்பார்த்த பெண் சுமதியின் தோற்றத்தில் கணிசமான வளர்ச்சி. லாட்டரிச் சீட்டின் பொங்கல் பம்பர் குலுக்கல் மாதிரி அபார குண்டாக இருந்தாள்.

"இவ... என் மக சுமதி... இவளையும் உங்க கம்பெனியிலே(!) சேர்த்துக்கணும்...''

'கம்பெனியா...?' சுமதியை ஆழமாகப் பார்த்தபடி, "நீ கொஞ்சம் வெளியே போய் இரும்மா'' என்று சொல்ல, பெண் வெளியே சென்று நின்றது!

 

 

தாய்காரியிடம் பேசினேன்.

"இதப்பாருங்க... பொண்ணு நல்லா இருக்கு... ஆனா, இந்தத் தொழிலுக்கு ஏற்ற உடல்வாகு   இல்லை.   முகவெட்டு,   ஸ்ட்ரக்சர்   எல்லாம்   நடிகை   கணக்கா இருந்தாதான் என்கிட்டே போணி ஆகும். ஏன்னா, நான் பெரிய பெரிய இடங்களுக்கு ஆளனுப்புறவன். உங்க மகளுக்குக் குடும்பப் பொண்ணோட தோற்றம். கிளாமர் பத்தாது'' என உதடு பிதுக்கினேன்.

 

auto sankar 2


"தம்பி... முடியாதுன்னு சொல்லீடாதீங்க தம்பி! ரெண்டு பேருக்கும் பிழைக்கிறதுக்கு வேற வழியே இல்லை...''

யோசித்தேன். ஐடியா பளிச்சிட்டது!

"சரி, வேலை தரேன். பெண்ணுக்கு இல்லை. உங்களுக்கு. இங்கேயிருக்கிற மற்ற பெண்களுக்குத் துணிமணி துவைச்சுப் போடுங்க. எடுபிடி வேலை செய்யுங்க. சம்பளம் தரேன். அதை வச்சுக்குடித்தனம் செய்யிங்க''

 

 

மாலை அந்தப்பெண் என்னைத் தனியா தேடிவரும் என எதிர்பார்க்கவேயில்லை. கண்களில் கரைகட்டிக்கொண்டு நீர் பெருகி ஓட, குரல் தழுதழுத்தது.. "ரொம்ப நன்றி சார்... நல்லவேளையா என்னை ரிஜக்ட் பண்ணினீங்க. என்னை மட்டும் விபச்சாரியா ஆக்கியிருந்தா தூக்குப்போட்டு செத்திருப்பேன். எனக்கு அதிலே இஷ்டம் கிடையாது. குடும்பம், குழந்தை குட்டின்னு இருக்கத்தான் எனக்கு இஷ்டம். ஆனா, நாலு வருஷமா என்னை எப்படியாவது இப்படி ஆக்கிடணும்னு அம்மா முயற்சி பண்ணுது! சதா சண்டைதான். தாயா இவ? தெரியாத்தனமா இவ கூட ஓடிவந்துட்டேன். நீங்க மறுத்ததாலே இனிமே வேற எங்கேயாவது என்னைத் தள்ள முயற்சி செய்யும் அம்மா... உங்களை கையெடுத்து கும்பிடுறேன். என்னைக் காப்பாத்துங்க சார்! உங்க வீட்டிலே ஒரு ஓரமா இடம் கொடுத்தா போதும். வேலைகளைக் கவனிச்சுக்கிட்டு நான் பாட்டுக்கு   இருந்துப்பேன்.   என்   கற்பு   கெடாம   நான்   இருக்கணும்... அவ்வளவுதான்!''

விக்கித்துப்போனேன். மனசுக்குள் உணர்ச்சிகள் கண்ணாமூச்சி ஆடிற்று. சுமதியை இரக்கம் பொங்கப்பார்த்தேன்.

"கவலையே படாதேம்மா... எப்பாடுபட்டாவது உன்னைக் காப்பாத்தறேன். உன் கற்புக்கு ஒரு சின்ன தீங்குகூட வராது... போதுமா?'' என்றேன் உறுதியுடன்.

 

 

"இங்கே உன்னை வச்சிருக்க முடியாது... என் வீட்டிலே வேலைக்குச் சேர்க்க முடியாது. என் ஒய்ஃப் சந்தேகப்படுவாள். ஏன்னா, நீ வயசுப்பொண்ணு.   வேணும்ன்னா உன் அம்மாவுக்குத் தெரியாமல் கோட்டூர்லே இருக்கிற என் அம்மா வீட்டுக்கு அனுப்பறேன். அவங்களுக்குத் துணையும் ஆகும். என்ன சொல்றே?''

சம்மதித்தாள். ஆனால் சுவற்றில் மோதின பந்தாக கோட்டூர் போன மறுநாளே திரும்பி வந்தாள். வந்தவள் நேராக ஆட்டோ ஸ்டாண்டு பக்கமாய்   இருந்த நம்ம சாராயக்கடைக்கே வந்து நின்று கண்ணைக் கசக்கினாள். "ஏய்.. என்ன ஆச்சு?'' என்றேன். அவள் நிமிர்ந்து சொன்னாள்...

"உங்க அம்மா என்னைச் சந்தேகப்படுறாங்க... உங்க வைப்பாட்டியாம் நான்! அடிச்சு துரத்திட்டாங்க'' -கண்ணைக் கசக்கினாள்.

 

sumathi auto sankarசரி.. எவ்வளவோ சம்பாதிக்கிறேன்.. எப்படி எல்லாமோ செலவு பண்றேன்.. உன் ஒருத்திக்குச் சோறு போடறதிலே ஒண்ணும் கஷ்டம் இல்லை. ஒரு அப்பாவிப் பெண் விபச்சாரி ஆகாம என்னாலே காப்பாற்றப்பட்டாளேன்னு சந்தோஷமாகூட இருக்குமேயென்று, மருந்தீஸ்வர்நகரில் வீடு பார்த்து சுமதியை கொண்டுபோய் அங்கே குடிவைத்தேன். சாப்பிடவும் உடுத்தவும் வசதிகள் செய்து தரப்பட்டது. கணிசமாய் பண்ட பாத்திரங்களும்!

ரெண்டு மூணு நாள் கழித்து மறுபடியும் "வீடு சௌகரியமாய்   இருக்கிறதா' என   அவளிடம் விசாரிப்பதற்காக சென்றபோது எனக்கு அதிர்ச்சி.

 

அடுத்த பகுதி:

ஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு! - ஆட்டோ சங்கர் #12​​​​​​​

முந்தைய பகுதி:

"எங்களை மனுஷங்ககிட்ட அனுப்புங்க அண்ணா..." - கதறிய விலைமாது! - ஆட்டோ சங்கர் #10 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...